ஆர்.எம்.வீரப்பன். இராம. வீரப்பன். திரைத்துறை, அரசியல், ஆன்மீகம், சமுதாயப்பணி, இலக்கியம் என பல்துறைகளில் சாதனை புரிந்தவர். மேனாள் அமைச்சர். உணவுத்துறை, செய்தித்துறை, சுற்றுலாத் துறை, அறநிலையத் துறைகளின் அமைச்சராக இருந்தவர். எம்.ஜி.ஆர் கழகம், கம்பன் கழகம் நிறுவனர். நாடகக் கலைஞர். திரைப்படத் தயாரிப்பாளர். எம்.ஜி.ஆர் பிச்சர்ஸ் நிர்வாகி. சத்யா மூவிஸ் நிறுவனத்தின் முதலாளி. தஞ்சைப் பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்கள் உருவாக காரணமாக இருந்த தமிழ்நாடு மாநில உயர்க் கல்விக் கழகம் என்ற அமைப்பு இவர் கல்வி அமைச்சராக இருக்கையில் உருவாக்கப்பட்டது. எழுத்து சீர்த்திருத்தம் இவர் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவரது ஊர் வல்லத்திராக்கோட்டை. தற்போது சென்னையில் வசித்தபடி மக்கட்பணியாற்றுகிறார்.
எம்.ஜி.ஆர் யார் ?
கயல் தினகரன் ஆர்.எம். வீரப்பனின் நண்பர். இவர் மறவன் மடல் பத்திரிகையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். இவர் வீரப்பனின் பிறப்பு, வளர்ப்பு , திரைப்படத்துறை அனுபவங்கள் குறித்து ரிக்ஷாக்காரன் (1971) திரைப்படம் எடுத்தது வரைக்குமான அனுபவங்களை தொகுத்து வெளியிட்டு வந்தார். பிறகு 1996 ஆம் ஆண்டு இவரது வாழ்வைத் தொடராக எழுதக் ‘குமுதம்’ இதழ் கேட்டுக்கொண்டது. கேட்டவர் இதழின் பொறுப்பாசிரியராக இருந்த மாலன் அவர்கள்.
இதழ் கேட்டுக்கொண்டதற்கிணங்க 1997 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 29 வாரங்கள் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல் எம்.ஜி.ஆர் யார்?
“ஆர்.எம்.வீ ஒரு தொண்டர்“.
இக்கட்டுரை இரு நூல்களின் சாராம்சம்.
புரட்சித்தலைவருடன் நான் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிறப்பையும் பெருமையையும் வெளிக்கொணர்வதில் நான் ஆற்றிய பணிகளை வெளிப்படுத்தும் நூல் இது, என்கிறார். அவர் தமிழகத்திற்கு ஒரு தங்கமாக கிடைத்தார். அதை மிளிர தீட்டுகிற தொழிலாளியாக நான் இருந்திருக்கிறேன். அவர் வைரமாக விளைந்தார். அதற்குப் பட்டைத் தீட்டியவனாக நான் வாழ்ந்திருக்கிறேன். அப்படிப்பட்ட வைரத்தோடு தங்கத்தோடு என்னுடைய இணைப்பைக் காலம் ஏற்படுத்தியது. அதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் காரணமாக இருந்தார்கள், எனக் குறிப்பிடுகிறார். ஆர்.எம்.வீயின் வாழ்வை நான்கு கட்டங்களாக பிரிக்கலாம்.
1. பிறந்தது முதல் பதின்மூன்றாவது வயது
வரையிலான வளர்க்கப்பட்ட காலம்
2. பதின்மூன்று வயதிலிருந்து டி.கே.எஸ்.சகோதரர்கள்
நாடகக் குழு, திராவிடர் கழக முழு நேரத் தொண்டு, டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடகக் குழு,
பேரறிஞர் அண்ணாவின் அரவணைப்பு
3.1953 முதல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் 1987 டிசம்பர் வரை அவரோட இருந்த காலம்
4. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிந்தைய காலம்
பதின்மூன்று
வயதிற்குள் அனுமார் ஒத்த குரங்கு வேடம், மன்னரின் படையாள், நாரதர், வள்ளித்திருமண முருகன் வேடங்களில் நடித்திருக்கிறார். இதன் மூலமாக டி.கே.ஷண்முகம்
நாடகக் குழுவில் இணைந்தார். பிறகு நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ண நாடக
சபாவில் சேர்ந்தார்.
மதுரை
தமுக்கம் மைதானத்தில் மதுரை முத்து எம்.ஜி.ஆரின் நாடகத்தை நிகழ்த்தினார் . அந்த நாடகத்தைத்
தொடங்கி வைக்க அண்ணா, என்.எஸ்.கே, எம்.ஜி.ஆர் எனப் பலரும் வருகைத் தந்தார்கள். அவர்களைக் கொண்டு திருப்பரங்குன்றத்தில்
ராஜம்மாள் என்கிற உறவுக்காரப் பெண்ணை மணந்தார்.
1963
ஆம் ஆண்டு அக்டோபர் , விஜயதசமி அன்று அவரது வீட்டில் சத்யா மூவிஸ் நிறுவனத்தைத் தொடங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் குத்துவிளக்கு ஏற்றி
இந்த நிறுவனத்தைத் தொடங்கி வைத்தார். சத்யா என்பது எம்.ஜி.ஆரின் தாயார் பெயர். பிறகு
இப்பெயர் நெப்டியூன் ஸ்டுடியோஸ், சத்யா ஸ்டுடியோஸ் என பெயர் மாற்றம் பெற்றது. இவர்
தயாரித்த முதல் திரைப்படம் தெய்வத்தாய். இதனைத் தொடர்ந்து நான் ஆணையிட்டால், காவல்காரன் படங்களைத் தயாரித்தார்.
1962
தேர்தல். அண்ணாவிற்குப் பிரச்சாரம் செய்கிறார் எம்.ஜி.ஆர். இவருக்குப் பக்கத்துணையாக
இருந்தவர் வீரப்பன்.
தேர்தலில் அண்ணா தோல்வியடைய, இந்தத் தோல்வியை முன்பே கணித்துவிட்டவர் எம்.ஜி.ஆர். ஆனாலும்
ஐம்பது இடங்களில் திமுக வென்றது. 1967 தேர்தலில் திமுக ஆளும் கட்சியானது. எம்.ஜி.ஆர்
இவரை அழைக்கையில் ன் போடாமல் வீரப்பா என்றே அழைப்பார். பிறகு முதலாளி என அழைத்து மகிழ்ந்தார்.
1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதி வேட்பாளராக எம்.ஜி.ஆர் அறிவிக்கப்பட்டார். தேர்தல்
பணிக்காலத்தில் எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். சுடப்பட்டதற்கான காரணத்தை
இவ்வாறு குறிப்பிடுகிறார் ஆர்.எம்.வீ.
1967
ஜனவரி முதல் இரண்டாம் தேதிகளில் விருகம்பாக்கத்தில் திமுக சிறப்பு மாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டில் ராஜாஜி, காயிதே மில்லத், ம.பொ.சி, கம்யூனிஸ்ட் தலைவர்கள், பார்வர்ட்
பிளாக் கட்சிகள் எல்லாம் அணிவகுத்து இருந்தார்கள். அதை மாநாட்டில் பேசும் பொழுது,
"எம்.ஜி.ஆர் தேர்தல் நிதிக்காக என் சொந்த
பங்காக ஒரு லட்ச ரூபாய் தருகிறேன், என்று அறிவித்தார். அதன் பின்பு பேசிய பேரறிஞர்
அண்ணா, "எம்.ஜி.ஆர் பணம் என்னுடைய பணம் போல. அது எங்கேயும் போகாது. வேண்டும்போது
எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்வேன். ஆனால் எம்.ஜி.ஆரிடம் நான் இப்போது ஒன்று
கேட்க விரும்புகிறேன். அவர் எனக்கு 30 நாட்கள் கால்சீட் தர வேண்டும். ஒரு மாதக் காலம்
அவர் தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் .அவர் முகம் காட்டினால் 30 ஆயிரம்
வாக்குகள் கழகத்திற்கு கிடைக்கும்”, என்று பேசுகிறார். அந்த வார்த்தைகளுக்கு அமோக கைதட்டில்
கிடைக்கிறது. இது முடிந்து எட்டாம் தேதி, ஒரு நிகழ்ச்சியில் பெரியார் திடலில் தந்தை
பெரியார் அவர்கள், பச்சைத் தமிழரின் ஆட்சி
கவிழ்க்க அண்ணாதுரை, எம்ஜிஆர் ,ராஜாஜி போன்றவர்கள் திட்டமிடுகிறார்கள் என காட்டுமாக
பேசுகிறார். எம்.ஆர்.ராதா அவர்களும் தனக்கு உரிய பணியில் இவர்களை வசைபாடுகிறார். இதன்பிறகுதான்
பன்னிரண்டாம் தேதி மாலையில் எம்.ஆர்.ராதாவால் ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆர் சுடப்படுகிறார்.
எனவே இந்த தாக்குதலுக்கு ஓர் அரசியல் கோபம் இருந்தது என்பது அன்றும் இன்றும் என்னுடைய
தீர்க்கமான கருத்து,என்கிறார் ஆர்.எம்.வீ.
இந்தத்
தேர்தலில் எம்.ஜி.ஆருக்குத் தேர்தல் பணியாற்றுகிறார் ஆர்.எம்.வீ. எம்.ஜி.ஆர் கழுத்தில்
கட்டுடன் சுவரொட்டி ஒட்டப்படுகிறது. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ரகுபதியை
விடவும் இருபத்து ஏழாயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் எம்.ஜி.ஆர்.
துப்பாக்கிச்சூடு விபத்திற்குப் பிறகு அவர் நடித்த முதல் காட்சி, ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’.
1967
தேர்தல் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைப் புரட்டி போட்டது. நீண்ட கால
காங்கிரஸ் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது இந்த தேர்தலில் தான். இந்த தேதியில் வெற்றி
குறித்து நினைவுகூர்கையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சும் வலுவான கூட்டணி ஒன்றை
அமைத்த அவரது யுக்தியும் தேர்தல் வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தன. தேர்தல் நிதி
சேர்க்க முடியுமா என்று அண்ணா அவர்களே தயங்கின நேரத்தில், 11 லட்சம் ரூபாய் நிதி சேர்த்து பிரச்சாரத்திற்கு வலிமை சேர்த்த கலைஞர்
அவர்களின் அயராத உழைப்பும் பேச்சும் முக்கிய காரணமாக அமைந்தன என்பதும் இருவேறு கருத்துகளுக்கு
இடமில்லாத உண்மைகள், என்கிறார் ஆர்.எம்.வீ.
அதேபோல
எம்.ஜி.ஆர் அவர்கள் பிரச்சாரத்திற்குப் போக முடியாத நிலையில் அவர் மருத்துவமனையில்
கழுத்தில் கட்டுடன் இருப்பது போன்ற சுவரொட்டி அந்தத் தேர்வு வெற்றிக்கு உறுதுணையாக
இருந்தது. இதற்கிடையில் ஆர்.எம்.வீ தயாரித்த காவல்காரன் திரைப்படம் தமிழ்நாடு அரசின்
சிறந்தத் திரைப்படம் படம் என்கிற விருது பெற்றது.
இந்த விருதை வழங்கியவர் ஆளுநர் ‘உஜ்ஜல் சிங்’. எம்.ஜி.ஆரை வைத்து ஆர்.எம்.வீரப்பன்
தயாரித்த மொத்தப் படங்கள் ஆறு. தெய்வத்தாய்,
நான் ஆணையிட்டால், காவல்காரன், கண்ணன் என் காதலன், ரிக்ஷாகாரன், இதயக்கனி. ரிக்ஷாக்காரன்
திரைப்படம் எடுக்கையில் பேரறிஞர் அண்ணா இறந்துவிட, அடுத்தத் தலைவர் யார் என்கிற போட்டி
எழுகிறது.
கலைஞர்
கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன் இருவருக்கிடையேயான போட்டியில் எம்ஜிஆர் என்ன கருதுகிறார்
என்கிற கருத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. கருணாநிதி அவர்கள் தான் வர வேண்டும்
என்று பலர் விரும்பினாலும் மூத்த தலைவர் என்ற முறையில் நெடுஞ்செழியன் அவர்களுக்கு முதல்வர்
நாற்காலியின் மீது உரிமை இருப்பதையும் சிலர் மறுக்கவில்லை. ஆர்.எம்.வியின் முயற்சிகள்
எம்.ஜி.ஆரை ஒரு முடிவுக்கு வர உதவியதுடன் அமைச்சர் நாவலர் கட்சியின் மூத்த தலைவர் என்பதால்
அவரது எதிர்ப்பு தவறு இல்லை, என்கிற எண்ணம் ஒரு புறம். அதே சமயம் கட்சியைக் கட்டுக்கோப்பாக
நடத்தி செல்லும் திறமை படைத்தவர் கலைஞர் தான் என்ற எண்ணம் இன்னொரு புறம். இந்த நிலையில்
கலைஞர்தான் முதல்வராக வரவேண்டும் என்று எம்.ஜி.ஆரிடம் ஆரம்பம் முதலே ஒரு கருத்தை மெல்ல
உருவாக்கிக் கொண்டிருந்தார் ஆர்.எம்.வீ. ஒருநாள் காலை ராமாவரம் தோட்டத்திலிருந்து தொலைபேசி
அழைப்பு வருகிறது. முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன், கோவை செழியன் ஆகிய மூவரும் இங்கு வருகிறார்கள்.
நீங்கள் உடனே வாருங்கள் என்றார் எம்.ஜிஆர்.
அந்த மூவரில் நாவலின் ஆதரவுக்காக வருகிறார்களா, ஏதேனும் ஏடாகூடமாய்
நடந்துவிடப் போகிறது, என்ற பதட்டத்துடன் தோட்டத்துக்குள் விரைந்தார் ஆர்.எம்.வீ. உள்ளே
நுழைந்தபோது அந்த மூவரும் எம்ஜிஆர் உடன் பேசி விட்டு வெளியே வருகிறார்கள். என்ன பேசினீர்கள்
என்று கேட்டார். கலைஞர் தான் முதல்வர் என்ற
முடிவுக்கு வரும் விதத்தில் தான் பேசினார்கள் என்று உறுதியான பின்னே இவருக்கு நிம்மதியாகிறது.
கலைஞர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சரானார்.
அதன்பின் நாவலர் நெடுஞ்செழியன் மனவருத்தத்துடன் கட்சியிலிருந்து சில காலம் ஒதுங்கி
இருந்தார். அக்காலத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெற இருந்தது. யார் பொதுச்செயலாளர் என்ற
சிக்கல் எழுந்தது. அதை முன்னிட்டு பொதுக்குழு கூடியது. திமுக தொடங்கப்பட்ட போதே தலைவர்
நாற்காலி என்றும் காலியாகவே இருக்கும். திமுகவுக்கு தலைவர் என்று யார் இருக்க மாட்டார்கள்,
என்று அண்ணா அறிவித்திருந்தார். திராவிட இயக்கத்தின் தலைவர் என்றுமே தந்தை பெரியார்தான்,
என்ற எண்ணத்தில் அப்படி சொல்லியிருந்தார். எனவே அவைத் தலைவர் என்ற பதவிதான் இருந்தது.
கலைஞர் முதல்வராகிவிட்டார். அவரை அவை தலைவர் என்று ஆக்க முடியாது, என்கிற நிலையில்
அவை தலைவர் என்ற பதவி தலைவர் என்பதாக மாற்றப்பட்டு, அப்பதவிக்குக் கலைஞர் கருணாநிதி
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிப் பதவி எதற்கும் போட்டியிடும் மனநிலை இல்லாத
நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் பேசி மனமாற்றத்தை உண்டு பண்ணி அவரைப் பொதுச் செயலாளராக
தேர்ந்தெடுத்தார்கள். தலைவரின் ஒப்புதலோடும் பொதுச் செயலாளர் முடிவுகளை மேற்கொள்வார்
என்ற வகையில் கட்சியின் அமைப்பு விதிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர்
அரசியல் ஈடுபாட்டால் ரிக்ஷாக்காரன் திரைப்படம் இதில் நிறுத்தப்பட்டு, உலகம் சுற்றும்
வாலிபன் திரைப்படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நடிகையாக ஜெயலலிதாவை நியமிக்க கூடாது, என்பதில் ஆர்.எம்.வீ. உறுதியாக
இருந்தார். காரணம் எம்ஜிஆர் பற்றி ஒரு சினிமா இதழ் எம்.ஜி.ஆர். பற்றிய அந்தரங்களை வெளிப்படையாக எழுதியிருந்தது. வெளிநாட்டில் பட வெளிநாட்டில் படப்பிடிப்பு
எடுக்கையில் இருவரும் சந்தித்து விடக்கூடாது என்பதிலும் ஆர்.எம்.வி உறுதியாக இருந்தார்.
ஆனால் அதையும் மீறி எம்ஜிஆர்-ஜெயலலிதா சந்திப்பு நடந்தேறியது. இந்தத் திரைப்படக் காலத்தில்
சிவாஜி ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டது . அதற்கு நிகராக அலலது அதைவிடவும் மேலாக அனைத்துலக
எம்ஜிஆர் ரசிகர் மன்றம் என்கின்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த மன்றத்தின் தலைவர்
புலவர் கே.ஆர்.ராமசாமி. செயலர் முசிறிப் புத்தன்.
1972
ஆம் ஆண்டு நடக்க வேண்டிய பாராளுமன்றத் தேர்தலை ஓராண்டு முன்கூட்டியே நடத்த முன் வந்தார்
இந்திரா காந்தி. இந்தத் தேர்தலின் போது தமிழக சட்டப்பேரவை தேர்தலையும் நடத்திவிட தமிழக
முதலமைச்சர் கலைஞர் மு கருணாநிதி முடிவு எடுத்தார். எம்ஜிஆர் அவர்களை கட்சியின் பொருளாளராக
நியமித்திருந்த நிலையில் திமுகவில் எம்.ஜி.ஆர்க்கு பெரியளவில் முக்கியத்துவம் ஏற்பட்டது.
1971
ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆர்.எம்.வீ அவர்கள் மறைமுகமாக ஆற்றிய
பணி குறிப்பிட்டத்தக்கது. இந்தத் தேர்தலில் ராஜாஜியும் காமராசர் ஒன்றாக இணைந்தார்கள்.
'கிராண்ட் அலைன்ஸ்' என்கிற பெயரில் கூட்டணி
அமைத்து தேர்தலைச் சந்தித்தார்கள். இந்த முறை வெல்லப் போவது காங்கிரஸ்தான். திமுக தோற்பது
உறுதி என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். சிவாஜி கணேசனை தேர்தல் பிரச்சாரத்தில்
முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டது. சிவாஜி கணேசன் திருத்தணியிலிருந்து
தனது பிரச்சாரப் பயணத்தைத் தொடங்க, எம்.ஜி.ஆர் அவர்கள் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார்.
இந்த தேர்தலில் 180 இடங்களில் திமுக வெற்றி
வாகை சூடியது. அத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில்
இருந்து இரண்டு மாலைகளோடு சென்னைக்கு வந்தார்கள். ஒன்று கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு.
மற்றொன்று எம்.ஜி.ஆர் அவர்களுக்கு.
1972 அக்டோபரில் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் தொடங்கப்பட்டது, தமிழ்நாடு அரசியலில்
மிக முக்கியமான விருப்பத்தை அந்த காலகட்டம் தோற்றுவித்தது. எம்ஜிஆர் கணக்கு கேட்டார்
அதுதான் காரணம் என்று பலரும் அண்ணா திமுக தோன்றுவதற்கு மூலமாக அமைந்தது என்று பேசிக்கொண்டார்கள்.
ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமன்று. திமுகவில் எம்ஜிஆர் அவர்களுக்கு கிடைத்து வந்த
புகழும் செல்வாக்கும் கட்சியில் உள்ள ஒரு நடிகருக்கு கிடைக்கும் புகழ் செல்வாக்காக
இல்லாமல் ஒரு தலைவர் கிடைக்கும் வகையில் அமைந்ததை யாரும் மறுக்க முடியாது. எம்ஜிஆருக்கு
வருமானவரித் துறையிலிருந்து நெருக்கடி வந்ததால் திமுகவைக் காட்டுகொடுக்க தயாராகிவிட்டார்,
என்று திமுகவில் உள்ள தலைவர்கள் பேசத்தொடங்கி விட்டார்கள். இது எம்ஜிஆர் க்கு எதிரான
ஒரு பேச்சாகவும் இருந்தது. கலைஞருக்கு நிகராக எம்.ஜி.ஆர். அரசியலில் வளர்ந்து வருவதை
கலைஞரின் ஆதரவாளர்களால் ஏற்க முடியவில்லை.
1972 அக்டோபர் எட்டாம் தேதி திருக்கழுக்குன்றத்தில் திமுக பொதுக்கூட்டம்
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே தேதியில் சென்னை ராயப்பேட்டையில் எம்ஜிஆர் ரசிகர்
மன்ற கூட்டத்தைத் தொடங்கினார். இரண்டிலும் கலந்துகொள்வதாக இருந்தார் எம்.ஜி.ஆர். முதலில்
அவர் திருக்கழுகுன்றத்தில் கலந்துகொண்டு, அந்த கூட்டத்தில் "திமுகவினர் கணக்கு காட்ட வேண்டும்" என்று கேட்டிருந்தார். அன்று
காலை பதினொரு மணியளவில் பத்திரிக்கையாளர் சிலர் எம்.ஜி.ஆர் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட
செய்தியைத் தொலைபேசியில் வழியாக தெரிவித்தார்கள். உடனிருந்த ஆர்.எம்.வி மிகப்பெரிய
சங்கடத்திற்கு உள்ளானார். உடனே எம்.ஜி.ஆர், ஆர்.எம்.வீ யைத் தனியாக அழைத்து அறிக்கை
ஒன்று தயார் செய்யுங்கள், என்று அறிவிக்கைக் கொடுத்தார். அப்பொழுது ஆர்.எம்.வீ எழுதிய
அறிக்கை தான் "உலை வாயை மூடலாம், ஓர்
வாயை மூட முடியாது". "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம் மறுபடியும்
வெல்லும்", "நிச்சயம் நான் இதில்
வெற்றி பெறுவேன். உண்மைகளை உலகத்துக்கு சொல்வேன்" போன்ற வாசகங்கள்.
தவிர்க்க முடியாத அந்த சூழலில் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம்
தேதி அன்று அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியை எம்ஜிஆர் தொடங்கினார். கட்சித் தொடங்கப்பட்ட
பொழுது அண்ணா திமுகவின் பொதுச் செயலாளர் எம்.ஜி. ஆர் என்று முடிவானது. பொருளாராக இருக்கும்படி
ஆர்.எம்.வீயைக் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
அப்போது எம்.ஜி.ஆர் கணக்குப் பிள்ளை என அழைக்கப்பட்டு வந்த ஆர்.எம்.வீ இந்தப்
பொறுப்பை ஏற்க மறுத்தார்.
அந்தக்
காலகட்டத்தில் 1973 திண்டுக்கல் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக
இருந்த திமுகவை சேர்ந்த ராஜாங்கம் அவர்கள் காலமானதால் இந்தத் தேர்தல். இதில் அண்ணா
திமுக வேட்பாளராக மாயத்தேவர் நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றார். இந்த வெற்றியில் ஆர்.எம்.வீயின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
தேர்தல் நடைபெற இருந்த அத்தொகுதி முக்குலத்தோரின் ஒரு பிரிவினர் அதிகமாக
வசித்த தொகுதி. எனவே அந்த இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது தான் வெற்றி
வாய்ப்பு அதிகரிக்கும், என்பதாக கணித்து நிறுத்தப்பட்டது. இதற்கிடையில் இந்த தேர்தலின் வேட்பாளர் சேடப்பட்டி முத்தையா என்று கட்சிக்காரர்கள் அவர்களாகவே முடிவுசெய்துகொண்டு
தேர்தல் வேலை பார்த்தார்கள். இதற்கிடையில் மாயத்தேவர் அறிவிக்கப்பட்டதும் ரசிகர் மத்திலும்
கட்சியாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவி பிறகு
சரியானது.
எம்.ஜி.ஆரை
வைத்து இதயக்கனி என்ற திரைப்படம் தயாரித்தார் ஆர்.எம்.வீ. அரசியலில் எம்ஜிஆர் மலையாளி
என்பதாக பேச்சை எழுந்தது. இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்டும் பொருட்டு, இந்த படத்தில்
ஒரு வசனம் வைக்கப்பட்டது. " மனிதன் எங்கு
பிறக்கிறான் என்பதல்ல முக்கியம். அவன் யாருக்காக பயன்படுகிறான் என்பதே முக்கியம்".
இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது இதற்கிடையில் ரஜினிகாந்தைக் கதாநாயகனாக வைத்து ராணுவ
வீரன் என்கிற படத்தை தயாரித்தார்.
ரஜினிகாந்த்
அப்பொழுது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்துக்கொண்டிருந்தார் . மூன்று முகம் படத்திற்குப்
பிறகுதான் ஹீரோவாக மட்டும் ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கினார். மேலும் ரஜினியை வைத்து
தங்க மகன், ஊர்க்காவலன், பணக்காரன் படங்களும் நடிகர் கமலஹாசனை வைத்து காக்கிச்சட்டை,
காதல் பரிசு படங்களையும் தயாரித்தார். காக்கிச்சட்டையில் சத்யராஜ் பேசும் ‘தகடு தகடு’
என்கிற வசனம் பெரியளவில் பேசப்பட்டது.
‘தென்னகம்’ என்றொரு பத்திரிக்கையை அப்பொழுது வந்துகொண்டிருக்கிறது. அந்த
இதழை நடத்தியவர் கே.ஏ. கிருஷ்ணசாமி. அந்த பத்திரிகை நஷ்டத்தில் இயங்கியதால் அதிமுக
கட்சியின் பத்திரிக்கையாக மாற்றினார் ஆர்.எம்.வீ.
எம்.ஜி.ஆர் எந்த ஒரு அறிக்கையையும் ஆர்.எம்.வீயுடன் கலந்து ஆலோசித்தே
அறிவிப்பார். எம்.ஜி.ஆர் தானாக அறிவித்த அறிக்கை " கட்சிக்காரர்கள் பச்சை குத்திக் கொள்ள வேண்டும் " என்பது. இந்த அறிக்கை நல்லதாக படவில்லை. இந்த அறிக்கையை
மறுத்ததுடன் பச்சைக் குத்திக்கொள்ள மறுத்துவிட்டார். 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன்
சட்டமன்றத் தேர்தலும் வந்தது. இந்தத் தேர்தலில் நான் அறிமுகப்படுத்திய முக்கியமான நபரைப்
பற்றி இவ்வாறு குறிப்பிட்டார் ஆர்.எம்.வீ.
அறந்தாங்கி
திருநாவுக்கரசரின் அரசியல் நுழைவு பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் ஆர்.எம்.வீ. “அப்போது
புதுக்கோட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் இளஞ்செழியனும் பின்னாளில் எம்.எல்.ஏ ஆன
அப்போதைய மாவட்ட அமைப்பாளர் அன்பரசனும் சென்னை வந்து என்னைச் சந்தித்தார்கள். அண்ணே,
அந்த இஸ்லாமிய நண்பர் எஸ்.டி.எஸ்-இன் நண்பர். அவருக்கும் கட்சிக்கும் சம்பந்தமே இல்லை,
என்கின்ற விவரத்தைச் சொன்னார்கள். வேறு சமயமாக
இருந்திருந்தால் நான் அக்கறை காட்டிருக்க மாட்டேன். ஆனால் அண்ணா திமுக தொடங்கப்பட்ட
பின்பு சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் அது. மட்டுமல்லாமல் பலம் பொருந்திய
திமுக சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக தனியாகச் சந்திக்க வேண்டிய நேரம். எனவே அண்ணா
திமுக வேட்பாளர்கள் வலிமையானவர்களாகவும் கட்சி பெரும் தொடர்பு கொண்டதை விட கட்சியோடும்
மக்களிடம் தொடர்பு கொண்டு இருப்பவர்கள் இருப்பது சரியாக இருக்கும், என நம்பினேன்.
இளஞ்செழியனும் அன்பரசனும் அப்படி சொன்னபோது அறந்தாங்கி தொகுதி வேட்பாளர்
அந்த இஸ்லாமிய தோழர் தான் என்று கிட்டத்தட்ட முடிவாகி இருந்தது. வேறு யார் இருக்கிறார்கள்,
என்று நான் அவர்களிடம் கேட்டேன். எஸ்.திருநாவுக்கரசு
என்ற ஒரு நல்ல இளைஞர் இருக்கிறார். இப்போதுதான் பிஏ, பிஎல் முடித்துவிட்டு வழக்கறிஞர்
தொழில் செய்யத் தொடங்கி இருக்கிறார். கட்சியின் மாணவர் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
கட்சியில் உள்ளே அவரைத் தெரியும். ஆனால் பெரிய விளம்பரம் இல்லை. அவர் பெயர் வெளியே
அவ்வளவாக தெரியாது, என்றார்கள். பின்னர் அந்த இளைஞரை என் இல்லத்திற்கு அழைத்து வந்து
அறிமுகப்படுத்தினார்கள். நான் அவரைப் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு எம்.ஜி.ஆரிடம்
தெரிவித்தேன். பொதுவாக படித்து இளைஞர்கள் தன் கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்
புரட்சித்தலைவர். திருநாவுக்கரசு பற்றி சொன்னதும் அறந்தாங்கி தொகுதி வேட்பாளராக அவரை
அறிவித்துவிட்டார். திருநாவுக்கரசு வெற்றி பெற்றார். நண்பர் காளிமுத்து போன்றோர் சொன்ன
ஆலோசனையின் பேரில் நான் பரிந்துரை செய்தபடியே அவரை சட்டப்பேரவையின் துணைத் தலைவராக்கினார்
எம்.ஜி.ஆர். பின்னர் அமைச்சராகி, பிற்காலத்தில் மத்திய அமைச்சரானார்”.
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட திருநாவுக்கரசுக்கு வாய்ப்பு
கிடைக்காமல் செய்ய எஸ்.டி.எஸ் தீவிர முயற்சியில் இறஙகினார். திருநாவுக்கரசு என்றால்
அறந்தாங்கியில் தோற்றுவிடுவோம், என்று எஸ்.டி.எஸ் சொன்னதை எம்ஜிஆர் நம்பி அவர் பரிந்துரை
செய்தது வேறு ஒருவரை. திருநாவுக்கரசுதான் வேட்பாளர் என்கின்ற முடிவில் தெளிவாக இருந்தார்.
ஆர்.எம்.வீ.
அதற்காக அறந்தாங்கியில் ஒரு மாபெரும் கூட்டத்தைக் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் பேசும்
போது, " இந்தத் தேர்தலில் திருநாவுக்கரசு
வென்றாலும் தோற்றாலும் அவர் அமைச்சரே" என்று எம்ஜிஆர் அறிவித்தார். திருநாவுக்கரசு வென்றார். தொழில்துறை அமைச்சரானார்.
" நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் ?" என்று எம்ஜிஆர் கேட்டு
வந்தார். நான் எங்கும் நிற்க விரும்பவில்லை, என்று ஆர்.எம்.வீ தொடர்ந்து சொல்லி வந்தார்.
அவர் தேர்தலில் நிற்காத போதிலும் ஒரு நாள் அலைபேசியில் தொடர்புகொண்டு "உங்களை
நான் அமைச்சர் ஆக்குகிறேன்" என்று அறிவிக்கை
செய்தார் எம்.ஜி.ஆர். அதன்படி செய்தி,சுற்றுலாத் துறை அமைச்சரானார்.
இந்தத் துறையின் கீழ் பாரதியார் நூற்றாண்டு தொடக்க விழா எட்டயபுரத்தில்
மிகச் சிறப்பாக நடைபெற்றது. அங்கே மணிமண்டபத்தில் மகாகவியின் முழு உருவச் சிலையை அரசு
நிறுவியது. அவரது பெயரில் ஒரு நூற்பாலை, மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டது. நூற்றாண்டு
விழாவில் சென்னையில் பிரமாண்ட ஊர்வலத்தில் நடந்தது. முழுக்க மகளிர் கலந்து கொண்ட இந்த
ஊர்வலத்தில் செல்வி ஜெயலலிதா அவர்கள் தலைமை
தாங்கினார். அறநிலையத்
துறை முதலில் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. அந்தத் துறையை எம்.ஜி.ஆர் ஆர்.எம்.வீடம் கொடுத்தார்.
1984 அக்டோபர் மாதம் எம்ஜிஆர் உடல்நிலை நலிவுற அவர் அவசரமாக அப்பல்லோ
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் பக்கவாதநோய்
தாக்கியது. ஆகவே அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். தேர்தல் காலம் எம்.ஜி.ஆர்
திரும்பி வர மாட்டார், அவர் அமெரிக்காவில் கண்ணாடிப் பெட்டியில்தான் இருக்கிறார், என்று
எதிர்க்கட்சியினர் மட்டும் அல்ல,உட்கட்சிக்காரர்கள் பேசத் தொடங்கினார்கள். எம்.ஜி.ஆர்
திரும்பி வருவார், அதுவும் முதலமைச்சராக திரும்பி வருவார், என்று உறுதியாக சொல்லிக்
கொண்டிருந்தார் ஆர்.எம்.வீ. சிகிச்சையை குணமடைந்து,
மருத்துவமனையில் இருந்தபடி வெற்றி சின்னமான இரட்டை இலையைக் காட்டினார். அதன் பிறகு
எம்ஜிஆர் உயிரோடு இருப்பதாக மக்களும் கட்சிக்காரர்கள் நம்பினார்கள். மூன்றாவது முறையாக
எம்.ஜி.ஆர் முதல்வரானார். எம்ஜிஆரின் மரணம் எதிர்பாராவிதமாக நிகழ்ந்தது.
அவரது
மறைவுக்குப் பின் தமிழக அரசியல் ஒரு சுழல் சிக்கியது போல ஏற்பட்டது. முதல் கட்டமாக
1988 ஜனவரி முதல் தேதி அதிமுக தலைமை நிலையத்தில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கலந்து
கொண்டு கூட்டத்தைத் திடீரென கூட்டிய ஜெயலலிதா அவர்கள் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தத் தேர்வில் திருநாவுக்கரசு முக்கிய பங்காற்றினார்.
ஆர்.எம்.வீ தலைமையில் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அந்த 98 பேரும் பலத்தை உறுதி செய்ய எல்லா வகை முயற்சிகளையும் செய்தார். ஆர்.எம்.வீ தலைமையை ஜானகி அம்மையார் விரும்பாமல் அவரது தலைமையின் கீழ் அணி அமைவதை விரும்பினார். ஜானகி அம்மையாரை கட்சியின் தலைவராக ஆர்.எம்.வீ முன்மொழிகிறார்.
இதன்பிறகு
நடந்த சம்பவங்கள் என் யோசனைபடி நடைபெறவில்லை, என்கிறார் ஆர்.எம்.வீ. பிறகு அந்த 98
பேரும் ஆளுநர் முன்பு நிறுத்தப்பட்டு, ஒரு ஹோட்டலில் மொத்தமாக தங்க வைக்கப்பட்டார்கள்.
இரு அணிகளையும் சமாதானப்படுத்தும் முயற்சியில்
மூத்தத் தலைவர் க.ராசாராம் இறங்கினார்.
நண்பர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், "திருநாவுக்கரசு
அவர்களிடம் சென்று பேசிப் பார்க்கலாமா?" என்று கேட்டார். "தரலாமா முயற்சி
செய்யுங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தேன். பேச்சுவார்த்தைக்குப் போனவர் அந்த அணியில் சேர்ந்து விட்டார்.
சட்டசபை கூடியது எதிரணி 32, 33 ஆதரவாளர்களோடு வந்திருந்தார்கள். கடைசி
கட்ட முயற்சியாக சட்டப்பேரவை பக்கத்தில் வசந்த மண்டபத்திலிருந்து கலைஞர் அவர்களிடம்
நானாகத் தொடர்புகொண்டு பேசினேன். நம்பிக்கை தீர்மானத்திற்கு திமுகவின் ஆதரவு கிடையாது,
என்று சொல்லிவிட்டார் கலைஞர். மேலும் ஒரு தகவலையும் சொன்னார். என்னிடம் சிலர் பேசினார்கள்.
ஆதரவு தர வேண்டாம், என்று எல்லோரும் என்ன தடுக்கிறார்கள், என்று. சட்டசபை சண்டையும்
சச்சரவும் குழப்பத்தில் வந்து முடிந்தது. சட்ட ஒழுங்கைக் காரணம் காட்டி சட்டப்பேரவை
கலைக்கப்பட்டது.
அடுத்து நடைபெற்ற தேர்தலில் ஜானகி புறா சின்னத்திலும் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டனர்.
ஜானகி அணியினர் பி.எச்.பாண்டியனைத் தவிர மற்றவர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தார்கள்.
எம்.ஜி.ஆர்
மறைவுக்குப் பிறகு ஆர்.எம்.வீ ஆலோசனையைக் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமென பின்னாளில்
வெளிப்படையாக கூறியவர்கள் இரண்டு பேர். ஒருவர் எஸ். திருநாவுக்கரசர்.
2004
ஆம் ஆண்டில் வலத்திராக்கோட்டையில் ஆர்.எம்.வீ உதவியால் 20 லட்சம் ரூபாய் செலவில் ராமசாமி
- தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து பேசிய
போது திருநாவுக்கரசர் இப்படிச் சொன்னார்.
" புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மறைந்த பிறகு அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள் சொன்னதை நாங்கள்
எல்லாம் கேட்டிருந்தால் இன்றைக்குத் தமிழக அரசியல் மாறி போயிருக்கும்". அதன்பிறகு
ஆர்.எம்.வீயின் 80 ஆவது பிறந்த நாள் விழா புதுக்கோட்டை
நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு பேசிய திருநாவுக்கரசர், "செய்த
பாவங்களுக்காக இப்போது பிரயாச்சித்தம் செய்து கொண்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டார்.
இந்த புதுக்கோட்டை விழாவில் அதிமுகவில் மாவட்ட செயலாளராக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்
ரகுபதி அவர்கள், "அண்ணன் ஆர்.எம்.வி அவர்கள்
இல்லையானால் என்னைப் போன்றவர்கள் இந்த நிலைக்கொண்டிருக்க முடியாது. அதிகப்பட்சம் நான்
ஒரு பப்ளிக் பிராசிக்யூட்டாக வந்திருப்பேன். எனது இந்த நிலைக்கு ஆர்.எம்.வீதான் காரணம்.
அவர் எங்களுக்கெல்லாம் நாங்கள் இருக்கிற இடத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றுதான்
சொல்லித்தந்தாரே தவிர அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லித் தரவில்லை"
என்று குறிப்பிட்டார்.
அதிமுக இரண்டு அணிகளும் தேர்தலில் தோற்ற உணர்வோடு ஒரு சோர்வு சேர்ந்து
கொண்டது. இரண்டு அணிகளும் ஒன்றுசேர வேண்டியது
கட்டாயமானது. கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா. இணை பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீ.
எஸ்டிசோமசுந்தரம் அவர்கள் மூத்த இணைப்பு செயலாளர் ஆனார்கள்.
1990
திமுக ஆட்சி கலைக்கப்பட்டு பின்பு தேர்தல் நடைபெற்றது இந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி
பெற்று முதலமைச்சரானார். இந்த வெற்றிக்கு தேர்தல் பணியாற்றியவர் ஆர். எம்.வீ. அவர்கள்
ஆர்.எம்வீயை கல்வி அமைச்சராக்கினார் ஜெயலலிதா. பிறகு இணை பொதுச் செயலாளர் என்கிற பதவி
பறிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளர் ஆக்கப்பட்டார். பிறகு அப்பதவியும் பறிக்கப்பட்டது.
அதற்கு காரணம் அவர் டெல்லி சென்ற பொழுது மத்திய அமைச்சர், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
அவர்களிடம தான் கேட்டுக்கொண்டதாக சொன்ன ஒரு செய்தியை சொன்னதுதான் காரணம். பின்பு அவர்
அமைச்சர் பதவியிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.
பாட்ஷா திரைப்படத்தை ஆர்.எம்.வீ சத்யா மூவிஸ்
பெயரில் தயாரித்தார். அப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றி விழாவிற்கு ஆர்.எம்.வீ
அவர்கள் சென்று மேடையின் கீழ் அமர்ந்திருந்தார். அதைப் பார்த்து விட்ட ரஜினி, அவரை
மேடைக்கு வர வைத்தார். அப்பொழுது அந்த விழாவில் பேசிய ரஜினி, தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது,
என்றார். இந்தப் பேச்சுக்கு ஆர்.எம்.வீயால் பதிலுரைக்க முடியவில்லை. தொலைபேசி வழியில் தொடர்புக்கு வந்த ஜெயலலிதா, அவர் என்னை
அட்டாக் பண்ணி பேசியிருக்கார். நீங்கள் அதைக் கேட்டுக்கொண்டு இருந்திருக்கீங்க. நீங்கதான்
யார் என்னை அட்டாக் பண்ணிப் பேசினாலும் ரசிப்பீங்களே. உங்களுக்கு எம்.ஜி.ஆரைப் பாராட்டத்
தானே பிடிக்கும், என்று பேசிவிட்டு அலைபேசியை வைத்து விட்டார். அக்கட்சியிலிருந்து
விலக்கவும்பட்டார்.
1995ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி எம்ஜிஆர்
கழகம் என்கின்ற கட்சியை தொடங்கினார் ஆர்.எம்.வீ.
அக்கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன். இந்தக் கட்சிக்கு ரஜினி ரசிகர்கள்
பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். ரஜினி ரசிகர்களும் அக்கட்சியுடன் இரண்டறக்
கலந்தார்கள். இந்நேரத்தில் ரஜினி அவர்கள், ஓர் அறிக்கை வெளியிட்டார். “ இந்த ஆட்சி மீண்டும் வந்தால் தமிழகத்தை ஆண்டவனால்கூட
காப்பாற்ற முடியாது” என்று. இந்த அறிக்கைக்கு காரணமாக இருந்தவர் ஆர்.எம்.வீ
எம்.ஜி.ஆர்
கழகத்தினர் ரஜினியின் மன்றத்தின் பெயர்களைப் பயன்படுத்திக்கொள்வதாக இருந்தார்கள். ரஜினி
மன்றத்தை ஆர்.எம்.வீ அபகரித்து தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் போகிறார், என்பதாக
பலரும் பேசிக்கொண்டார்கள். இதில் எச்சரிக்கையான ரஜினி, எந்த அரசியல் கட்சியிலும் எனது
மன்றத்தையோ எனது பெயரையோ பயன்படுத்தக்கூடாது, என அறிக்கை விடுத்தார்.
1996
சட்டசபை தேர்தல். திமுக கூட்டணி மகா வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் எம்ஜிஆர் கழகம்
இருந்தது. ஆனால் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் தொண்டர்கள் ஆவேசப்பட்டார்கள்.
தனியாக நிற்க வேண்டுமென கலகம் செய்தார்கள். 117 தொகுதிகளுக்கு எம்.ஜி.ஆர் கழகம் வேட்பாளர்களை
அறிவித்தது. பிறகு அந்த வேட்பாளர்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
1998
இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி எம்ஜிஆர் கழகத்திற்கு ஓர் இடம் வழங்கியது.
அந்த ஒரு வேட்பாளரும் திமுக சின்னத்தில் நிற்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. அந்த ஓரிடத்தை
ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு ஆர்.எம்.வீ பெற்றுக்கொடுத்தார். இதில் அதிர்ச்சியான எ.சி.சண்முகம்
பெருந்துறையில் தனிக் கட்சி தொடங்கினார். பின்பு 1999 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில்
எம்.ஜி.ஆர் கழகம் அங்கீகரிக்கப்பட்ட உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. பிறகு
சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் கழகத்திற்கு இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டன ஆனால்
நல்ல இடங்கள் கிடைக்கவில்லை.
அதிமுக முதல் தேர்தலில் ஆர்.எம்.வீ போட்டியிட விரும்பவில்லை.
ஆனால் மேல் சபை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு அமைச்சர் ஆனார். 1989 ஜனவரி தேர்தலில்
ஜானகியின் சார்பில் புறா சின்னத்தில் புதுக்கோட்டை தொகுதி போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை
இழந்தார் ஆர்.எம்.வீ. 1991 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.
ஆனால் அமைச்சராக்கப்பட்டு காங்கேயம் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2001 ஆம் ஆண்டு
தன் விரும்பிய தொகுதி கிடைக்காத நிலையில் கூட்டணித் தர்மத்திற்காக கூட்டணியில் நீடித்தார்.
இப்படியான ஏற்ற இறக்கங்களைச்
சந்தித்த ஆர்.எம்.வீ அவர்களின் வாழ்க்கை பல செய்திகளை இன்றைய
தலைமுறையினர்களுக்குச் சொல்லிச் செல்கிறது.
ஆர்.எம்.வீ பற்றி கலைஞர் மு. கருணாநிதி
மற்றும் எம்.ஜி.ஆர் இவ்வாறு சொல்கிறார்கள்.
கலைஞர் அவர்கள், . “எம்.ஜி.ஆர் அவர்களோடு ஆர்.எம்.வீ கொண்டிருந்த
நட்பு, உறவு எத்தகையது என்பதை நான் அறிவேன். எம்.ஜி.ஆர் அவர்களை வடிவமைக்க கிடைத்த
சிற்பிதான் ஆர்.எம்.வி அவர்கள். இது எனக்குத் தெரியும். என்னை விட்டால் மறைந்த தம்பி முரசொலி மாறனுக்குத்
தெரியும். மற்றவர்களால் அதை உணர முடியாது”.
எம்.ஜி.ஆர்
அவர்கள், “எனது அன்பு சகோதரர் திரு ஆர்.எம்.வீரப்பன்
அவர்கள் ஓர் அதிசய மனிதர். யாருக்கும் வலிய யோசனை சொல்ல மாட்டார். அப்படி யாராவது தேவைப்பட்டு
கேட்டால் கேட்டவர்களின் விருப்பு,வெறுப்பு பற்றி சிறிதும் கவலைப்படாமல், தனக்குச் சரி
என்று பட்டதைத் தெள்ளத்தெளிவாக சொல்லிவிடுவார். தான் சொல்லும் கருத்தின் மூலம் கேட்பவர்
உணர்ச்சி வயப்படும் நிலையினை உண்டாக்கவே மாட்டார். தனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று
எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டார். அவர் உண்மையிலேயே நான் மதிக்கும் நண்பர்.
அவர் விரோதியாக கருதினாலும் கூட தான் செய்ய வேண்டிய கடமையை அந்த நண்பருக்காக செய்யாமல்
இருக்க மாட்டார். நானும் பங்குதாரராக உள்ள எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் கம்பெனியில் மாத சம்பளம்
வாங்கும் நிர்வாகியாக இருக்கிறார். சத்யா மூவிஸ்
படக் கம்பெனியைத் துவங்கி என்னை நடிக்க செய்து லட்சக்கணக்கில் எனக்குச் சம்பளம் கொடுக்கிறார்.
நான் பார்த்த நேரில் அனுபவித்த ஒரு சில தொழிலாளி முதலாளிகளில் ஆர்.எம்.வீ முதன்மையானவர்.
அதாவது முதலையாலும் தொழிலாளி அவர்”.



.jpeg)





கருத்துகள்
கருத்துரையிடுக