முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 124

கவிஞர் நந்தலாலா,  இயற்பெயர் - எஸ். நெடுஞ்செழியன். மகாகவி பாரதியார் மீதுள்ள கவிப்பற்றால் தன் பெயரை நந்தலாலா என மாற்றிக்கொண்டவர். பேச்சரங்கம், கவியரங்கம், பட்டிமன்றம், நடுவர், விவாதமேடை, நகைச்சுவை அரங்கம், முற்போக்கான உரை,... என எந்தவகை மேடைகளையும் தன்வசப்படுத்துகிறவர்.





குடைவரைக் கோவிலால் புகழ்பெற்ற குன்றாண்டார்கோவில் இவரது சொந்த ஊர். தற்போது திருச்சியில் வசிக்கிறார். இந்தியன் வங்கியில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். சமூகச் செயற்பாட்டாளர். சோலைக்குயில்கள் கவிதை இயக்கத்தையும் இதழையும் தொடங்கியவர்களில் ஒருவர். தமுஎகச மாநிலத் துணைத் தலைவர்.

திருச்சிராப்பள்ளி ஊறும் வரலாறு - திருச்சியில் காலூன்றி தமிழ்நாட்டைத் தழுவிய வரலாறு எனும் இந்நூல் ஆனந்த விகடனில் 34 வாரங்கள் வெளிவந்த தொடர்களின் தொகுப்பு.  திருச்சி மாவட்ட அனைத்துத்துறை வரலாறு. கோவில், ஆன்மீகம், அணைகள், அரசியல், எழுத்தாளர் , மதம், சமயம், பத்திரிகை , பெயர்க்காரணம் , காந்தி வருகை, ரயில் தடம், திராவிடம், கம்யூனிசம், ஆரியம் , என பல்துறைகளில் ஆராய்ந்து அலசி வாசிக்க சுவையாகவும் வரலாறாகவும் புதினமாகவும் ஆவணமாகவும் வரப்பெற்ற நூல்.  வாசிக்க வாசிக்க புதுப்புது தகவல்களுடன் புதினம் வாசிப்பதைப்போல வேகம் கூடுகிறது.இந்நூல் எழுதப்பட்ட அனுபவத்தை, விகடன் என்னை எழுதச் சொன்னது, ஆனால் திருச்சி தன் வரலாற்றைத் தானே எழுதிக்கொண்டது, என்கிறார்.

காந்தியின் திருச்சிராப்பள்ளி வருகை புதுக்கோட்டை சமஸ்தானத்துடன் தொடர்பு கொண்டது. திருச்சிராப்பள்ளிக்கு எளிதாக வருகைத் தந்த காந்தியால் புதுக்கோட்டை வழியே செட்டிநாட்டுக்கு அவரால் அத்தனை எளிதில் நுழைய முடியவில்லை.  புதுக்கோட்டைக்கு அவரது வருகையுடன் தொடர்புடைய கட்டுரை, காந்தி வந்தார், மாநகரின் வரலாற்றில் நிறைந்தார்! அக்கட்டுரையின் சாராம்சம் இது.

இந்திய தலைவர்களில் பயணத்தை தன் வாழ்வின் ஒரு பகுதியாக கொண்டு எல்லா திசைகளிலும் பயணித்தவர் காந்தி. அவர் மனம், நிலம் என்று பிரிந்துகிடந்த இந்தியாவை இணைத்ததில் அவரின் பயணத்துக்கு முக்கியப் பங்குண்டு. அவர் தமிழர்களை அதிகம் நேசித்தார்.

இப்படித் தமிழர்களை நேசித்த காந்தி திருச்சிக்கு ஆறு முறை பயணமாக வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாட்களில் திருச்சியில் 13 நாட்கள் அவர் தங்கி பயணித்துள்ளார். அண்ணலின் வரவே தங்கிய நாட்களை இன்றும் திருச்சி தன் நினைவுகளில் பதிந்து வைத்துள்ளது.

முதன் முதலில் அடிகளின் காலடி திருச்சியில் பட்டது 1919 செப்டம்பர் இல்.  நூறு ஆண்டுகள் முடிந்து போயின. நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். தில்லையாடி வள்ளியம்மையின் மனஉறுதியைக் குறிப்பிட்டு பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். ஹிந்து மெசேஜ் ஆசிரியர் டி.கே.பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.

அதன் பிறகு ஏறக்குறைய ஓர் ஆண்டு கழித்து அண்ணல் மீண்டும் திருச்சி வந்தார். 1920 ஆகஸ்ட் 17 இல் வந்த காந்தியடிகளைத் திருச்சி பாலக்கரையில் தொடங்கி பெரிய ஊர்வலமாக அழைத்து சென்றனர். மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சௌக்கில் நடந்தது. இன்றைய டவுன்ஹால் எதிரே உள்ள பழைய புத்தகக் கடைகளை ஒட்டியுள்ள பெரிய மைதானமே சௌவ். சௌவ் என்ற உறுதி சொல்லுக்கு மையம் என்று பொருள்.

அடுத்த ஆண்டு மூன்று நாள் பயணமாக 1921, செப்டம்பர் 18 அன்று வருவதாக முடிவு. காந்தியின் முழுமையான பயணத் திட்டத்தை டாக்டர் ராஜன் சுதேசமித்திரனில் செப்டம்பர் 13 இல் வெளியிட்டார் . அது வந்த அதே இதழில்தான் மகாகவி பாரதியின் மரண செய்தி கடைசி பக்கத்தில் வந்தது. காந்தியடிகளின் இந்தப் பயணத்தில் எங்குமே பாரதி குறித்து பேசவில்லை. பாரதியின் உயர்வை அன்றையத் தலைவர்கள் அண்ணலுக்குச் சொல்லாத விளைவே இது. இந்த பயணத்தின் போது தான் தமிழ்நாட்டின் வரலாற்றில் நிர்வாக ரீதியாக காந்தியை வரவேற்ற முதல் நகராட்சி என்னும் பெருமையைத் திருச்சி பெற்றது. அடுத்த நாள் 1921 செப்டம்பர் 19 பெரிய பொதுக்கூட்டமாக இரவு எட்டு மணிக்குத் தொடங்கி 11 மணிக்கு அண்ணலின் உரையோடு முடிந்தது. காந்தியடிகள் டாக்டர் டி.எஸ்.எஸ் ராஜன் வீட்டில் தங்கினார். அங்கிருந்துதான் வேதாரண்யம் உப்பு யாத்திரை ராஜாஜி தலைமையில் புறப்பட்டது. அந்த இல்லம் இப்போது ஆம்னி பேருந்து நிலையம் அருகே போஸ்டல் டெப்போவாக உள்ளது.

இந்தப் பயணத்தின் பொழுது ஒரு சுவையான நிகழ்ச்சி நடந்தது. திருச்சி பயணத்தை முடித்து அடிகள் புதுக்கோட்டை வழியாக செட்டிநாடு செல்ல வேண்டும். ஆனால் புதுக்கோட்டை திவான் காந்திக்கு நுழைவுத் தடை விதித்தார். அந்தத் தடை ஆணையை அடிகளுக்குத் தர ஒரு காவல் அதிகாரி நேரடியாக வந்தார். ஆணையைத் தந்த அவர் நடந்து கொண்டிருந்த சாப்பாட்டு பந்தியில் உட்கார்ந்தார். டாக்டர் டி.எஸ்.எஸ்க்குக் கடும் கோபம். சாப்பிடக்கூடாது என்று எழுந்து போக சொல்லிவிட்டார். செய்தி அண்ணலுக்குப் போனது. தன் கடமையைச் செய்ய வந்தவரையும் இப்படி நடத்தலாமா, அவர் சாப்பிட்டால் மட்டுமே நான் சாப்பிடுவேன் என்று உணவை மறுத்துவிட்டார். டாக்டருக்குப் பெரிய சங்கடமாகப் போய்விட்டது.  அந்த காவல் அதிகாரியை பிடித்து சாப்பிட வைத்தபிறகுதான் காந்தி சாப்பிட்டார்.

அடுத்த நாள் ஸ்ரீரங்கத்தில் வரவேற்பு, பனை ஓலையில் பொன் எழுத்துகளான வாழ்த்து மடலை ஆங்கிலத்தில் கொடுத்தார்கள். அடிகள் அதன் அழகை ரசித்தார் . இவ்வளவு அழகானதை உங்கள் தமிழில் தந்திருக்கலாமே என்றார். வழக்கம் போல பெண்களைச் சந்தித்தார். அவர்களை நம் நாட்டு துணிகளை அணியுங்கள் என்றார். இப்படி அண்ணலில் இந்த மூன்றால் பயணம் திருச்சி மக்கள் மனங்களில் அதிர்வலையை உண்டாக்கியது.

அடுத்து ஆறு ஆண்டுகள் திருச்சி மக்கள் காத்திருக்க வேண்டியது காந்தியடிகளை தரிசிக்க. அந்த நாளும் வந்தது. 1927 செப்டம்பர் 17 காலை திருச்சி வந்தார். அன்னை கஸ்தூரிபா உடன் வந்திருந்தார். இன்று இடமாற்ற சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ள காந்தி மார்க்கெட் அக்காலத்தில் வார சந்தையாக இருந்தது. அந்த இடத்திலேயே ஒரு மார்க்கெட் நகராட்சி கட்டியது. அதற்குக் காந்தி மார்க்கெட் எனப் பெயர் வைத்தனர். தன் பெயரில் அமைந்த ஒரு சந்தைக்கு காந்தியடிகளே அடிக்கல் நட்டார் . அன்று மதியமே பொன்மலையில் உள்ள சங்கத்திடலில் ரயில்வே தொழிலாளர்களின் சங்க கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். அனேகமாக அவர் நட்ட தொழிற்சங்க கட்டட அடிக்கல் இதுவாகத்தானிருக்கும். அன்று மாலை லால்குடியில் பொதுக்கூட்டம். கொள்ளிடம் பாலம் பொழுதாகி இருந்ததால் ஆற்றை கடக்க மாட்டு வண்டி வந்தது. அடிகளோ ஆற்று மணலில் நடந்தே கடந்தார்.

அதற்கும் அடுத்த நாள் தேசிய கல்லூரியில் கூடியிருந்த திருச்சி நகர மாணவர்களைச் சந்தித்தார். பிறகு புத்தூர் ஒய் எம் சி ஏ அரங்கில் கிறிஸ்துவ மக்களைச் சந்தித்தார். மதப்பற்றும் நாட்டுப்பற்றும் இணைந்து இருக்க வேண்டும், என்றார். அன்று நடக்க வேண்டிய பொதுக்கூட்டம் கனமழையால் ரத்தாகி அடுத்த நாள் காலையில் நடந்தது. கதரின் அவசியம் பற்றி பேசிய அடிகள் மலஜலம் கழித்து காவிரியை மக்கள் அசுத்தப்படுத்துவதை வன்மையாகக் கண்டித்தார். சுத்தத்தின் மேன்மையை வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் தான் நகர சபை தலைவர் ரத்தினவேல் தேவர் மூன்று  கல் பதித்த விலை உயர்ந்த மோதிரத்தைக் கதர்நிதிக்காகத் தந்தார்.

அதன்பிறகு காந்தியடிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பின் 1934 பிப்ரவரி 10ஆம் தேதி சோழவந்தானிலிருந்து அதிகாலை திருச்சிக்கு வந்து சேர்ந்தார். வழக்கம் போல பெருங்கூட்டம். இந்தக் கூட்டத்தில் "காந்தியே திரும்பிப் போ" என்று சனாதன கும்பல் முழக்கமிட்டார்கள். கையில் கருப்புக்கொடி வைத்திருந்த சிறுவர்கள் "மகாத்மா காந்திக்கு ஜே" என்று தன்னையும் அறியாமல் வரவேற்றதைக் காந்தி பெரிதும் ரசித்தார்.

காந்தி கடைசியாக 1946 பிப்ரவரி 2ஆம் தேதி வருகை தந்தார். இந்திய விடுதலைப் போரில் காந்தியடிகள் அடைந்திருந்த செல்வாக்கை காட்டுவது போல திருச்சி ரயில் நிலையத்தில் மட்டும் 2 லட்சம் பேர் கூடியிருந்தார்கள். இன்றும் திருச்சி காந்தி வருகை தந்த நினைவுகளைப் பத்திரமாக பொதிந்து வைத்துள்ளது. ஆட்சி மாற்ற அரசியலை தாண்டியும் மக்களிடம் பேசினார். அதுதான் அண்ணலைத் தலைவர் என்ற இடத்திலிருந்து தேசத்தந்தையாக உயர்த்தியது. இந்தத் தேசத்தந்தை என்னும் அடையாளத்தை உலகத்துக்கே காட்டு ஒரு இடமாக திருச்சி இருந்ததே அதன் பெருமை.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...