புதுக்கோட்டை எழுத்தாளர் – 140
அ.சந்திரபோஸ், முனைவர், உதவிப் பேராசிரியர், வரலாறு, கட்டடக்கலை,
சிற்பக்கலை, ஓவியக்கலை, பற்றிய ஆய்வுத் திறன் பெற்றவர். ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம்
கிராமத்தில் பிறந்தவர். புதுக்கோட்டை மாட்சிமை
தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாறு படித்து, அதே கல்லூரியில் வரலாற்றுத்துறை உதவிப்
பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் கல்லூரியில் முனைவர்
பட்டம் பெற்ற இவர், இந்திய அரசின் சுற்றுலா
மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் 2001 -2002 ஆம் ஆண்டிற்கான இளநிலை ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செட்டிநாடு ஓவியங்கள் என்கிற தலைப்பில் ஆய்வு செய்த இவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில்
வரலாற்றுத் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட
ஆய்வுக்கட்ரைகள் எழுதியுள்ளார்.
தானவ நாட்டு வரலாறு, இவரது முதல் நூல். பாண்டிய காலத்து ஒரு கல்வெட்டு
செயசிங்க குலகால வளநாட்டு தென்னச்சினத்துத்
தானவநாடு, எனக் குறிப்பிட்டுள்ளது. தானவ நாடு என்பது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி
வட்டத்தின் ஒரு பகுதியும் தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியும் தஞ்சாவூரைத்
தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில் தானன் என்ற தானவதரையர் என்கிற குறுநில மன்னன் ஆட்சி செய்தான். இப்பகுதி
தானவ நாடு என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் எல்லைகளாக ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி,
திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு திசைகளும் இருந்துள்ளன. சோழ நாட்டிற்கான படைக்கருவிகள்
உற்பத்தி செய்யும் நாடாக இருந்திருக்க வேண்டும், என்கிறார் நூலாசிரியர். அம்புலி ஆற்றின்
இரு கரையிலும் அமையப்பெற்ற இந்நாடு ஆற்றின் கரை தென் தானவ நாடு வட தானவ நாடு எனப் பிரிக்கிறது.
இதற்குள் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊர்கள் இருந்துள்ளன. இந்நாடு அழும்பில் என அழைக்கப்படும்
அம்புக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட அம்பு நாட்டின் தொடர்ச்சியான நாடாக இருந்திருக்கிறது.
தானவ நாட்டின் தலையிடம் கடாரம் கொண்ட சோழபுரம் எனும் சிற்றூர். இந்த இடம் இன்று அரண்மனைத் தோப்பு என அழைக்கப்படுகிறது, என்கிறார்.
முதலாம் ராசேந்திர சோழனின் ஆட்சிக்காலமான கி.பி 1012 – 1044 இடைப்பட்ட காலத்தில் கடாரத்தின்
வெற்றியின் நினைவாக இவ்வூர் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், என்கிறார்.
இந்நூல் தானவ நாட்டின் மக்கள், சாதிய அடுக்குகளின் கீழான கரைகள்,
மக்களின் தொழில், சமூக கட்டமைப்பு,கோயில்கள் பற்றி பேசுகிறது. இந்நூலில் நடேசக் கோனாரின் நாட்டுப்புறப் பாடல்கள், விடுதலைப்போராளி
நல்லையா பற்றிய பதிவுகள் உள்ளன. நல்லையா கள்ளுக்கடை மறியல், வரி எதிர்ப்பு இயக்கம்,
ஜெமீன் ஒழிப்புப் பேராட்டம், தனிநபர் சத்தியாக்கிரகம் என பல போராட்டங்களை முன் நின்று
நடத்தியவர். இவரது நினைவாக கொத்தமங்கலத்தில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக