புதுக்கோட்டை எழுத்தாளர் -130
கவிஞர் பாலா. இயற்பெயர் இரா. பாலச்சந்திரன். பேராசிரியர், கவிஞர், இதழாசிரியர், திறனாய்வாளர். சிவகங்கை மாவட்டத்தில் பிறந்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றுகையில் புதுக்கோட்டையைத் தன் வாழ்விடமாக அமைத்துக்கொண்டவர்.சாகித்ய அகாடமி தமிழ் மொழிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். இவரது ஐந்தாண்டு 2002- 2006 காலத்தில்தான் சிற்பி பாலசுப்பிரமணியன், கவிஞர் மு. மேத்தா, கவிப்பேரரசு வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், திலகவதி ஐ.பி.எஸ் போன்றவர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்றார்கள். சாகித்ய விருதை மக்கள் இலக்கியத்தின்பால் திருப்பியப் பெருமை இவருக்குண்டு.
"புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை" எனும் இந்நூல் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றுகையில் எழுதியது. புதுக்கவிதைகளின் மீதான புதுப்பார்வை குறித்த கட்டுரைகள் இவை. இதுதவிர சர்ரியலிசம், கவிதைப் பக்கம், தமிழ் இலக்கிய விமர்சகர்கள், முன்னுரையும் பின்னுரையும்,பாரதியும் கீட்ஸூம் ஆகிய நூல்களையும் படைத்துள்ளார். வானம்பாடி கவிஞர்களில் ஒருவரான இவர் அதிலிருந்து பிரிந்து மீரா நடத்திய அன்னம் இதழில் ஆசிரியராக இருந்தார். பிறகு 'சுவடு' என்கிற இலக்கிய இதழ் தொடங்கி இலக்கிய விமர்சனங்களை இலக்கிய படைப்புகளாக்கினார். இவரது திண்ணைகளும் வரவேற்பறைகளும் என்கிற நூல் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்றது. இன்னொரு மனிதர்கள் என்கிற நூல் சிற்பி இலக்கிய விருது பெற்றது. புதுக்கவிதை விவாதம் (கவிஞர் மீராவுடன் ஒர் உரையாடல் ) என்கிற நூல் ஆனந்த விகடன்’ இணைப்பாக வெளிவந்தது. இதுதவிர மொழிபெயர்ப்புகளும் செய்துள்ளார்.
புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை எனும் இந்நூல் கடந்த ஐம்பது ஆண்டுகாலத் தமிழ்க் கவிதைப் போக்கையும் இன்றைய புதுக்கவிதை நோக்கையும் அழுத்தமாக விமர்சனம் செய்கிறது. புதுக்கவிதைகளின் இன்றைய அமோக விளைச்சலில் கவிதை எது என்பதை நுட்பமாக வெளிக்காட்டுகிறது புதுக்கவிதையை மட்டுமல்ல சிறந்த புது கவிஞர்களையும் இந்நூல் அடையாளம் காட்டுகிறது.
கவிதையின் கருவும் உருவும் பற்றிய விளக்கமும் மரபும் மாற்றமும் பற்றிய ஆய்வும், படிமம் குறியீடு இருண்மை போன்ற புதுக்கவிதையின் வெளியீட்டு முறைகள் பற்றிய விமர்சனமும் இங்கு விவாதப் பொருளாகியிருக்கின்றன. இன்றைய புதுக்கவிஞர்களை விமர்சிப்பதுடன் அமெரிக்க ஐரோப்பிய கவிதைப் போக்கும் அங்கங்கே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. தமிழ்க் கவிதை விமர்சனத்தில் இந்நூல் ஒரு மைல்கல்.
காலமும் களமும், மரபும் மாற்றமும், செய்யுள் வசனம் கவிதை, பாரதிக்குப் பின் நேர்ந்த தேக்கம், புதுக்கவிதை - ஒரு புதுப்பார்வை, புதுக்கவிதை - வெளியீட்டுப் புதுமை, எதிர்கால நம்பிக்கைகள், ஒரு மறு பார்வையில் ஆகிய தலைப்புகளை பொருளடக்கமாக கொண்டுள்ளது.
"நான்தான் இந்த பூமியின் கடைசிக் கவிஞனாக இருக்கலாம்", என்று எழுதிய மாயகாவ்ஸ்கி என்கிற கவிஞரின் வரிகளில் தொடங்கும் இந்நூல் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் கவிதை எழுதிய திருவாளர் சண்முகசுந்தரம், 'எழுபதில் கலை இலக்கியம் ' என்ற நூலில், பாலாவின் கவிதைப் பார்வை சிவகங்கைச் சீமையைத் தாண்டவில்லை, என்றார். அவர் கூற்றின் பொய்மையை இந்த நூலின் பக்கங்களை மேலோட்டமாகப் புரட்டியவர்கள் கூட உணர்வார்கள். எனவே அதுபற்றி இங்கு விஸ்தாரமாகக் குறிப்பிட வேண்டிய தேவை இல்லை, என்கிற வரியுடன் முடிகிறது.
இன்று புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் புதுக்கவிதைக்கான இடம், தேவை, அங்கீகாரம் அதுவாகவே கிடைத்துவிடவில்லை. மரபுக் கவிஞர்கள், புலவர்களுடனான நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகான இடம் இது என்பதை உணர்ந்துகொள்ளவேணும் இந்நூல் வாசிக்கப்பட வேண்டும்.
"வாய்களே! எந்த இலக்கணப் புலவனும் சட்டமியற்ற முடியாத புதிய மொழியை மனிதன் தேடிக்கொண்டிருக்கிறான்", ஒரு பிரெஞ்சு கவிஞனின் வரியைப் பாலா ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். புதுக்கவிதை எழுதும் கவிஞர்கள் மனதில் தைத்துக்கொள்ள வேண்டிய வரி இது.
கவிஞர் பாலா, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் ஆங்கில பேராசிரியராகப் பணியாற்றுகையில் அவரிடம் படித்த மாணவர்களில் ஒருவர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள். அவர் கரோனா காலத்தில் தொகுத்து வெளியிட்ட "100 கவிஞர்கள் 100 கவிதைகள்" நூலில் முதல் கவிஞராக, கவிதையாக பாலாவை இடம் பெறச் செய்து பெருமைப்படுத்தியுள்ளார். அக்கவிதை இது.
வணக்கம் என்பார்
வணங்க மாட்டார்
நலம் பார்த்தறியார்
நலம் என்றெழுதுவார்
பொதுவான பொய்களில்
பொலிகிறது வாழ்க்கை.
- பாலா.
.jpeg)
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக