புதுக்கோட்டை எழுத்தாளர் - 164
சி.வேலாயுதம், ஓவியக் கவிஞர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தனித்தமிழ் இயக்கம், பன்னாட்டுத் தமிழ் உறவுக் கழகம், வள்ளுவர் மன்றம், பைந்தமிழ்ப் பாசறை போன்ற அமைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் உரை வீச்சாக உரையாற்றுகிறவர். சந்தக்கவி பாடுவதில் வல்லவர். புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் தேர்ந்தவர்.வண்ண வண்ணப் பூக்கள், எனும் இந்நூல் இவரது முதல் நூல். சின்னஞ் சிறுவர்களின் மனதைக் கவரும் பாடல்களின் தொகுப்பு.
இத்தொகுப்பில் ஒரு பாடல்,
தலைப்பு - பள்ளிக்கூடம் போனேன்!
ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டி!
பள்ளிக்கூடம் போனேன்- நான்
ஆடிப் பாடிப் படித்ததெல்லாம்
கேட்டுத்தான் பாரேன்!
பூனைக்குட்டி! பூனைக்குட்டி!
பள்ளிக்கூடம் போனேன்- நான்
போட்டு வைத்த வீட்டுக் கணக்கை நீட்டித்தான் பாரேன்!
பச்சைக்கிளி! பச்சைக்கிளி!
பள்ளிக்கூடம் போனேன்- நான்
படம் வரைந்தேன் உன்னைப் போல இருக்குதா பாரேன்!
வெள்ளை முயலே! வெள்ளை முயலே! பள்ளிக்கூடம் போனேன்- நான் விளையாட்டிலே வாங்கிவந்த
பரிசைத்தான் பாரேன்!
சிற்றெரும்பே! சிற்றெரும்பே! பள்ளிக்கூடம் போனேன்- நான் சிறுசேமிப்பில் சேர்த்தகாசை எண்ணித்தான் பாரேன்!
பாட்டியம்மா! பாட்டியம்மா!
பள்ளிக்கூடம் போனேன்- நான்
பாக்கு வெற்றிலை வாங்கித்தாரேன் பாட்டைத்தான் கேளேன்!

கருத்துகள்
கருத்துரையிடுக