பொறிஞர் அகன் , தமிழரண் பாவாணர் மன்றம், சீனிவயல், கீரனூர். பொறியாளர்,ஆய்வாளர். நெஞ்சத் தவிப்பு என்ற நூல் மூலமாக அறிமுகமானவர். இதுதவிர மெய்மை, பாவலர் ஆவோம் ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.
நல்ல தமிழில் கதைகள் எழுதுகிறவர். இவரது உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் தமிழ்த் தேசிய ஓர்மை கதைகளாக வெளிவருகிறது. இவரது கதைகளில் திருவாளர்கள் பாவாணர், நெடுமாறன்,பிரபாகரன், திருமுருகன், தங்கப்பா, பறம்பை, அறிவன், தமிழாலயன் ஆகியோர் ரசிக்கும்படியாக உலா வருகிறார்கள்.
வடக்கே தலை வைத்துப்படுக்காதே என்பது முன்னோர் வாக்கு. வடக்கே இருந்து வரும் பகை வடுகப் பகை. அது தெலுங்கைக் குறிக்கும்.அதற்கும் வடக்கே இருந்து வருபவனைக் குறிக்கும். அவை நம்மைப் பொறுத்தவரை மொழிபெயர் தேயங்கள், என்கிறது இவரது முன்னுரை.
நெஞ்சத் தவிப்பு, முப்பது கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு.
'புலியூருக்கு அஞ்சி நரியூருக்குப் போனானாம். நரியூரும் புலியூராகி விட்டதாம்'; 'பார்ப்பானுக்கு மூத்த பறையன் கேட்பாரின்றி கீழ்சாதி ஆனான்', போன்ற சொல்லாடல்கள் கதைகளின் ஆழம் காட்டுகின்றன. தென்னல், ஒன்றாதல் கண்டே,போலி மாந்தர், புதை சோறு, மெய்ப்பாடு, கொல்லரசு போன்ற கதைகள் வாசிக்க விறுவிறுப்பானவை.
கொல்லரசு எனும் கதை கூடங்குளம் அணு உலை பற்றி பேசுகிறது. இக்கதையில் வரும் மக்கள்
தேனடைத் தேனீக்கள் போல ஒட்டிக்கொண்டிருந்தனர், என்கிற வரியைப் பெரிதும் ரசிக்க முடிகிறது. கூடங்குளம் அணுவுலையை ஒட்டிய ஓர் எரிமலை வெடித்து சீறுவதும் மக்கள் அலறடித்து தெறித்து ஓடுவதுமான கதை விறுவிறுப்பைக் கூட்டி, கதையின் முடிவால் திருப்பத்தைத் தருகிறது.
ஒரு நாளில் நிகழப்போகும் கொடிய நேர்ச்சியே இக்கதை.

கருத்துகள்
கருத்துரையிடுக