புதுக்கோட்டை எழுத்தாளர் - 133
சு.கிருஷ்ணமூர்த்தி , பிறப்பு - அன்னவாசல், புதுக்கோட்டை. சிறுகதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், சாகித்ய அகாடமி விருதாளர், சென்னை, கல்கத்தா, டெல்லி எனப் பெருநகரங்களில் தணிக்கைத்துறை அதிகாரியாக பணியாற்றியவர்.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பு முடித்து, நாக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழ்,சமஸ்கிருதம், இந்தி, வங்காளம், செருமானிய மொழிகளில் தேர்ந்தவர். சென்னையில் ஒன்றிய அரசின் கீழ் தணிக்கைத்துறை அதிகாரியாக பணியாற்றி கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டார். அப்போது வங்காளம் மொழியைக் கற்றுக்கொண்டவர் தமிழ்ப் படைப்புகளை வங்காள மொழிக்கும் வங்கப் படைப்புகளைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார். வங்காள மொழியிலிருந்து 36 நூல்களைத் தமிழுக்குக் கொடுத்துள்ளார். இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் நாவலை தமிழிலிருந்து வங்காள மொழிக்கு ரக்த போன்யா என்கிற பெயரில் மொழியாக்கம் செய்து, அதற்காக வங்காள மொழிப்பிரிவில் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இதுதவிர சிலப்பதிகாரம் காப்பியத்தை ஆங்கிலத்திலும் திருக்குறளை வங்க மொழியிலும் மொழியாக்கம் செய்துள்ளார்.
நன்றிக்கு என்ன விலை,
மனிதம்,
நஜ்ருல் என்றொரு மானிடன் இவரது தமிழ்ப் படைப்புகள் .
நான் கடந்துவந்த பாதை , இவரது வாழ்க்கைத் தடங்களைப் பேசும் சுயசரிதை நூல். இலக்கியத்தில் மொழிபெயர்ப்பில் உச்சம் தொட்ட இவரின் வாழ்க்கை பாலர் பருவத்தில் சோகமும் ஏமாற்றமும் கொண்டதாக இருக்கிறது. வாழ்வின் போக்கை மடைமாற்றியது மொழிபெயர்ப்புகள்தான், என்கிறார். இவரது சுயசரிதையின் தொடக்கத்தில்,
இயன்ற அளவு பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் பெயர்ந்துள்ளேன். தமிழிலக்கியத்தையும் பிறமொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ளேன்.'' என்கிறார்.
இன்னொரு இடத்தில் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் எந்தவொரு லாபகரமும் இல்லை என்றாலும் அதை நான் விரும்பி செய்து முடித்தேன், என்கிறார்.
மொழிபெயர்ப்புகள் வாசிக்கப்படும்பொழுது மூல எழுத்தாளர் மீது தவறான புரிதலோ கோபமோ வராதளவிற்கு மொழியாக்கம் செய்யப்பட வேண்டும், என்கிறார்.
எழுத்தாளனின் உழைப்புகளைச் சுரண்டி அவருக்கு சன்மானமோ, உழைப்பூதியமோ கொடுக்காத பத்திரிகை, பதிப்பகங்கள் மீதும் கோபம் கொள்கிறார். இதனால் பல நட்புகள் முறிந்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.
இலக்கியத்தில் வங்காள மொழி படைப்புகளுக்கென்று தனித்த இடம் உண்டு. வங்கமொழி நாவல் வரிசைகளில் "நீலகண்ட பறவையைத் தேடி" நாவல் தனித்துவமான இடத்தைப் பெற்றுக்கொண்டது. இந்நாவலின் ஆசிரியர், "அதீன் பந்த்யோபாத்யாய". நீலகண்ட பறவை என்பது ஒரு குறியீடு. இப்பறவை பூமியில் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தாலும் மிக உயரத்தில் பறக்கக் கூடிய பறவை. அதீன் மொழியில் சொல்வதாக இருந்தால் சுவர்க்கம், பூமி இரண்டுக்கும் இடையில் பறக்கக் கூடிய பறவை. பூமியிலிருந்து பார்க்கும் யாருக்கும் அப்பறவை நட்சத்திரக் கூட்டங்களுக்குள் உலாவுவதைப் போலவும் நட்சத்திரங்களைத் தின்று செரிப்பதைப் போலவும் தெரியும். அப்படியான உயர்வான இடத்தில் வசிக்கும் ஒருவர் பூமியில் சக மனிதனாகச் சேரியில், புழுதியில், ஏழையோடு வாழ்ந்து கழிக்கும் மனிதராக இருக்கிறார். இந்து, முஸ்லீம் மதத்தவர் பிற மதத்தை விடவும் தன் மதம் மேம்பட்டதாகக் காட்டிக்கொள்ளவும் தன்னை மற்ற மதத்தினரை விடவும் மேலானவர் எனக் உயர்த்திக்கொள்ளவும் முயற்சிக்கும் மனிதச் சமூகத்தில் ஒருவர் சக மனிதனை மனிதனாகத் தன்னுள் ஒருவனாக மதித்து வாழும் ஒரு கதாப்பாத்திரத்தை மையப் பாத்திரமாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல், "நீலகண்ட பறவையைத் தேடி".

பதினெட்டு சிறுகதைகள் எழுதி அதை ஒரு நாவலுக்குள் அடக்கி, அதை செப்பனிட்டு பெரிய நாவலாக படைத்துள்ளார் அதீன் பந்த்யோபாத்யாய. இந்த நாவலை வங்காள மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.
இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல் நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது. இந்த நாவலை வங்காள மொழிக்கு ரக்த போன்யா, பெயரில் மொழியாக்கம் செய்தார். இந்நூல் வங்காள மொழிப் பிரிவில் சாகித்ய அகாதமி விருது பெற்றது. மேலும் இவரது சுயசரிதை நூலான "நான் கடந்துவந்த பாதை" திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது பெற்றது.
வங்காள மொழிப் படைப்புகளைத் தமிழுக்கு அதிகம் கொண்டுவந்து சேர்த்த பெருமை இவரையே சாரும். 2014 ஆம் ஆண்டு இவர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இவரது படைப்புகள் புதுக்கோட்டை மண்ணில் வேர்ப்பற்றி உலகளாவி வாழும்.

கருத்துகள்
கருத்துரையிடுக