புதுக்கோட்டை எழுத்தாளர் - 200
கவிச்சுடர் கவிதைப்பித்தன், இயற்பெயர் - இராஜா சுப்பையா செல்வராஜ். புதுக்கோட்டை காந்தி நகர் மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார்.பூர்வீகம் கரம்பக்குடி.இவரது தந்தையார் தீவிர திராவிட இயக்கத்தவர் என்பதால் பள்ளி வயதிலேயே பெரியார், அண்ணா , கலைஞர் மீது பற்றுகொண்டு பெரியார் சிந்தனைகளை உள்வாங்கியவர். ஐந்தாம் வகுப்பு படிக்கையில் விடுதலைத் திருநாள் விழாவில் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றவர். இப்போட்டிக்கு உரை எழுதிக்கொடுத்தவர் சந்தப் பாவேந்தர் புலவர் யா. வென்னரசு அவர்கள். இவரைப் பள்ளி ஆசானாகவும் இலக்கியத்துறையின் ஆசானாகவும் கொள்கிறார்.
1981 ஆம் ஆண்டு புதுவை அரசு பாரதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் பொருட்டு அனைத்திந்திய அளவில் கவிதைப் போட்டி நடத்துகிறது. இப்போட்டியில் பன்மொழி கவிஞர்கள் பத்தாயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். இவரது கவிதை முதல் பரிசு பெறுகிறது. குதிரைகள் பூட்டிய வண்டியில் ஒரு புறம் அன்றைய கர்நாடக முதலமைச்சர், மற்றொரு புறம் பாண்டிச்சேரி முதலமைச்சர், இவ்விருவருக்குமிடையில் கவிஞரை அமர்த்தி ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு அறிஞர்கள் சூழ் அவையில் அவருக்குப் பொற்கிழியும் மகாகவி விருதும் வழங்குகிறார்கள். கவிஞர் அந்தப் பரிசைத் தான் பெறாமல் விழாத் தலைவர் அனுமதியோடு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். "இந்த உயரிய விருதைத் தான் பெறுவதைக் காட்டிலும் என்னைக் கவிஞராக வளர்த்தெடுத்த எனது ஆசான் புலவர் யா.வென்னரசு அவர்கள் பெறுவதே பெருமை தகும்", என்று. அவரது விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.
திமுக இலக்கிய அணி மாநிலச் செயலாளர், இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகள் வகித்தவர். மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர். 1996-2001 ஆண்டு குளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வாகி சட்டப் பேரவையில் இவராற்றிய, தமிழ்நாட்டிலுள்ள தாலுக்காகளில் மூன்றாவது பெரிய தாலுகாவான குளத்தூர் இரண்டாக பிரிக்கப்பட்டு இலுப்பூர் பெயரில் தனி தாலுகா உருவாக்கப்பட வேண்டும் எனும் முதல் உரை செயல்வடிவமானது.
திமுக இலக்கிய அணி மாநிலச் செயலாளர், இலக்கிய அணி மாநிலத் துணைத் தலைவர் உள்ளிட்ட பல பதவிகள் வகித்தவர். மேனாள் திமுக சட்டமன்ற உறுப்பினர். 1996-2001 ஆண்டு குளத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகத் தேர்வாகி சட்டப் பேரவையில் இவராற்றிய, தமிழ்நாட்டிலுள்ள தாலுக்காகளில் மூன்றாவது பெரிய தாலுகாவான குளத்தூர் இரண்டாக பிரிக்கப்பட்டு இலுப்பூர் பெயரில் தனி தாலுகா உருவாக்கப்பட வேண்டும் எனும் முதல் உரை செயல்வடிவமானது.
இவர் திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் கவனத்தைப் பெற்ற ஆண்டு 1978 என்று சொல்லலாம். திருச்சி அண்ணா விளையாட்டுத் திடலில் கலைஞர் மேடையில் அன்பிலார் அனுமதியோடு கவிதை வாசிக்க, அவரது கவனத்தைப் பெறுகிறார். பிறகு 29.04.1981 அன்று புரட்சிக் கவிஞரின் பிறந்த நாள் விழாவில் கவியரசர் பொன்னிவளவன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கம் நிகழ்வில் இவர் வாசித்த கவிதையால் கலைஞரின்பால் அழுத்தமாக அறிமுகமானார்.
1982 ஆம் ஆண்டு திருவள்ளுவர் நாளன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இனமானப் பேராசிரியர் மு. அன்பழகன் அவர்கள் இவருக்குக் கவிச்சுடர் எனும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கிறார்.
புதுக்கோட்டை வளரிளம் கவிஞர்களை அடையாளம் கண்டு அவர்களை வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். இவர் அணிந்துரையுடன் பல கவிஞர்கள் நூல் வெளிக்கொணர்ந்துள்ளார்கள்.
தமிழக அரசின் பாவேந்தர் விருது (1989), திமுக முப்பெரும் விழாவில் புரட்சிக் கவிஞர் விருது (2003), தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது(2008), கவியரசர் கண்ணதாசன் விருது(2003), கவியரசர் முடியரசனார் விருது(2006), புதுக்கோட்டை திருக்குறள் கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.
கவிச்சுடர் கவிதைகள் ( முதல் தொகுதி ) எனும் இந்நூல் கனியமுது பதிப்பகம் வழியே 2010 ஆம் ஆண்டு வெளியானது. இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள், " தமிழக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தம்பி கவிதைப்பித்தன் புதுக்கோட்டையில் பிறந்தவர். தம் கவித் திறத்தால் தமிழ்க்கோட்டைத் தளபதிகளில் ஒருவராகத் தமிழகம் முழுவதும் புகழ்க்கொடி நாட்டி வருபவர். பெரும்பாலும் விருத்தப் பாடல்கள் வடிவில் மரபுக் கவிதைகளையும் சந்தப் பாடல்களையும் படைத்து வரும் இவரது கவிதைகளில் தமிழ் கொஞ்சும், படிப்போர் நெஞ்சில் மொழி, இன உணர்வு விஞ்சும் " என்று அணிந்துரைத்துள்ளார்.
அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்திருக்கும் வாழ்த்துரையில், " இந்நூல் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கவிதைகள் எழுதி, அவற்றில் முரசொலி நாளேட்டில் வெளியான கவிதைகளில் 87 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தலைவர் கலைஞர் அவர்களின் 87 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் கவிதை நூலாக ஆக்கியுள்ளார்.
கவிஞர் கவிதைப்பித்தன் அவர்கள் கல்லூரியில் படிக்கின்ற காலத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியல் பங்கு கொண்டு கவிதைகளை எழுதத் தொடங்கியவர். நூற்றுக்கணக்கான கவியரங்குகளில் உணர்ச்சியும் எழுச்சியும் மிகுந்த கவிதைகளைப் பாடிப் பாராட்டும் பெருமையும் பெற்றவர். கழகம் நடத்திய அறப்போராட்டங்கள் பலவற்றிலும் கலந்துகொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.
இந்த நூலில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் , இனமானத் தலைவர் பேராசிரியர், அண்ணல் அம்பேத்கர் மற்றும் மொழிப்போர் தியாகிகள் அனைவரைப் பற்றியும் இவர் படைத்துள்ள உணர்ச்சிப் பூர்வமான கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நூல் இளம் கவிஞர்களுக்கும் கழகத் தோழர்களுக்கும் வரலாற்றை அறிந்துகொள்ள உணர்ச்சிப் பூர்வமான கவிதை நூலாக அமைந்துள்ளது" என்று வாழ்த்தியுள்ளார்.
இந்நூலின் என்னுரையில், "பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்க வேண்டிய நான் எனது முதல் தொகுதியை இப்போதுதான் வெளியிடுகின்றேன். இனி அடுத்தடுத்து எனது நூல்கள் தொடர்ந்து வெளிவரும் " என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்பதிவின் மூலமாக கவிஞருக்கு யாம் வைக்கும் வேண்டுகோள், விரைந்து அவர் அடுத்தடுத்த கவிதைத் தொகுதிகள் தர வேண்டும் என்பதுவே!
கவிச்சுடர் கவிதைகள் ( முதல் தொகுதி ) எனும் இந்நூல் 87 கவிதைகளைக் கொண்டுள்ளது. அதில் ஒரு கவிதை :
அவர்தான் எங்கள் "தளபதி ஸ்டாலின்"
வஞ்சகம் வென்றே வழிநடத் திடுவான்!
வண்ணத் தமிழின் விலங்கொடித் திடுவான்!
நெஞ்சம் நிமிர்த்திக் களம்குதித் திடுவான்!
நேருக்கு நேர்நின்று பகைமுடித் திடுவான்!
தஞ்சம் என் போரை அரவணைத் திடுவான்!
தந்தையைப் போலே புகழ்படைத் திடுவான்!
வெஞ்சமர் வீரன்! அஞ்சுகப் பேரன்!
அவர்தான் எங்கள் "தளபதி ஸ்டாலின்"
மண்டும் இருட்டை விரட்டி யடிப்பான்!
மக்கள் பணிக்கே தன்னைக் கொடுப்பான்!
உண்டு கிடப்போர் தம்மை வெறுப்பான்!
உழைப்பில் கிடைக்கும் உயர்வை மதிப்பான்!
செண்டு மல்லிகை போலச் சிரிப்பான்!
செயல்மற வர்களை அள்ளி அணைப்பான்!
தொண்டரின் தோழன்! ஏழைப்பங் காளன்!
அவர்தான் எங்கள் "தளபதி ஸ்டாலின்!"
வெள்ளலை போலும் மேடையில் ஆர்ப்பான்!
வீரத்தி னாலே இளைஞரை ஈர்ப்பான்!
உள்ளாட் சியிலே ஒளிமழை வார்ப்பான்!
உடனடி யாகக் குறைகளைத் தீர்ப்பான்!
நல்லாட் சியிலே மாப்புகழ் சேர்ப்பான்!
நாள்தவ றாமல் கோப்புகள் பார்ப்பான்!
தெள்ளத் தெளிந்த திராவிட சீலன்!
அவர்தான் எங்கள் "தளபதி ஸ்டாலின்!"
குகைப்புலி சீற்றம் கண்ணில் தெறிக்கும்!
கோபம் இருக்கும்! குணமும் இருக்கும்!
யுகப்புயல் போலே வேகம் பிறக்கும்!
வேகத்தி லும், அவன் வியூகம் சிறக்கும்!
அகத்தினில் அண்ணா இதயம் விழிக்கும்!
ஐயா பெரியார் கொள்கை ஒலிக்கும்!
பகுத்தறி வாளன்! பைந்தமிழ்ச் சோழன்!
அவர்தான் எங்கள் "தளபதி ஸ்டாலின்"

.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக