புதுக்கோட்டை எழுத்தாளர் - 157
சுப.ராதாபாய், பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம், மக்கள் தொகையியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தில் செவிலியர் பணியினைத் திறம்பட ஆற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த சேவைப் பெண்மணி, சிறந்த செவிலியர், சிறந்த கவிஞர் விருதுகள் பெற்றவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஏழு ஆய்வுக்கட்டுகரைகளும் படைத்துள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் நடத்தியவர். தமுஎகச நடத்திய 200 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கில் பங்கேற்று கவிஞர் மு.மேத்தா அவர்களால் சிறப்பிக்கப்பெற்றவர்.நிஜத்தில் நிழல் எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதுகைத் தென்றல், தினத்தந்தி, ராணி இதழ்களில் வெளியான கதைகளின் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. கடவுளின் பரிசு என்றொரு சிறுகதை. புதுக்கோட்டையின் புறநகர்ப்பகுதி பூங்குடியை மையமாகக் கொண்ட கதை. ஒரு தம்பதி குழந்தைகள் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தை பேறு இல்லாமைக்கு கணவரும் மனைவியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். குழந்தை பேறு தள்ளிப் போகிறது. ஏதேனும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாமென நினைக்கிறார்கள்.
ஒரு நாள் சென்னையில் சுனாமி பேரழிவு கோரத்தாண்டவம். பலத்த சேதாரம். பிணக்குவியல். எங்கும் மரண ஓலம். ஒரு கட்டிட இடிபாடினையொட்டி ஒரு குழந்தை அழுதுக்கொண்டு நிற்கிறது. அந்தக் குழந்தையை அவர்களுக்குக் கடவுள் கொடுத்த பரிசாக தெரிகிறது. அக்குழந்தையை எடுத்து வளர்க்கிறார்கள்.
இப்படியாக மனிதத்துவம் பேசும் கதைகளின் தொகுப்பு இது.

கருத்துகள்
கருத்துரையிடுக