வைசி. கலைச்செல்வன், வைகறை கவிஞர் என அழைக்கப்படுகிறார். பாடகர், முற்போக்கு சிந்தனையாளர். தீவிர இடதுசாரி அரசியலில் பயணிக்கும் இவர் கந்தர்வகோட்டை தாலுகா குளத்தூர் நாயக்கர்பட்டியில் பிறந்தவர். பதினைந்து வயதில் இவர் எழுதிய ரத்தம் ஒரே நிறம் என்கிற சமூக நாடகம் மாவட்ட அளவிலான ஆதி திராவிடர் நல விடுதிகளின் ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றது. 1989 இல் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை படிக்கும்பொழுது ஓ..பாரதமே என்கிற கவிதை மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது.
சுதந்திர சோகம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. வைகரை பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் இந்நூலின் வடிவமைப்பு கரம்பக்குடி துரை ஆப்செட்,. நூலின் முகப்பு இரத்தம் தேய்ந்த காஷ்மீர் என்கிற நூலின் அட்டையின் உள்படம். கீழ்வெண்மணியில் தீக்கிரையான தியாகிகளுக்கும் ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காக சிறையில் போராடிய பிரிக்கால் தொழிற்சாலை தோழர்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் வெ.சேகர், கவிச்சுடர் கவிதைப்பித்தன், பழ. ஆசைத்தம்பி , அறிவொளி முருகேசன் ,கவிஞர் ம.விஜயன் சி.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். கந்தர்வகோட்டை பகுதி போராளிகள் தோழர்கள் லெனின், ராஜப்பா, குருமூர்த்தி , வேலு ஆசிரியர் போன்றோர் இந்நூலில் நினைவுகூரப்படுகிறார்கள்.
கலை முதலாவதாக ஒரு போராளி மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான், மாவோ வரிகளுக்கேற்ப இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் கறுப்புப் போராளிகளாக வெளிவந்துள்ளன. இத்தொகுப்பில் ஒரு கவிதை. தலைப்பு - ஹரிஜனங்கள்
காலை முதல்
அந்தி நல் மாலை வரை
மண்ணைப் பொன்னாகும்
மா மைந்தர்கள்...
ஒரு வித்தை ஓராயிரமாக மாற்றும்
அறிவியல் அறிஞர் அறியா இயந்திரங்கள்...
அரசன் முதல் ஆண்டிவரை
அயலோகம் போய்விட்டால்
கொட்டு முரசு கொட்டி நிற்கும்
கொட்டு முரசர்கள்!
பசியென யாரேனும்
பக்கத்தில் வந்துவிட்டால்
வாடிய முகம் கண்டு
வாடிப்போகும் வசதியற்றவர்கள்
காற்றில்லா போதும்
களத்து மேட்டில் கை முறத்தால்
காற்று வீசி
பதறு வேறு முத்துவேறாய் பாகம் பிரித்து
ஆண்டை வீடு அவை சேரும் வரை
சேர் கழுவா சித்திரங்கள்
சேரிச் சனங்கள்!
தானியங்கள் அனைத்தும்
தாழியில் நிரப்பிவிட்டு
ஆண்டை வீட்டில் அறுத்த நெல் கூலிக்காக அளவில்லா நேரம் வரை
அயராது காத்து நிற்கும்
அன்பர்கள் அரிஜனங்கள்...

கருத்துகள்
கருத்துரையிடுக