புதுகை மு. தருமராசன், முத்துராஜூ- லட்சுமிகாந்தம் இணையரின் மகன். தற்போது சென்னையில் வசிக்கும் இவரைப் பலரும் அழைப்பது புதுகையார் என்றுதான். வங்கிப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுத்து, பேச்சு, கவிதை, பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக புதுகைத் தென்றல் மாத இதழை நடத்தி வருகிறார். இந்த இதழ் இடைநிற்றல் இல்லாமல் 236 ஆவது இதழைக் கண்டிருக்கிறது. மேனாள் அமைச்சர் இராம.வீரப்பன் தலைமையில் இயங்கும் சென்னைக் கம்பன் கழகத்தின் பொருளாளர். இவரது துணைவியார் பானுமதி தருமராசனும் எழுத்தாளரே. இருவரும் இலக்கிய இணையராக செயலாற்றுகிறார்கள்.
புதுகை மு. தருமராசன், பனிரெண்டு நூல்கள் எழுதியுள்ளார். இவரது நூல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் பெற்றுள்ளன. நயனுறு நடைச்சித்திரம் எனும் இந்நூல் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் குறித்து பேசுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அருளாளர் இராம.வீரப்பன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, புதுகைபி.வெங்கட்ராமன்,..ஆகியோர்களின் சாதனைகளைப் பதிவு செய்கிறது.
'பிரசிடெண்ட்' சி. ராமச்சந்திரன் எனும் கட்டுரை . முக்கியமானது. வல்லாத்திராக்கோட்டை ராமச்சந்திரன் குடும்பத்தை மேனாள் அமைச்சர் இராம. வீரப்பன் பிரசிடென்ட் குடும்பம் என்றே அழைப்பார். முப்பது ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக இருந்தவர் இவரது தந்தை. இவரைத் தொடர்ந்து ராமச்சந்திரன் 43 ஆண்டுகள் அப்பதவியில் இருந்துள்ளார். இப்பதவியில் மட்டுமின்றி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் பெரியார் வழியில் யாரையும் மரியாதையுடன் அழைக்கிறவர். கிராமத்தில் அனைத்து சாதி, சமூக மக்களும் அடுத்தடுத்துக் குடியிருக்கும் ஓர் குடியிருப்பினை கேர் காலனி என்ற பெயரில் உருவாக்கிய இவரது முயற்சி சமத்துவபுரம் தோன்றுவதற்கு முன்பே அவர் ஏற்படுத்திய சமுதாயப் புரட்சி என்கிறார்.மதுக்கடைகள் இல்லாத வல்லாத்திராக்கோட்டையை நிர்வகித்தவர். இலக்கியப் பணியில் ஈடுபாடு கொண்டுள்ள புதுகை கம்பன் கழகச் செயலாளர் திரு. சம்பத்குமார் இவரது மூத்தமகன். சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்து தற்போது உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றும் திரு.சுரேஷ்குமார் இவரது இளைய மகன்.
'சான்றாண்மைக்கு ஆழி' புதுகையார்! என முனைவர் இரா. மோகன் அவர்கள் புதுகை மு. தருமராசனைப் புகழாரம் சூட்டுகிறார். மதுரை மாநகரில் இயங்கி வரும் இலக்கிய இணையர் அறக்கட்டளை 2010 ஆம் ஆண்டு புதுகைத் தென்றல் இதழுக்குச் சிறந்த இலக்கிய இதழ் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் 2016 ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டை ஆளுமைகளை அடையாளம் கண்டு பதிவு செய்யும் இவரின் தொண்டு அளப்பரியது.
அண்டனூர் சுரா

கருத்துகள்
கருத்துரையிடுக