புதுக்கோட்டை எழுத்தாளர் – 139
குளமங்கலம் ச.ராமசாமி, வடக்குப் புலவர் என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டவர். ஆலங்குடிக்கும் அருகில் குளமங்கலம் எனும் சிற்றூர். இவரது தந்தையார் தா.சத்துரு சங்காரவேல்சாமியும் புலவர். இவர் குளமங்கல் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் பக்திப் பாமாலை என்றொரு நூல் எழுதியுள்ளார்.ராமசாமி இரு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் வீசிய புயல், தன்னாண்மைத் தங்கம்மாள் காவியம். இவ்விரு நூல்களும் நாட்டுப்புற மெட்டான நொண்டிச் சிந்தில் பாடப்பட்ட காவியங்கள்.
தமிழ்நாட்டில் வீசிய புயல், எனும் இந்நூல் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வீசியுள்ளது. தற்போது வீசிய கஜா புயல் அளவிற்கு அப்புயலின் சீற்றம் இருந்திருக்க வேண்டும். இப்புயலினால் உண்டான பாதிப்புகளை 30 பாடல்களைக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.
ஊருக்குள் அழித்திடுமாம் – வெள்ளம்
ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம்!
சீருகள் அழிந்திடுமாம் – கல்விச்
செல்வங்கள் தழைக்கின்ற கலைக்கோயிலில்
ஆறுகள் நுழைந்திடுமாம் – அதன்
அருகிருந்த சோலைகளும் மரங்களுமே
வேருகள் பிடுங்கிடுமாம் வெள்ளம்
விழுங்கிவிட்ட நூல்களுக்கும் கணக்கில்லையாம்.
மரங்கள் வேரொடு சாய்ந்தன.
கூரைகள் பறந்தன.
ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
பெரியோரும் குழந்தைகளும் உணவின்றித் தவித்தனர்.
உன்னையும் வென்றிடுமாம் – நாங்கள்
ஓட்டு விமானங்களும் திட்டங்களையும்
தன்னையும் சுழற்காற்றாய் – அந்தத்
தருணத்தில் ஆக்கிக் கொண்ட காமராசரும்
நன்மனை மாடிழந்தோ – அங்கு
நலிந்திட்ட யாவர்க்கும் உணவளித்த
தன்மையை என்னென்போம் – தேசத்
தலைவர் கடமைக்கும் நன்றியுரைப்போம்!
எனப் பாடியுள்ளார். இதுதவிர, உன்னைத் தொடலாமா, என்கிற ஓரங்க நாடகம் எழுதி பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் செய்துள்ளார். மேலும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். இவ்விரு நூல்களும் அச்சாகி வெளிவரவிருந்த நிலையில் காலமாகிவிட்டார்.
இவரைக் குறித்து, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் அ. செல்வராசு தினமணி இதழில் எழுதியுள்ளார்.
தன்னாண்மைத் தங்கம்மாள் என்கிற காவியத்திலிருந்து பெருங்காரையடி மிண்ட அய்யனார் குதிரையைப் பற்றிய ஒரு கவிதை அக்கோயிலின் குடமுழக்கு விழா சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளது.


கருத்துகள்
கருத்துரையிடுக