முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நா. கனகராஜய்யர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -179


நா. கனகராஜய்யர், கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர்.

இவர் எழுதிய நூல்களில்,

கம்பர் பிள்ளைத் தமிழ்,
திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ்,
சங்கரர் பிள்ளைத்தமிழ்,
முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம்
சோழ மன்னர்,
பாண்டிய மன்னர்,
புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும்

ஆகிய நூல்கள் முக்கியமானவை.

ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம்
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்  1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல்.




இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர்
ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை
புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ஜகதீசன் அவர்களின்
கமலா பதிப்பகத்தில் அச்சிட்டு வெளியிட்டது. ஆண்டு - 1942.
விலை - 10 அணா


ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம்
திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் நூலுக்கு நூலாசிரியர் எழுதியிருக்கும் முன்னுரை இது.

முகவுரை.

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.

விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே.
      -திருநாவுக்கரசர் தேவாரம்.

அன்புரு அறிவுரு இன்புரு என்று மறைகள் முழங்கும் பரம்பொருளை 'ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியல்லன்’ என்று மெய்யன்பர் விளக்குவது தமிழ் மக்கள் அறிந்த உண்மையே, ''அம்மையேயப்பா வொப்பிலா மணியே அன்பினில் விளைந்தவாரமுதே," எனவும், “அப்பனீயம்மையு யண்ணனுநீ," எனவும், ‘தாயான செல்வன்' எனவும் வாக்கு மனமிறந்த வள்ளலை வழுத்துவது தமிழர் மரபாகும். பிறபல நெறிபற்றிய மக்களெல்லோரும் இறைவனை ஆண்பால் என்ற எல்லையில் அடக்க விரும்புவது உண்மையே. அவன் பால், திணை, இடம், காலம் என்ற எல்லைகளைக் கடந்தவன் என்பது தமிழ் மக்கள் நன்கறிந்துள்ள உண்மையாம்.

தமிழகம் எங்கும் அருள்வள்ளல் அமர்வதற்கெனப் பல பெருங்கோயில்கள் அமைந்துள. சிவபரஞ்சுடரை நாடும் அன்பர் குழாங்களுக்கு உரிய கோயில்கள் ஆயிரத்தெட்டு என்பர். மூவர் முதலிகள் தேவாரம் அருளிச் செய்த காலத்தே இவை விளங்கின என்பர்.

திருமால் என்ற நாமரூபத்தால் இறைவனை வழிபடும் அன்பர் குழாத்துக்கு நூற்றெட்டுத் திருப்பதிகள் உள என்பர். ஆழ்வார்கள் அருளிய பிரபந்தங்களைப் பெற்ற இவை இறைவன் அருள் விளக்கம் விளக்குவன ஆகும் எனவும் உரைப்பர். இந்த இரு வகுப்பிலும் அடங்காத சிவாலயங்கள் பலவும் திருமால் கோயில்கள் பலவும், முருகன் கோயில்கள் பலவும், பிறபல தேவாலயங்களும் நம் நாடெங்கும் இந்தாளில் உள்ளன. அவற்றுட் சில புராணம் பெற்றனவாகவும் உள்ளன.

வடமொழியிற் புராணம் இருப்பது தலங்களின் பெருமைக்கு உறுதுணையாகும் என்று கருதிய அன்பர்கள் பெரும்பான்மையான திருத்தலங்களுக்கு வடமொழிப் புராணங்களே காண்பாராயினர். சில திருப்பதிகளுக்குத் தென்மொழிப் புராணங்களும் தோன்றியுள்ளன. இங்ஙனம் புராணங்களைப் பெறாதேயிருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அன்போடு போற்றி வணங்கி அவரவர் நினைத்த யாவகைப் பேறுகளையும் எய்தவுரிய நிலைக்களங்களாக அமைந்த பல தலங்கள் இன்றும் நம் நாட்டில் உண்டு. இவை சில புதுப் பிரபந்தங்களைப் பெற்று விளக்கமுறுவதும் உண்டு.

திருவரங்கத்திற் பேரன்பு பூண்டிருந்த பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் என்ற திவ்விய கவிஞரும், திருவருணையிற் பேரன்பு பூண்டிருந்த எல்லப்ப நாவலர் என்ற புலவர் பெருமானும் இயற்றிய பல சிறு பிரபந்தங்கள் உண்டு. திருப்புகழ்ச்செல்வர் அருணகிரியார் அமுதமய வாக்கின் அருமையைத் தமிழ்பேசும் குழவிகளும் அறியும். பட்டினத்தடிகள், தாயுமானவர், இராமலிங்கசுவாமிகள் முதலிய பெரியோர் அருளிய செய்யுட் செல்வங்கள் பக்திப் பெருநெறிக்கு இடையிடையிட்ட தூண்டா விளக்கங்களாக உதவுகின்றன. நல்லோர் சென்ற தெறியைப் பின்னோரும் பின்பற்ற முயல்வது இயல்பே என்பதனைச் சென்ற நான்கைந்து நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் எழுந்த பல அந்தாதி, கலம்பகம், தூது, உலா, கோவை முதலிய பிரபந்த வகைகள் நன்கு விளக்குகின்றன.

இந்நாளைய அறிஞர் பலர் 'பிரபந்தங்கள் இயற்றுவதும் இறைவனை வழுத்துவதும் பழைய முறை; உண்மைப் புலமை இருப்பின் அது புதுப்புது நெறிகளில் நுழைந்து - புதுப்புது நலன்களை விளக்கி மொழியின் ஆற்றலை வளர்க்க வேண்டும்,' என்பர். இஃது உண்மையே என்பதை நன்கு உணர்ந்து, புதுக் கவிதையுலகில் மகுடம் பூண்ட திரு. சுப்பிரமணிய பாரதியார் புதுமை வழிகளிற் சந்தங்களைப் படைத்துக்கொண்டு பல புதுப் பொருள்களைப் பற்றிக் கவிதைகள் புனைந்தனர்.

புதித்துறைக்கு அடிகோலிவைத்த அப்புலவர் கவிதைகளிற் பெரும்பாலன பழைய நெறிக்கு அரணாக நிற்பன என்று ஒருவர் கூறத் துணிந்தால், நவயுகச் செல்வர்கள் நகையாதிரார். அவர் நகைப்பிலும் உண்மை அதுவே என்று துணிந்து கூறலாம். வேதாந்தப் பாட்டுக்கள், கண்ணன் பாட்டுக்கள், தேவி கீதங்கள் முதலியவை பழைய நெறியைப் புதுவுருவத்தில் விளக்குவன, பாஞ்சாலி சபதமும் ஸ்வசரிதையும் பழமையை மறைத்த புதுமை முறைபொருந்தியமைந்தன.

திருப்பள்ளியெழுச்சி, திருத்தசாங்கம், நவரத்தின மாலை, தோத்திரப் பாடல்கள் என்பவை முழுவதும் பழைய நெறியையே பின்பற்றி அமைந்தன. பிற பாட்டுக்கள் புதுமை விளக்க வந்தவை என்று கூறலாம். இங்ஙனம் கூறுவதால் பாரதியார் புதுமை மணத்துக்கு ஒரு குறையும் விளைந்து விடாது, பழமையை முற்றிலும் வெறுத்து ஒதுக்கி நிமிர்ந்து தனித்து நிற்கும் ஆற்றல் புதுமைக்கு இல்லையென்பதே விளங்கும். பழமையும் புதுமையும் வலக்கரமும் இடக்கரமும் போல இணைந்தேயிருப்பது உலக இயல்பு என்பதை உயிர்வகை ஒவ்வொன்றிலும் காண்கிறோம். அங்ஙனமே உயிர்ச்சக்தியுள்ள கவிதைச்செல்வமும் இருமையும் பொருந்த அமைவதேயாகும் என்பதை அறிஞர் ஏற்றுக்கொள்வர். இந்த உண்மையை உள்ளத்திற்கொண்டு செய்யுட் செல்வத்திற்றிளைக்க விரும்புவோர் தத்தமக்கு எவ்வெத்துறையில் மிக்க சுவை தோன்றுமோ அவ்வத்துறையிலே முயற்சி புரிந்து பயன்பெற நினைப்பதே அடைவாகும்.

மோனை எதுகை முதலிய முட்டுக்கட்டைகள் வளருங் கவிதைக்குத் தடைவிளைக்கும் என்பது மலையாளிகள் கருத்து ஆகும். பாரதியார் புதுமைக்கவிதை ஒவ்வொன்றிலும் மோனை எதுகைகள் முத்துமுத்தாக அமைந்திருப்பதை, அவற்றை அனுபவித்துப் பாடுவோர் அறியாதிருக்க இயலாது. ஆரிய மொழிக்கும் அதன் இனமாகிய பிறமொழிகளுக்கும் இன்றியமையாத செய்யுளங்கம் என்று கருதப்பெறாத மோனை எதுகைகளே தமிழ்ச்செய்யுளின் தனிச்சிறப்பை விளக்குவன. இவற்றின் பெருமையை மதியாது தமிழுக்கு இவை வேண்டா என்று உரைக்கத் துணிவோர் தமிழ்மகளின் உயிர் நிலையை அறிந்து தமது கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். சங்கச்செய்யுளில் இந்த நியதிகள் இல்லையே என்பார்க்கு, அவற்றின் நடையும் பிற்காலச்செய்யுள் நடையும் வெவ்வேறாக இருப்பதும் இவற்றின் போக்கே மாறியிருப்பதும், நோக்கமே வெவ்வேறு வகையாய் அமைந்திருப்பதுமே சிறந்த காரணங்களாக எடுத்துக்காட்டத்தக்கனவாம்.

இனி ஒரு சிலர் "தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இந்நாளில் வேண்டுவது உரைநடையே; செய்யுள், அளவு கடந்து வளர்ந்து விட்டது; இனி அதன் வளர்ச்சியை ஒடுக்கி உரைநடையைப் பெருக்க வேண்டும்,'' என்று கூறுவது உண்டு. தமிழ்மொழி பூரண வளர்ச்சி பெற்று உலகத்தினை ஆண்ட பல நூற்றாண்டுகளின் பிறகு வளர்ச்சியும் இயக்கமும் பெற்ற மொழிகளை எடுத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்றேனும் இன்று ''எமது வளர்ச்சிக்கு உரைநடையொன்றே போதும்; செய்யுள் நடை வேண்டா,” என்று கூறுவது உண்டா? கூற நினைப்பதும் இலையே. அங்ஙனம் இருக்க, இருதுறைக்கும் போதியவளவு ஆற்றல் பெற்றிருக்கும் நம் அமுதத் தமிழ்மொழி ஒரு துறையே வளர்வது சாலும், மற்றொரு துறை அருகுக என்று நினைப்பது அறிவுடைமையின்பாற்படுமா? அயல்நாடுகளில் ஒரு நாளில் நூறாயிரக்கணக்கில் புற்றீசல் போல் எழுந்த உரைநடை நூல்கள் எல்லாம் நீண்ட வாழ்வு படைத்து உள்ளனவா? நம் நாட்டில் இந்த நூற்றாண்டிலே எத்துணை உரைநடை நூல்கள் எழுந்தன? இவற்றுள் எத்துணைய இரண்டாம் பதிப்பே பெறாது மறைந்தன? இந்தக் கணக்கை எவரேனும் சற்றுப் பொறுமையாய் எடுத்துப் பார்ப்பது உண்டா? ஒருமுறை நூறாயிரக் கணக்கில் விலையாகிய புத்தகங்கள் பிறகு தேடுவாரற்றுப் பொதுப் புத்தக சாலைகளின் மூலைமுடுக்குகளில் உறங்கிக்கிடப்பது உண்மையனுபவம் அன்றோ? ஆதலின் ஒரு நூல் நிலையான புகழ்பெறுதற்கு அதன் உள்ளுறை காரணமாகுமேயன்றி நடை காரணம் ஆகாது என்பது வெளிப்படை, செய்யுளாயினும் உரைநடையாயினும் அதனை ஆக்கியோன் உண்மைப் புலமை படைத்தவனாய் இருப்பின், அது என்றும் அழிவுறாது. சில புலவர் பல்லாயிரக் கணக்கிலே செய்யுள் செய்தும் புகழ்பெறாது மறைந்ததுண்டு. ஒன்று இரண்டு செய்யுள் இயற்றிய புலவர் சிலர் அழியாப் புகழோடு விளங்குவதுமுண்டு இதற்குக் காரணம் கூறவும் வேண்டுமோ? அவரவர் வாய்மொழியே காரணத்தை விளக்கிவிடும். செய்யுட் செல்வம் ஒரு நாட்டின் உண்மைப் பெருமையை விளக்கும் கருவியாதலால், அதன் வளர்ச்சியில் ஒவ்வொரு மகனும் ஊக்கம் கொள்ளல் வேண்டும்.

புதுமை நெறியிலே பல செய்யுட்கள் வளர்தற்குரிய இந்நாளிலே பழமை நெறிபற்றிய சில செய்யுட்கள் ஆங்காங்கு தோன்றுதலும் நலமே. மல்லிகை முல்லை சாதி சாமந்தி முதலிய மலர்களையே அணிந்து பழகிய தமிழப் பெண்மணிகள் இந்நாளில் ரோஜாமலரிலும் கனகாம்பர மலரிலும் மனத்தைச் செலுத்தித் தம் நாட்டுப் பழைய மலர்களை மறந்து வருகின்றனராயினும் கதம்பம் என்ற பெயரோடேனும் சில சமயங்களில் அவற்றையும் அணிய விரும்புகின்றனர். அங்ஙனமே புதுமைக் கவிதைகளில் உளம் புகுத்திய தமிழ் மக்கள் பழமை முறை பற்றி வரும் பிரபந்தங்களையும் அவற்றில் உள்ள சுவையை அறியும் நோக்கத்தோடு பயின்று மகிழ்வர். இம்முறையாலே, தட்சிண கோகர்ணம் என்று காந்தத்தாற் புகழப்பெற்றதும் பழமை பொலிந்த புராணம் உடையதும் புதுக்கோட்டைத் தமிழ் மன்னர் குலத்துக்கு வழிபடு தெய்வமாகிய பெரியநாயகியையும் கோகன்னநாதனையும் தன்னகம் கொண்டதுமாகிய திருக்கோகர்ணம் என்ற திருத்தலத்தைப் பற்றி முன்பு இயன்ற சில பிரபந்தங்கள் முத்தமிழிலும் உளவாதலால் நன்னாவலர் சென்ற அச்செந்நெறி பற்றியே அருள்வெள்ளம் பொழியும் திருவிழியும் அன்பரையாளும் கழன்மலருங் கொண்ட 'ஸ்ரீ பிரஹதம்பிகை' என்ற பெரியநாயகியின் துதியுருவமாக அமைந்த இப்பிள்ளைத் தமிழ் தமிழுலகிற் புகுகின்றது.

பிள்ளைத் தமிழ் இலக்கணம் நன்குணர்ந்த பெரியோர்கள் மலிந்த தமிழகத்தே தனித்தமிழரசில் இச்செய்யுளை இயற்றி அன்னைக்கு அர்ப்பணம் செய்யாத துணிவு கொண்டது, மறை மொழிகளையே மலர்களாகக்கொண்டு அருச்சிக்கும் திருவடியில் மண்ணில் விழுந்த மலர்களும் புகுதற்கு இடம் பெறும் உரிமையை நோக்கியேயாகும். "குற்றமே தெரிவார் குறுமா முனிசொற்ற பாவினும் ஓர் குறை சொல்வரால்” என்பது உண்மையே யாயினும், "பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தா சொன்னவும் பன்னப் பெறுபவோ" என்ற கம்பர் கவி முழங்குவதை உலகம் அறியும்.

ஆன்றோர் செய்யுட்களாலும் கன் மக்கள் வாய்மொழிகளா லும் கேட்டுக் கேட்டுப் பழகியிருக்கும் தமிழ் மக்களுக்கு இப்பெரிய நாயகி பிள்ளைத் தமிழின் தோற்றம் மிகையாகத் தோன்றாது.

பிரபந்தங்கள் பலவகையாமாயினும் அவற்றுள் அந்தாதி, பிள்ளைத்தமிழ், கலம்பகம், உலா, கோவை என்ற வகைகளே மிகுதியாக வழக்கில் உள்ளன. பிரபந்த வகைகளை யெல்லாம் தம் நாத்தினவு தீர நன்கு பாடிய மகாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்ற இருவகைக்கும் பல அமைத்துள்ளார்கள். அவர்கள் வைத்த வழிபற்றி இந்நூற்றாண்டிலும் சிலர் இப்பிரபந்தம் இயற்றியுளர். இவற்றையெல்லாம் ஆதியோடந்தமாகப் பயின்று இன்புறுவோர் மிகுதியாய் இல்லாத இந்நாளில், ஆழத்திலும் அகலத்திலும் நாட்டம் இன்றிச் சொல்லடுக்கால் அவையை வெருட்டும் புலமையில் மருண்ட பலர் மிக்க இந்நாளில் தமிழ் மக்கள் ஆதரவை நாடி இச்செய்யுள் வெளி வருகின்றது.

இச்செய்யுளிற் பன்னூறு குறைகள் இருக்கலாம். இலக்கண நெறிப் பிறழ்ச்சி இருக்கலாம். ஆயினும் தெய்வத் திருவருள் பெறும் கருத்து முன்னாட் புலவர்க்கு இருந்தவளவில் எட்டுணையும் குறைவில்லையென்பதே ஆக்கியோன் வணக்கத்தோடு தெரிவித்துக் கொள்வதாம். தெய்வத்தை எந்த உருவத்தால் நினைந்து, எக்காலத்தில், எந்நாட்டில், யார் பரவினாலும் அருள்வது என்பதே அதன் இயல்பாம். கண்ணனும் கீதையில் ‘என்பக்தன் அழிவுறுவானல்லன்' என்று பிரதிஞ்ஞை செய்தான். கல்மஷமிக்க சித்தமும் பாவத்திரவியத்தால் வாழும் வாழ்க்கையையும் தக்கன தகாதன அறியாப் பேதமையும் உள்ள மாந்தர்க்கு இக் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே கதியாகும் என்பது ஒரு வடமொழிச் செய்யுளின் கருத்தாம். இதுபோன்ற பல நற் கருத்துக்களை ஆன்றோர் செய்யுட்களாலும் நன்மக்கள் வாய்மொழிகளாலும் கேட்டுக் கேட்டுப் பழகியிருக்கும் தமிழ் மக்களுக்கு இப்பெரியநாயகி பிள்ளைத்தமிழின் தோற்றம் மிகையாகத் தோன்றாது.

செய்யுள் செய்யும் துறையில் முப்பது ஆண்டுகளாகப் பயிற்சி பெற்றமையாலும், பல நல்லிசைப் புலவர்களது அரும்பொருட் பேழைகளிலே புகுந்து புகுந்து சொல்லும் பொருளும் கவரும் திறம் படைத்துண்மையாலும், இறைவனருள் ஒன்றே துணையெனக் கொண்டு தொண்டைமான் நாட்டில் உத்தியோக பதவி வகித்திருக்கும் உரிமையாலும் தமிழ்த்திருப்பணி புரிவார் இனத்துள் எவ்வழிபாலேனும் கலந்து கொள்ளல் வேண்டும் என உள்ளத்தில் எழுந்த ஆர்வத்தாலும், கடலிடையில் விழுந்தாரையும் காத்தருளும் கருணைவல்லியென அப்பெருமாட்டியின் புகழ் கேட்ட செயலாலும் வாழ்வுக்கடலில் வீழ்ந்து தவிக்கும் ஒவ்வொரு உயிரையும் தனது கழற்புணையாற் கரையேற்றும் நாயகி அவளே என உணர்ந்த உறுதியாலும் இப்பிள்ளைத்தமிழை அவள் திருவடி மலரிற் சமர்ப்பிக்கின்றேன். இச் செய்யுள் இயன்று இரண்டாண்டுகள் ஆகியும் அச்சுருவம் கொடுத்து உலகிற்குதவும் அமயம் இப்பொழுதே அமைவதாயிற்று.

தமிழ் மகளின் தவப்பேறாகத் தோன்றி அரும்பணிபுரிந்து தமிழ் மக்களைத் தமக்குப் பலவழியாலும் கடப்பாடுடையராகச் செய்து இருமதிமுன் சிவபதம் புகுந்த முதுபெரும் புலவர் மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் பார்வைக்கு இச்செய்யுள் அனுப்பப் பெற்றிருந்தது. அவர்கள் அம்புலிப் பருவத்திலே சில திருத்தங்கள் தெரிவித்தார்கள். அவர்கள் விரும்பியவாறு திருத்தங்கள் எல்லாம் முறையே அமைக்கப் பெற்றன. அவர்கள் எனது வேண்டு கோட்கியைந்து ஒரு சாத்துக்கவி செய்து அனுப்பியிருந்தார்கள். அதனை இப்புத்தகம் அச்சுக்கு வரும்போது உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி எனது தமிழ்ப் புத்தகசாலையில் வைத்திருந்தேன். இறைவன் திருவருள், தமிழ்த்தாய் புலம்ப, அப்புலவர் பெருமானை அழைத்துக்கொண்டது போன்று சாத்துக்கவியையும் மறைத்து விட்டது. பலமுறை தேடியும் அகப்படவில்லை. ஆகவே இச்செய்யளுக்கு இனி எவரிடமும் சிறப்புப்பாயிரமோ சாத்துக்கவியோ கேட்பதில்லை என்ற முடிபோடு இப்பொழுது வெளியிடப் பெறுகிறது.

இப் பிரபந்தம் நிறைவேறிய பிறகு, 'கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ் என்ற பிள்ளைத்தமிழ்ப் பிரபந்தங்களும் சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் என்ற ஒரு காவியமும் நிறைவேறின. கம்பர் பிள்ளைத்தமிழ் காரைக்குடிக் கம்பர் கழகத்தில் அறிஞர் பலர் முன்னிலையில் விக்ரம ஆண்டு பங்குனி மாதத்தில் நிகழ்ந்த கம்பர் விழாவிலும் நாட்டரசன் கோட்டையில் நிகழ்ந்த கம்பர் விழாவிலும் அரங்கேறியது கம்பர் கழகத்தார் அதனை அச்சிடுவதாகக் கூறி வைத்திருக்கின்றனர். நம்மாழ்வார் பிள்ளைத்தமிழ் திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் அச்சிட ஏற்றுக்கொண்டதால் அவர்களிடம் உள்ளது. சங்கரர் பிள்ளைத் தமிழ் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் திரு முன்பு, நீடாமங்கலத்துக்கு அடுத்த பூவனூர்த் திருத்தலத்தில் சித்திரபானு சங்கர ஜயந்தியன்று அரங்கேறியது. சதாசிவப் பிரம்மேந்திர விஜயம் என்ற காவியத்தின் இரண்டாயிரம் செய்யுட்களும் நெரூரில் உள்ள சதாசிவப்பிரம்ம அதிஷ்டானத்தில் அரங்கேறின. உபநிடதச் செய்யுளும் இக்காவியமும் இந்நாளில் நெரூர்த்தலத்தில் யோக சமாதியின் பொருட்டு எழுந்தருளியிருக்கும் ஐம்மொழிப் புலமை படைத்த வேதாந்த கேசரி ஸ்ரீ பிரணவானந்த சிவப்பிரம்மேந்திரஸ்வாமிகள் திருமுன்பு படனம் செய்யப் பெற்றுப் பரம அனுக்கிரகத்துக்குப் பாத்திரம் ஆயின. “வித்வந் மண்டலத்தின் பரிதோஷம் பெறுமளவும் கவிக்குப் பிரயோக விஞ்ஞானம் சாதுவாகத் தோன்றாது" என்பது மகாகவி காளிதாசன் கருத்தாம். அவ்வுண்மையை நன்கு அறிந்து, இச்செய்யுட்களைச் சமயம் வாய்த்தபோதெல்லாம் பல பெரியோர் முன் படித்துக் காட்டியுளேன். இறைவன் திருவருளால் இவையனைத்தும் தக்க ஆதரவு பெற்று விரைவில் வெளிவந்து தமிழுலகுக்குப் பயன்படவேண்டும் என்பது எனது வேணவா ஆகும்.

சங்கத்தால், தமிழமுதம் ஊட்டி, அளியேனைத் தமிழ்ப் பணிக்கு ஆளாக்கிவைத்த மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் பேருதவியை உலகம் அறிய வெளியிடுவதே யான் அவர்கட்கு இயற்றும் சிறு கைம்மாறு ஆகும். தமிழ்மயமாய் விளங்கிய திரு. பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள் ஸ்தாபித்த தமிழ்ச் சங்கமும் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலையும் இல்லாதிருப்பின் எனக்கும் தமிழ்க்கும் தொடர்பு தோன்றுதற்கு இடம் இல்லை. ஆங்கிலக் கல்வியின் மோகம் வளரும் நாளிலே என்னைத் தமிழ்ப்பயிற்சிக்கு ஊக்கிய எனது குலதனமாகிய வறுமைக்கும் ஒரு பெருவணக்கம் உரியதாகும். இன்று எங்கள் குலத்தில் நால்வர் தமிழ்ப் பயிற்சி பெற்றவராய் இருப்பினும் தொடங்கிய நாளில் முன்னின்ற தனிப்பெருமை எனக்கேயுரியதாகும். இந்த உரிமையை ஒன்றுக்கும் பற்றாத சிறியேற்குத் தந்த தமிழ்த் தெய்வத்தின் திருவருளை என்றும் மறவேன்.

இனி இச்செய்யுள் அச்சேறிய வரலாறு சிறிது உரைக்கப்படும். ஒவ்வொரு பொருளும் விலையேறி நிற்கும் இப்பெரும் போர்க்காலத்தில் காகிதத்தின் விலை நாளுக்கு நாள் ஏறுவது நன்கு அறிந்தும், பெருநகரங்களில் என்ன விலை கொடுத்தும் காகிதம் வாங்குவதே அரிதாகத் தோன்றும் நிலைமையில், இறைவி திருவருளே இப்பிரபந்தம் வெளிவருவதற்கு ஒரு துணையைத் தந்தது. செய்ந்நன்றியை நாவாரப் போற்றி உலகம் அறியவைத்தல் நன்றி பெற்றவர்க்கும் பிறர்க்கும் நன்மை விளைக்கும் புண்ணிய கைங்கரியம் ஆதலால், இவ்வுதவி செய்தார் பெருமையைச் சிறிது உரைக்கத் துணிகின்றேன்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் உலக நலம் கருதிப் பலவகைத் தருமங்கள் இயற்றுவதிற் பயின்று பயின்று புகழ் புனைந்த புண்ணிய மரபினர் என்பது தமிழகம் நன்கு அறிந்த உண்மையாம். ஆசுர மயமாக நிகழ்ந்து வரும் இந்நாளைப் போர்க் கிளர்ச்சியால் இம்மரபினரிற் பலர் தம் செல்வத்திற் பெரும் பகுதியை இழந்தது பத்திரிகை படிப்போர் எவரும் அறிந்ததே. செல்வக் காலையில் அரும் பெருந்தருமங்கள் செய்த இக்குலத்தார் இன்றும் தரும் நோக்கமேயுடையராய் இருப்பது இனியும் விரைவிலே இவர்கள் முன்னிலைமை பெறுதற்கு ஏற்ற அறிகுறியாகும். ஆடம்பரத்திற்கென்றே தருமம் செய்வார் பலர் உண்டு, உள்ள உணர்ச்சி தூண்டலால், ஏழைகளுக்கு இரங்கித் தருமம் செய்வார் மிகச்சிலரே. ஆயிரம் செல்வர் விருந்துண்ணும் பிரபுவின் மாளிகை வாயிலில் கஞ்சிக்குக் கதறுகின்ற ஏழைகளைத் துரத்தியோட்ட நாய்கள் பல இருப்பது உண்மையே. இந்த ஆரவாரம் விரும்பாமல் தருமங்கள் புரிந்துவரும் பரம்பரையிற் பிறந்த பொருள் வணிகர் புகழ், தென்னாட்டிலும் பிறநாடுகளிலும் ஆசந்திரார்க்கம் நிகழ்கின்ற ஆலய தருமம் வித்தியாதானம் அன்னதானம், தண்ணீர்ப்பந்தர் முதலிய தருமங்களால் என்றும் நின்று நிலவும்.

புகழ்க்கே உடம்பெடுத்த பொருள்வணிகர் மரபில் பலவான்குடியில் நெடுநாளாக நிலைத்த குலம் ஒன்று உண்டு. வயிரவன்கோயிற் பிள்ளையார் வகுப்பிற்குரிமைபூண்ட இக்குலத்தாருள் உயர்திரு, ராம. கு. சுப்பிரமணியன் செட்டியார் என்ற செல்வர்க்கும் திருமதி வள்ளியம்மையாச்சி என்ற செல்விக்கும். தவப்புதல்வராகத் தோன்றிய திருவாளர், ராம. கும.சு. குமரப்ப செட்டியார் என்ற செல்வச்சீமான் இப்பிரபந்தம் அச்சிட்டு வெளியிடும் முழுப்பொறுப்பும் ஏற்றுக்கொண்டார். இவரது அன்னையார் குன்றாக் குடியில் திருவாசக மடம் அமைத்து அனுதினமும் அடியார்களுக்கு அன்னதானம் செய்துவரும் சிவநேசச் செல்வர் சிவாச்செட்டியார் என்ற பழனியப்ப செட்டியார்க்கும் கோனாபட்டு கற்பக விநாயக கலாசாலையைப் பல்லாண்டு நன்கு நடத்திய மகாதேவா என்ற முருகப்ப செட்டியார்க்கும் உடன்பிறந்த தமக்கையார் ஆவர். இவரது தந்தையாரும் இக்குலத்தாரும் பலவான்குடியில் திருவாசக பாடசாலை குமரகணபதி கோயில், திருக்குளம், நந்தவனம் முதலிய சிவதருமங்களில் ஈடுபட்டுள்ள பெருங்குணமணிகள் ஆவர். முதுமொழிக்காஞ்சி மூதுரை நல்வழி என்ற நீதிநூல்களின் பதிப்பு ஒன்று இவர் தந்தையாரால் தரும வெளியீடாகக் கற்பக விநாயக கலாசாலையின் மூலம் வெளி யாகியது.

ஆண்டில் இளைஞரேயாயினும் அறவுள்ளத்திற் பெரியாராகிய இவர் சிவபுராணத் திருவகவலை மாணிக்கவாசகர் குருபூசை வெளியீடாகத் தருமமாக வெளியிட்டுப் பலர்க்கும் உதவினர். பிரதோடவிளக்கம் என்னும் வசன நூலும் இவர் உதவியால் சிவநேசச் செல்வர் வெளியீடாகப் பரோபகாரமாக வெளிவந்துள்ளது. சைவசித்தாந்த சமாஜத்தார் திருவாசகப்பதிப்புக்கு உரிய பொருளுதவியை முன்பணமாக இவரே மனமுவந்து செய்துள்ளார். குன்றாக்குடியைச் சேர்ந்த சண்முகநாதபுரத்தில் ஷண்முக வித்தியாசாலைத் தருமத்தையும் நன்கு நடத்தி நிர்வகித்து வருகின்றார். திருவையாறு அரசர் கல்லூரியிலே பயிலும் தமிழ் மாணவருள் ஒருவனுக்கு வேண்டிய எவ்வகை யுதவியும் இவர் செய்துவருகின்றார். குன்றாக்குடி மலையடிவாரத்தில் திரு நந்தா விளக்குத் தருமம் ஒன்று செய்துள்ளார். தமது அன்னையார் பெயரால் அமராவதி புதூர் மகளிர் இல்லத்துக்குப் பொருளுதவி செய்திருக்கிறார். கோனாபட்டு நகரத்தில் கொப்புடையம்மன் திருக்கோயில் முன் உள்ள வளைவில் மின்சார விளக்கு விளங்கத்தக்க பொருளுதவியை மனமுவந்து புரிந்துளர். இங்ஙனம் பலவகைத் தருமங்களிலும் இள மையிலேயே ஈடுபட்டு இன்னும் எவ்வெத் தருமங்களை எங்கெங்கு எவர்பொருட்டு இயற்றலாம் என்ற எண்ணமே உடையாராய் இருக்கும் இச்செல்வர் திருக்கோகர்ணம் பெரியநாயகியின் பூரண அனுக்ரகத்துக்குப் பாத்திரர் ஆகும் வண்ணம் இத்தருமத்தையும் ஏற்றுக்கொண்டது தமிழ் மக்கள் பேறேயாகும். இவரும் இவர் குலமும் நல்வாழ்வு பெருகி நீடூழி வாழ இறைவி திருவருள் நல்குக என அவள் திருக்கழல்களை மனமார இறைஞ்சுகின்றேன்.

செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானக முமாற்ற லரிது. (வள்ளுவர்)

புதுக்கோட்டை  நா.கனகராஜய்யர்,
தமிழாசிரியர்.
(சித்திரபானு, ஆனி.)      
(22-6-42. )



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...