முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜானகி ராஜாயி சாஹேப்

புதுக்கோட்டை எழுத்தாளர் -180

ஜானகி ராஜாயி சாஹேப், புதுக்கோட்டை தனியரசு அரசக் குடும்பத்து மகள். இவர் இயற்றிய  கீர்த்தனைப் பாமாலை எனும் இந்நூல் புதுக்கோட்டை நாரதா மலையில் எழுந்தருளியிருக்கும் மாரியம்மன் மீது பாடப்பட்ட சிந்து, பல்லவி, அநுபல்லவி, கும்மி வடிவில் பாடப்பட்ட பாமாலையின் தொகுப்பாகும். இந்நூலின் மூலம், இவர் ‘புதுக்கோட்டையின் முதல் பெண் நூலாசிரியர்’ என்கிற பெருமையைப் பெறுகிறார்.

இந்நூல் திரிசிரபுரம் டீ சில்வா அச்சுயகதிரசாலையில் 1920 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. திரிசிரபுரம் என்பது திருச்சிராப்பள்ளி. இதிலிருந்து இவ்வாண்டு வரை தனியரசாக இயங்கிய புதுக்கோட்டையில் அச்சகங்களோ, பதிப்பகங்களோ இயங்கியிருக்கவில்லை என்பது உறுதியாகிறது.

புதுக்கோட்டை தொண்டைமான் குடும்பத்தினர் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். ஆயினும் அரசக் குடும்பத்து மகள் ஜானகி ராஜாயி சாஹேப், தமிழில் நன்கு சிறந்து விளங்கியுள்ளார் என்பதை இந்நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

இவர் குறித்து பிற குறிப்புகள் இல்லை என்றபோதினும், மாதாட பாரதேனோ என்ற வர்ணமெட்டில் கமாசு இராகத்தில் இயற்றியிருக்கும்

“சின்னுஞ் சிறுவயதில் செய்த பிழை பொறுத்தும்

என்னையாண்டருள் செய்ய இருதாள் மலர்பணிந்தும்

மன்னன்வாழ்புதுக்கோட்டைசொர்ணம்நிறைந்தநாட்டை

என்றும் நாரதகிரி ஈஸ்வரி நீயாதரி

பொன்னால் மகுடம் புனை புவியளந்தோன் தங்கைநீ

கன்னல்மொழி ஜானகி கவலை தீர்த்தாளவுன

என்கிற சரணம் மூலமும் பாடலின் மையத்தில், “ மங்கையாளுன் மகள் ஜானகி மகிமையுடன் மாதா துணை செய்வாய்” என்கிற வரியின் மூலமும் இவர் பெண்பாற்புலவர் என்பது உறுதியாகிறது.

“ பிணியால் வருந்து மென்னை தனியாள் விடாதபடி

துணிவாயுனைப் பணிந்தேன் துயரகற்றி நீயருள்” என்கிற வரியின் மூலம் இவர் தீராப்பிணியில் அல்லலுற்றாரோ, எனக் கருத முடிகிறது. அதற்கேற்ப,

“ தாயே மக மாயிநீ தயவு செய்குவாயே நீ

தாயே மக மாயி நீ தர்மகுண சீலி நீ” என இறைவனைக் கெஞ்சிப் பாடுகிறார்.

இவர் நாரதமலை மாரியம்மனுடன் அன்றைக்குப் புதுக்கோட்டை தனியரசின் மன்னராக திகழ்ந்த மார்த்தாண்ட பைரவத் தொண்டைமானையும் பாடியுள்ளார்.

“ ஆதாரமான தெய்வம் மாதாபிதாவும் நீயென்

மார்த்தாண்ட பைரவனை காத்தாண்டருள் புரிவாய்”


இந்நூலுக்குச் சிறப்புப்பாயிரம் திரிசிரபுரம் அர்ச் சூசையப்பர் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் அ. சிவப்பிரகாசர் எழுதியுள்ளார்.

“மஞ்சுலவு நாரதா மலையில்வாழ் தேவியருண் மாரி மீதில்

நெஞ்சுருகு மிசைத்தமிழால் கீர்த்தனைப்பா மாலையுளம்

நெகிழ்ந்து சாத்தி

விஞ்சுபுக ழெய்தினள்நீள் புதுக்கோட்டை யதிபன்முன்

                        விளங்குஞ் சீர்த்தி

எஞ்சலிலின் மொழிபயின்ற ஜானகிரா ஜாயிநல் இறைவி மாதோ”

நாரதா மலை என்பது இன்று நார்த்தாமலை என்று அழைக்கப்படுகிறது. சோழர் ஆட்சிக்காலத்தில் விஜயாலய சோழீஸ்வரம் என அழைக்கப்பட்ட மலை, பிறகு நகரத்தார் மலை என்று அழைக்கப்பட்டது.

       இந்நூலுக்கு சிறப்பாயிரம் எழுதிய அ. சிவப்பிரகாசர் நூலாசிரியரை எஞ்சலிலின் மொழிபயின்ற ஜானகி ராஜாயி என்கிறார். எஞ்சலிலின் என்கிற சொல் இங்கு எதைக் குறிக்கிறது, எனத் தேடுகையில், “ பழிஅஞ்சி பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை/ வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்” என்கிற திருக்குறள் நினைவுக்கு வருகிறது. இங்கு எஞ்சலிலின் மொழி பயின்ற ஜானகி என்கிற வரிக்கு ‘குறையாத மொழி பயின்ற ஜானகி ராஜாயி’ என்று பொருளாகிறது.  இவர் குறிப்பிட்டுள்ளதைப் போன்று இந்நூல் அவரது தாய்மொழி தெலுங்கு சொற்களில்லாமல் அக்காலத்தில் தமிழ் மொழியோடு இரண்டறக் கலந்திருந்த வடமொழி அதிகம் கலப்பில்லாது நல்ல தமிழில் எழுதிய பாமாலையாக இருக்கிறது.

வேண்டல் - நான் தேடிய வரையில் இவரே புதுக்கோட்டையின் முதல் பெண் நூலாசிரியராகத் தெளிகிறார். மறுப்பிருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...