டாக்டர் முத்துலெட்சுமி
இயற்பெயர்
நா.முத்துலெட்சுமி. நாராயணசாமி ஐயர் – சந்திரம்மாள் தம்பதிகளின் மூத்த மகள். மருத்துவர் டி.சுந்தர ரெட்டியைத் திருமணம் செய்துகொண்டதால் முத்துலெட்சுமி ரெட்டி என அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை
திருக்கோகர்ணத்தில் பிறந்தவர். ஸ்திரி தருமம் எனும் பத்திரிக்கையின் ஆசிரியர்.
முதல் பெண் மருத்துவர். முதல் பெண் சட்ட மன்ற
உறுப்பினர். முதல் மேலவை துணைத் தலைவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர், இந்தியப்
பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படிப்பைத் தொடங்கி,
பல உயரங்களைத் தொட்டவர். புற்றுநோய்
ஒழிப்புக்காக அரும்பாடுபட்டவர். மேலும் பல்வேறு
துறைகளில் முதன்மையாகத் திகழ்ந்த இவர் எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் எழுதியுள்ள
நூல்கள் பன்னிரெண்டு.
1. கர்ப்பிணிப் பெண்ணின் பாதுகாப்பு
(Care of Pregnant woman )
2. கைக்குழந்தைகளின் உணவு முறை ( Infant Feeding)
3. இந்தியாவில் சிசு மரணம் (Infant Mortality in India)
4. சென்னையில் மாதர் சேவை (Women's
works in Madras)
5 இந்தியாவில் திருமதி மார்கரெட் கசின்ஸ் அம்மையாரின் பணிகள் ( Mrs.Margaret
Cousiones work in India)
6. என் சட்டமன்ற அனுபவங்கள் ( My
Exprience as a Legislator)
7. இந்தியப் பெண்களின் வாக்குரிமை (
Indian Women's Franchise)
8. குழந்தைகளின் பாதுகாப்பு (Care
of Children)
9. சிறுவயதுத் திருமணத்தின் கேடுகள்(
Evils of Child Marriage )
10 எதற்காக இந்து கோயில்களில் தேவதாசி
முறை ஒழிக்கப்பட வேண்டும் ( Why should Devadasi institution in Hindu temples be
abolished?)
11 புற்றுநோயும் அதை தடுக்கும் முறையும்(
Cancer and its prevention )
12.
சுயசரிதை.
இவரது
சுயசரிதை இவ்வாறு பேசுகிறது. தனிஅரசாக இருந்த புதுக்கோட்டையில் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட்
30 நாள் பிறந்தார். இவரின் தந்தையார் புதுக்கோட்டை மாமன்னர் கலை கல்லூரியில் முதல்வராக
பணிபுரிந்த நாராயணசாமி ஐயர். தாயார் இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த சந்திரம்மாள்.
இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள். முத்துலெட்சுமி தமது நான்காவது
வயதில் திண்ணை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்பட்டார்.
இவரது
நுண்ணறிவினையும் கல்வி கற்பதில் இவருக்கு இருந்த ஆர்வத்தையும் கண்டு ஆசிரியர்கள் வியந்தனர்.
ஆனால் இவரின் தாயார் தம் மகளுக்குப் பால் கணக்கு எழுதத் தெரிந்தால் போதும் என்று நினைத்தார்.
எனினும் முத்துலெட்சுமிக்கு இயல்பாகவே கல்வி கற்க வேண்டும் என்ற இந்த ஆர்வத்தைக் கண்ணுற்ற
ஆசிரியர்கள் இவருக்கு ஆங்கிலமும் கற்றுத் தந்தனர். ஆறாம் வகுப்பு படிக்கும் வரை இவரின்
தந்தைக்கு இது தெரியாது. குலபதி பாலையா கல்வி நிறுவனத்தில் பாலையா அவர்களிடமே கல்வி
பயின்று வந்தார். அவரது பரிந்துரையின் பேரில்தான்
அவர் தமது 13 வது வயது வரை பள்ளிக்குச் சென்று கல்வி கற்றார். அதற்கு மேல் கல்வி கற்க
இவரது பெற்றோர் மறுத்துவிட்டனர். வீட்டிலேயே தனி ஆசிரியரைக் கொண்டு 9 ,10 மற்றும்
11ஆம் வகுப்பு பாடங்களைக் கற்றார். பின்னர் 1902 ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷன் தெருவில்
அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சிபெற்றார். அந்த தேர்வை எழுதியவர்கள் 100 பேர். தேரியவர்கள்
10 பேர். அதில் ஒருவர் பெண்மணி முத்துலட்சுமி.
புதுக்கோட்டை
கல்லூரியில் பெண்களை அக்கால கட்டத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. மன்னர் கல்லூரியின்
முதல்வராகவும் கல்வித்துறை இயக்குனராகவும் அரசரின் ஆலோசகராக நாராயணசாமி ஐயர் இருந்ததால்,
மார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் உதவியை
நாடினார். மன்னர் பெண் கல்விக்கு எதிராக இருந்த குரல்களைத் தூக்கி எறிந்துவிட்டு முத்துலெட்சுமியின்
மேற்படிப்புக்கு அனுமதி அளித்தார். அவருக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. கல்லூரியில்
ஆடவருடன் சேர்ந்து அமர்ந்து கல்வி கற்க கூடாது. தனியே தரையில் அமர்ந்து கற்க வேண்டும்.
ஆனால் ஓரிரு வாரங்களிலேயே முத்துலெட்சுமி தமது கல்வித் திறத்தால் பேராசிரியர்களின் கவனத்தை
ஈர்த்தார். புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நுழைந்து முதல் பெண்மணி என்ற சாதனையைப்
படைத்தார். இவருடன் படித்தவர்களில் பின்னாளில் அரசியல்வாதியாகவும் மிகச் சிறந்த பேச்சாளராக
விளக்கிய சத்தியமூர்த்தியும் துணை நீதிபதியாக
விளங்கிய ராஜகோபாலன் குறிப்பிடத்தக்கவர்கள்.
கல்லூரியில் இன்டர்மீடியட் வகுப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார் முத்துலட்சுமி.
முத்துலெட்சுமியின்
தாயார் சந்திரம்மாள் நோய்வாய்ப்பட்டு அவதியுற்றார். அவரை கவனித்துக்கொள்ளும்போதுதான்
தான் மருத்துவராகிவிட்டால் நோயால் நலிவுற்ற குடும்பங்களைக் காப்பாற்ற இயலும் என்று
உறுதிகொண்டார். கல்லூரி படிப்பிற்கே மன்னரின் அனுமதி பெற வேண்டி இருந்தது. மருத்துவக்
கல்லூரியோ சென்னையில். பெண்களுக்கு மருத்துவக் கல்லூரியில் நுழைய அனுமதி இல்லை. பெண்கள்
தங்கி படிக்க ஏற்ற விடுதி வசதிகள் இல்லை. இந்நிலையில் முத்துலட்சுமி தந்தை நாராயணசாமியிடம்
கல்வி கற்ற மாணவர் மருத்துவர் சீனிவாசராவ்
ஒரு நாள் புதுக்கோட்டைக்கு வந்தார். அவர் மூலமாக மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்கான
விவரங்களை கேட்டறிந்தார். 1907ஆம் ஆண்டு மருத்துவர் சீனிவாசராவ் மூலமாக முத்துலட்சுமி
சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
மகளின்
படிப்பு செலவை நாராயணசாமி ஐயரால் சமாளிக்க முடியவில்லை. ஆகவே அவர் புதுக்கோட்டை மன்னரின்
உதவியை நாடினார் மன்னரும் மருத்துவ படிப்பிற்காக 180 பொற்காசுகளை உதவித்தொகை ஆண்டுதோறும்
வழங்குவதாக உறுதியளித்தார்.
அக்காலத்தில்
சென்னையில் மிகச்சிறந்த மருத்துவராகவும் அரசியல்வாதியாகவும் மருத்துவர் நஞ்சுண்டராவ்
திகழ்ந்தார். அவரது நட்பு இவருக்குக் கிட்டியது. முத்துலட்சுமியின் அறிவுத்திறத்தைப்
பாராட்டிய இவர் தமது இல்லத்தார்க்கும் அவரை அறிமுகம் செய்து வைத்தார். கலை இலக்கியத்திலும்
ஈடுபாடு உடைய மருத்துவர் நஞ்சுண்ட ராவ்
இல்லத்திற்கு மகாகவி பாரதியார் அடிக்கடி வருவதுண்டு. அவரைச் சந்திக்கும் வாய்ப்பையும்
பெற்றார் முத்துலெட்சுமி. பாரதியார் தமது பத்திரிக்கையான 'இந்தியா'விற்குக் கட்டுரை
எழுதுமாறு முத்துலட்சுமியிடம் கேட்டுக்கொண்டார். மேலும் கவிக்குயில் சரோஜினி தேவி,
அசலாம்பிகை கோகலே போன்றவரின் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார்.
கல்வியிலே கண்ணாக இருந்து மருத்துவக் கல்வியைச் சிறப்பாக முடித்தார். தங்கப் பதக்கங்களுடன்
நற்சான்றிதழ் பெற்று 1912 ஆம் ஆண்டு மருத்துவ பட்டப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
மருத்துவ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி என்கின்ற சிறப்பு இவருக்குண்டு.
இந்தியாவின்
பல்வேறு பகுதிகளில் இருந்தும் தங்களது மருத்துவமனைக்கு வந்து பணியாற்றும்படி அழைப்புகள்
குவிந்தன. ஆனால் முத்துலட்சுமி தாம் படித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கிஃபோர்டு
தலைமையில் இயங்கிய எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் ஓர் ஆண்டு காலம் பயிற்சி பெற்றார்.
பின்னர் புதுக்கோட்டை சென்று புதுகை மருத்துவமனையில் பணியாற்றினார். அக்கம் பக்கம்
உள்ள கிராமம் மக்களுக்கெல்லாம் மருத்துவ சேவை புரிந்தார். 1914 ஆம் ஆண்டு சென்னை திரும்பிய
அவர் சொந்தமாக மருத்துவமனை நிறுவி மருத்துவ சேவை செய்தார்.
1913
ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் விசாகப்பட்டினத்திலிருந்து மருத்துவர் டி.சுந்தர ரெட்டி எப்.ஆர். சி.எஸ் முத்துலட்சுமியின்
பெற்றோருக்கு பெண் கேட்டு கடிதம் எழுதினார். விசாகப்பட்டினத்தில் கிங்ஜார்ஜ் என்கிற பிரபலமான மருத்துவமனையில் பணிபுரிந்தவர் இவர். இரட்டை ஆட்சியின் போது சென்னை மாநில முதலமைச்சர் சுப்புராயலு ரெட்டியாரின் தங்கை மகன்.
முத்துலட்சுமிக்கு
அப்போது 26 வயது. தான் அவரைத் திருமணம் செய்துகொள்ளவதாக இருந்தால் சில நிபந்தனைகளை ஏற்க வேண்டுமென விதித்தார். ஆண்களுக்கு
நிகராக தன்னை மதிக்க வேண்டும். தனது உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள்
அவை. அந்த நிபந்தனை ஏற்றுக்கொள்ளப்படவே திருமணத்திற்கு இசைவு தெரிவித்தார்.
1926
ஆம் ஆண்டு பெண்களும் தேர்தலில் பங்கு பெறலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திய மாதர் சங்கம் முத்துலட்சுமி ரெட்டியை
சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கும்படி சென்னை மாநில ஆளுநரை கேட்டுக்கொண்டது. இதனை
ஏற்றுக் கொண்ட ஆளுநரும் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரைச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக
நியமனம் செய்தார். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய முதல் இந்திய பெண்மணி பெருமை இவரையே
சாரும். பின்னர் எந்தவித போட்டியுமின்றி சட்டமன்ற
மேலவை துணை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முத்துலெட்சுமியின்
தங்கை சுந்தராம்பாள் புற்று நோயால் இறந்தார்.
அவரது மரணம் இவரைப் பெரிதும் பாதித்தது. புற்றுநோயின் வதையை நேரில் கண்டதால் அந்நோயை
ஒழிப்பதற்கான நவீன மருத்துவமனை தொடங்க வேண்டும், என்று உறுதிகொண்டார். 1935 ஆம் ஆண்டு
சென்னை மருத்துவக் கல்லூரி நூற்றாண்டு விழாவில் தன் எண்ணத்தை முத்துலட்சுமி ஒரு தீர்மானமாக
நிறைவேற்றினார். தீர்மானம் நல்லோர் பல ஆதரவுகளைப் பெற்றது .புற்றுநோய்த் தடுப்புக்
கழகம் ஒன்றை ஏற்படுத்தி, ருக்மணி அருண்டேல்
தலைவராகவும் அவ்வை இல்லப் பள்ளிகளின் தலைமை ஆசிரியை சரஸ்வதி சீனிவாசன் அவர்கள் செயலாளராகவும் கொண்டு சென்னையில் இருந்த பல
பிரபல மருத்துவமனை அங்கத்தினர்களை இதில் உறுப்பினர்களாகச் சேர்த்தார். பல கூட்டங்கள்
நடத்தி புற்றுநோய் மருத்துவமனையின் அவசியத்தை எடுத்துரைத்தார். இந்த முயற்சியால் அரசாங்கம்
அடையாறு காந்தி நகரில் உள்ள கால்வாய்க்கரை இடத்தை கொடுத்து உதவியது.
1952
ஆம் ஆண்டு அக்டோபரில் அடையாற்றில் பிரதமர் ஜவஹர்லால்
நேரு புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இந்திய அரசு ஒரு லட்ச ரூபாய்
நன்கொடை வழங்கியது. சுகாதாரத் துறை தமது துறை
மூலமாக இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்தது. 1954 ஆம் ஆண்டு ஜூன் பதினெட்டாம் நாள்
முதல் இவ்மருத்துவமனை செயல்பட தொடங்கியது. ஒரு குடில் மருத்துவமனையாக இரண்டு மருத்துவ
அலுவலர்கள் ஒரு செவிலியர் மற்றும் தொழில் துறை வல்லுநர் என 12 படுக்கைகள் கொண்ட தொடங்கப்பட்ட
இந்த மருத்துவமனை இன்று ஆசியாவிலேயே புகழ்பெற்ற புற்றுநோய் ஆராய்ச்சி கழகமாக விளங்குகிறது. முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவர், சட்டமன்ற
உறுப்பினர் , மிகச் சிறந்த செயற்பாட்டாளராக திகழ்ந்த போதிலும் எழுத்துத் துறையிலும் உச்சம்
தொட்டுள்ளார் என்பது புதுக்கோட்டையின் பெருமை.

.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக