புதுக்கோட்டை எழுத்தாளர் -188
கவிஞர் உப்பை தமிழ்க்கிறுக்கன், இயற்பெயர் ஆ.ராஜதுரை. உப்பிலிக்குடி, குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை.தமிழின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக இலக்கிய பிரவேசத்திற்கு தமிழ்க்கிறுக்கன் என்ற புனைப்பெயரோடு தனது ஊர் பெயரான உப்பிலிக்குடி என்பதை உப்பை என்று சுருக்கி உப்பை தமிழ்க்கிறுக்கன் என்று பெயர் சூட்டிக்கொண்டவர்.
மரபுக் கவிஞர். சிங்கப்பூர், மலேசியா பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர். இவரது கவிதைகளில் சந்தம் சரளமாய் நின்று நடனம் புரியும்.
2005 ஆம் ஆண்டு வெளியிட்ட செந்தில்வேல் சதகம் இவரது முதல் நூல். இதைத் தொடர்ந்து சித்திரச் சிலேடை வெண்பா, வியர்வைப் பூக்கள் என்று மரபு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்களும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தவை. மீரா பதிப்பகம் வழியே வெளிவந்தது.
சித்திரச் சிலேடை வெண்பா, மரபு வடிவில் எழுதப்பட்ட சிலேடை பாடல்களைக் கொண்ட நூல். சிலேடை கவிதைகள் மீது இவருக்கு வந்த ஈர்ப்பை இவ்வாறு என்னுரையில் எழுதுகிறார் கவிஞர்.
தற்சாற்று
சிறு வயதில் எனது தந்தையார் புலவர்கள் கதைகளை சொல்வார்கள். அப்போது கம்பர் ஒட்டக்கூத்தர், ஒளவையார், இரட்டைப்புலவர்கள், காளமேகப்புலவர் இவர்களைப் பற்றியும் இவர்கள் பாடிய பாடல்களையும் சொல்லிக் காட்டுவார்கள். அவற்றில் இந்த காளமேகப் புலவரின் சிலேடையை மிகவும் சிலாகித்துக் கூறுவார்கள். அப்போது நான் அது எப்படி வாழைப்பழமும் பாம்பும் ஒன்றாகும் என்பேன். அதற்கு எனது தந்தையார் நீண்ட நேரம் விளக்கம் தருவார். இதே கதைகளை பலநாட்கள் மீண்டும் மீண்டும் சொல்வார். அப்போதே ஏன் நாமும் இவர்களைப் போல் பாடல் எழுதக் கூடாது என்று நினைப்பேன்.
இது எனது ஐந்து,ஆறு வயது அனுபவம். பின்னர் படிக்க முடியவில்லை, வறுமை. ஆனால் மற்ற நூல்களை நிறையப் படிப்பதுண்டு. சிலேடை எழுதிப் பார்ப்பதுண்டு. இதில் வெறும் இலக்கியச் சுவைக்காக சிலேடை எழுத வேண்டுமா? சமூக நலக்கருத்துக்களை ஏன் பாடக் கூடாது என சிந்தித்தேன். அதாவது ஒரு செய்தியைப் பாடலாக எழுதுகிறோம். அது வலுப்பெற உவமானம் கூட்டுகிறோம். அதையே சிலேடையாக மாற்றினால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவே இந்த நூல். எழுத முயன்றபோது யாப்பிலக்கணப் பிழையில் மாட்டிக் கொண்டேன். பின்னர் சிங்கப்பூர் பாத்தேறல் இளமாறன் அவர்களிடம் யாப்பியலைக் கற்று, பின்னர் முறையாக வெண்பா எழுதினேன்.
சரி, சமூகம் சார்ந்த சிலேடைகள் மற்றும் நகைச்சுவை கலந்தும் எழுதியாகிவிட்டது. ஏதாவது புதிதாக செய்ய முடியுமா என்று சிந்தித்தேன். ஒரு சொல் இரண்டாக பொருள் கோளுவது, அதை இரண்டு படமாகக் காட்டுவது, பின் இரண்டுக்கும் வசனத்தில் இரு குறுங்கவிதைத் தருவது, பின் இரண்டையும் இணைத்து வெண்பா பாடுவது... இப்படி எழுதி என் குருநாதர் பாத்தேறலிடம் காட்டியபோது, அட, ஏனப்பா மரபுக் கவிதை எழுதவே ஆளைக் காணோம். நீ வேறு! ஏதோ குழப்புகிறாய் என்றார். பின் எழுது, இலக்கணப் பிழை இல்லாமல் பார்த்துக் கொள் என்றார். பாத்தென்றல் முருகடியான் அவர்களோ ஏற்கனவே சித்திரக்கவி என்றொரு முறை இருக்கிறது. இதுவும் ஒரு வகையாக சான்றோர் கொள்ளக் கூடும். ஒரு நூலாக செய் எனக் கூறினார். ஓவியர் கிடைக்கவில்லை. மூன்று நான்கு பேரிடம் சென்று ஓவியம் முழுமை பெறவில்லை. பின்னர் புதுக்கோட்டை அன்பிற்குரிய அண்ணன் கவிஞர் மீரா சுந்தர் அவர்கள், அன்பிற்குரிய சகோதரர் கவிஞர் சுகுமாரன்.சி அவர்களை அறிமுகப்படுத்தினார். அவர் ஓவியம் வரைந்து கொடுக்க இந்த நூல் வடிவத்தைப் பெற்றது.
சிலேடையில் இரு வகையுண்டு. செம்மொழிச் சிலேடை, ஒரு சொல் பிரிந்தோ சேர்ந்தோ ஒன்றுக்கு மேற்பட்டு பொருள் தருமாறு எழுதினால் செம்மொழிச் சிலேடை எனவும், இருவேறு பொருள்களை இணைத்துப் பாடினால் பிரிமொழிச் சிலேடை எனவும், செம்மொழிச் சிலேடை ஒரே வகையெனவும், பிரிமொழிச் சிலேடை பலவகைப்படும் (ஒன்பது வகையென நினைக்கிறேன்) என்றும் முன்னோர் வகுத்துள்ளனர். இந்த நூலில் சித்திரம் வரைந்த சிலேடைகள் ஒரு வகையாகவும், சித்திரம் இல்லாதது ஒரு வகையாகவும் புரிதல் பொருட்டு சித்திரம் இல்லாத சிலேடைக்கு சிறு விளக்கமும் தந்துள்ளேன்" என்கிறார்.
இவரது சித்திரச் சிலேடை வெண்பா முதலில் சாரல் கீதம் இதழில் வெளிவந்திருக்கிறது.
இந்நூலுக்கு அணிந்துரை முனைவர் மு. பழனியப்பன். மதிப்புரை கவிஞர் மீரா. சுந்தர், ஆனந்த ஜோதி மற்றும் சாரல் கீதம் மாத இதழ் ஆசிரியர்.
இந்நூலின் அட்டைப்படச் சித்திரச் சிலேடைக் கவிதை இவ்வாறு பாடுகிறது.
மலரின் மணந்தெரியா மந்திக் குரங்கே
மலரை மணங்கொள் மதிப்பாய்- மலரால்தான்
மண்ணிலே மென்மை மணம்வீசச் செய்கிறது
கண்ணிலே நீரைக் கற.
இப்பாடல் மலர் என்பதைப் பூவாகவும் பெண்ணாகவும் பாடுகிறது.
பாடல் -02
ஒருகிழமை ஓர்காய் ஒருபூவும் உள்ள
திரிச்சொல் எதுசொல்லத் தேடு!- குருவிற்கும்
ஆத்தாடி! உண்விடுதி அக்குழம்பில் பூசனிக்காய்
பாத்தேறல் மாணாக்கன் பா !
இப்பாடலின் விடை, பூ - சனி- காய்.
இப்பாடலுக்கு ஒர் சிறப்புண்டு. பாத்தேறல் என்பவர் கவிஞர் உப்பை தமிழ்க்கிறுக்கனின் ஆசிரியர்.
பாடல் -03
தட்டாரே தட்டும்! தரம்போகும் தட்டிவிடு
விட்டால் விழலுற்று வீணாவாய்- எட்டாரே
இட்டாரும் கெட்டாரே ஏற்றாரும் கெட்டாரே
பட்டாராய் ஆகாமல் பார்.
இங்கு, தட்டார்- தட்டு ஏந்தியவர்.
தட்டார்- சொன்ன சொல்லைத் தட்டாமல் குற்றேவல் புரிபவர்.



கருத்துகள்
கருத்துரையிடுக