புதுக்கோட்டை ஆவணப்பதிவுக்கு வித்திட்டவர்
( புதுக்கோட்டை எழுத்தாளர் - 131 )
சர். வில்லியம் ப்ளாக்பர்ன்
புதுக்கோட்டை
வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலாறை உள்வாங்க
முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்? புதுக்கோட்டை
வரலாற்றில் ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர் இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர்.வில்லியம்
ப்ளாக்பர்ன், மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன். முன்னவர் தஞ்சாவூரில் ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர்.
புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது
புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். இவர் புதுக்கோட்டையுடன்
தொடர்புடைய காலம் (1807 – 1825).
ஜான்
ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர். ஆங்கிலேய அரசால்
புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்ட பொலிட்டிக்கல் ஏஜெண்ட். நவம்பர் 20, 1846 அன்று இப்பதவியில்
நியமிக்கப்பட்டார்.
முன்னவர்
கடுபிடியான ஆங்கிலேய அதிகாரி. பின்னவர் தொண்டைமான் மன்னர் குடும்பத்துடன் நெருங்கிய நட்பும் உறவும்
கொண்டிருந்தவர். இவரை மன்னர் குடும்பத்தார்கள் 'அங்கிள்' என்று உறவு முறையால் அழைத்து
வந்தார்கள். இப்பதவிக்கு
வருவதற்கும் முன்பு தொழில் முனைப்பில் பங்குதாரராக இருந்தார் ஜான் ப்ளாக்பர்ன்.
கரம்பக்குடியில்
இண்டிகோ எனும் சாயப்பட்டறை மற்றும் சோப்பு
தயாரிக்கும் தொழிற்பட்டறைகள் தொடங்கப்பட்டன. இப்பட்டறையின் பங்குதாரராக ஜான் ப்ளாக்பர்ன்
இருந்தார். இந்தப் பட்டறையின் சரிபாதி பங்கு மன்னர் குடும்பத்திற்குரியது. இந்தச் சாயம்
திண்மமாக்கப்பட்டு பிரிட்டனுக்கு ஏற்றுமதியாகின.
1807 ஆம் ஆண்டு மன்னர் விஜயரகுநாத தொண்டைமான் பகதூர்
இறந்துவிடுகிறார். பிப்ரவரி1, 1807 அன்று விஜய ரகுநாத ராய தொண்டைமான் அடுத்த மன்னரார்.
இவர் மன்னராகத் தேர்வு செய்யப்பட்ட வில்லியம் ப்ளாக்பர்ன் பங்கு பெரியது.
இவரது
நிர்வாகக் காலத்தில்தான் புதுக்கோட்டையின் ஆட்சி, நிர்வாகம், மக்கள், மண், நீர்நிலை,
வனம், மரங்கள், நிலப்பரப்பு, வணிகம், வேளாண்மை குறித்த புள்ளி விபரங்கள் ஆவணமாகத் திரட்டப்பட்டன.
புதுக்கோட்டை ஆவணப் பதிவுக்கு வித்திட்டவர் இவரே. இவர் திரட்டிய புள்ளி விபரங்கள் பனை
ஓலையில் எழுதப்பட்டன.
புதுக்கோட்டை
பெருங்காடுகள் சூழ்ந்த நாடாக இருந்திருக்கிறது. வில்லியம் ப்ளாக்பர்ன் குறிப்பின்படி, மொத்த நிலத்தில் எட்டில் ஒரு பங்கு நிலம் பெருங்காடுகள். முக்கியமாக
ஆறு பெருங்காடுகள் இருந்துள்ளன.
1.
டவுன் பாரஸ்ட் ( பெரியவளைக்காடு – மேற்கு,
சிறிய வளைக்காடு – வடக்கு)
2.
செங்கரைக்காடு
3.
புலிவயல், வயலோகம், பரம்புக்காடு
4.
நார்த்தாமலைக்காடு
5.
திருவரங்குளம் காடு
6.
வாராப்பூர் மற்றும் சக்கிலியன்கோட்டை காடு
இத்துடன்
வனம், மண், நில அமைப்பு, மரங்களின் வகைகள் போன்ற தகவல்களையும் ஆவணப்படுத்தினார். இந்த
ஆவணம் பிரிட்டிஷ் ஆட்சியின் உத்தரவு பேரில் நடைபெற்றது.
பிரிட்டிஷார்
தென்னிந்தியாவில் ஆழமாக காலூன்றியதன் பிறகு சில பகுதிகளின் விவரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். அப்படியாக சேகரித்த
முதல் மாவட்டம் சேலம். அப்போது தமிழகத்தில் செங்கல்பட்டு, மதுரா, திருச்சிராப்பள்ளி, சேலம், நீலகிரி, வட ஆற்காடு, தென்ஆற்காடு, கோயம்புத்தூர், திருநெல்வேலி தஞ்சாவூர் என்று
பத்து மாவட்டங்கள் இருந்தன. புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்தபோதிலும் திருச்சிராப்பள்ளி
மாவட்டத்தின் உள்ளடங்கிய பகுதியாக இருந்தது.
சேலம்
மாவட்டம் ஆவணப் பதிவைத் தொடர்ந்து தென்னிந்திய
ஆட்சிப் பகுதிகள் முழுவதும் ஆவணமாக்கல் பரவலாக்கப்பட்டது. இதன் கீழ்தான் வில்லியம்
ப்ளாக்பர்ன் புதுக்கோட்டை விவரங்களைத் திரட்டினார். இவரது ஆட்சி நிர்வாக தலையிலான அதிகாரிகள்
கிராமந்தோறும் கள ஆய்வுப்பணியில் இறங்கி புள்ளி விபரங்கள் சேகரித்து ஆவணப்படுத்தினார்கள்.
ஸ்ரீமுக வருடம் புதுக்கோட்டை சமஸ்தானம்
குறித்த ஒரு குறிப்பேடு, STATSTICAL ACCOUNT OF PUDUKKOTTAI என்கிற பெயரில் பெரும்
ஆவணம் உருவானது. பனை ஓலையில் எழுதப்பட்ட இந்த ஆவணம் 1885 ஏடுகளைக் கொண்டது. இதுவே புதுக்கோட்டை
சமஸ்தானத்தின் முதல் ஆவணமாகும்.
இந்த
ஆவணம் 2011 ஆம் ஆண்டு ஓலைச் சுவடியிலிருந்து அச்செடுத்து நூல் பிரதியாக அச்சிடப்பட்டது.
புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியராக இருந்து பதவி உயர்வு மூலம் தமிழ்நாடு
அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்ற முனைவர் ஜெ. ராஜாமுகமது மற்றும் அன்றைய புதுக்கோட்டை
அரசு அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் திரு. செ.கோவிந்தராஜ் இருவரும் 1885 ஏடுகளையும் குறிப்பெடுத்து நூலாக்கம் செய்தார்கள்.
அப்பொழுது தொல்லியல் மற்றும் அருங்காட்சியகத் துறை ஆணையராக இருந்தவர் திரு. ஸ்ரீ.ஸ்ரீதர்
இ.ஆ.ப அவர்கள்.
1813-ல் புதுக்கோட்டை ஓலைச்சுவடி புள்ளி
விபரக் கணக்கு Statstical Account Of Pudukkottai In 1813 Palm Leaf Gazetteer என்பது இந்நூலின் பெயராகும். பக்கங்கள்
- ( 698 + 14 = 712 )
இந்நூலில்
சிகந்நாதப் பிள்ளை என்கிற பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் குறித்து குறிப்பிடுகையில்
“ சிகந்நாதப் பிள்ளைக்கு கொடுத்த கணக்குக்கு சரியான கணக்கு நகல்” என்று எழுதப்பட்டுள்ளதைக்
குறிபிட்டு முன்னுரை எழுதப்பட்டுள்ளது. சிகந்நாதபிள்ளை
அப்போதைய தொண்டைமான் ஆட்சியில் ஒரு முகவராக இருந்திருக்கலாம் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்நூல்
13 சங்கதிகள் ( செய்திகள் ) அடிப்படையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கதி 1 – தாலுகாவின் அமைவிடம், எல்லைகள்,
பரப்பரவு
சங்கதி 2 – தாலுகாவின் உட்பிரிவுகள்
சங்கதி 3 – கோட்டைகள், பட்டணங்கள், ஊர்ப்பெயர்கள்
சங்கதி 4 – ஆறுகள், கால்வாய்கள்
சங்கதி 5 – கண்மாய்கள்
சங்கதி 6 – ஊத்துகள், ஊரணிகள், தீர்த்தங்கள்,
தெப்பங்குளங்கள்
சங்கதி 7 – மலைகள், கரடுகள்
சங்கதி 8 – கோவில்கள், மண்டபங்கள், கோபுரங்கள்,
வீடுகள், நெசவுத்தறிகள்
சங்கதி 9 – காடுகள், தோப்புகள், மரவகைகள்
சங்கதி 10 – பாதைகள், பெருவழிகள்
சங்கதி 11 – கனிம வளம்
சங்கதி 12 – விளை நிலங்களுக்கு வகை,
தரம், விளை பொருட்கள்
சங்கதி 13 – வாணிபம், ஏற்றுமதி
புதுக்கோட்டை
சமஸ்தானம் புதுக்கோட்டை சீமை என அழைக்கப்பட்டது. சீமை ஐந்து தாலுகாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
வடமுகம், தென்முகம், கீழ்முகம், மேல்முகம், கீழாநிலை என்பன அவை. தாலுகாவானது மாகாணம்,
கதப்பா கிராமம் என உட்பிரிவாக பிரிக்கப்பட்டிருந்தன. இன்று வடமுகம் என்பது குளத்தூர்.
மேல்முகம் என்பது பெருமாநாடு, கீழ்முகம் என்பது ஆலங்குடி, தென்முகம் என்பது புதுக்கோட்டையாக
விளங்குகிறது.
வடமுகம்
13 மாகாணங்கள் 705 கிராமங்கள்; தென்முகம் 19 மாகாணங்கள், 459 கிராமங்கள்; கீழ்முகம்
20 மாகாணங்கள், 575 கிராமங்கள்; மேல்முகம் 14 மாகாணங்கள், 712 கிராமங்கள்; கீழாநிலை
9 மாகாணங்கள், 176 கிராமங்கள் என கொண்டவை.
மண்
வகைகளில் கரம்பை, செவ்வல், பொட்டல், கரிசல், வெப்பல், மணல் என்கிற வகைபாடுகளைக் கொண்டுள்ளது.
இதன்படி கரம்பை முதல் தளம். இம்மண்ணின் பெயரால் கரம்பைக்குடி – கரம்பக்குடி அழைக்கப்படுகிறது.
இரண்டாம் தரம் செவ்வல்.
நிலங்கள்
அச்சளிவு, அனாதித்தரிசு, கல்லிடம், புஞ்சை, அச்சிக்கட்டுத் தரிசு, நத்தம் எனும் பெயராலும்
வேலி, மா, குழி எனும் அளவாலும் குறிக்கப்பட்டன.
மேலும் சமஸ்தானத்திலுள்ள மரங்கள், கால்வாய்கள், ஆறுகள், குளங்கள், தெப்பக்குளங்கள்,
தீர்த்தங்கள், மலைகள், குன்றுகள், கரடுகள், பாறைகள் இத்துடன் கோயில், கோபுரம், மண்டபம், சத்திரம், அரண்மனை,
ஓட்டுவீடு, கூரைவீடு, நெசவுத்தறிகளின் எண்ணிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த ஓலைச்சுவடியில் வருடம் இடம்பெறவில்லை. ஸ்ரீமுக வருஷம் அற்பசி மாதம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முக வருஷம் கணக்கீட்டின் படி 1813 ஆம் ஆண்டாக வருகிறது.
புதுக்கோட்டை வரலாற்றை பத்து வரலாற்று அறிஞர்களுக்கும் மேலாக எழுதியுள்ளார்கள். புதுக்கோட்டை ஆவணப் பதிவுக்கு வித்திட்டவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன் திகழ்கிறார்.
இக்கட்டுரையின்
ஆதார நூல்கள்
A GENERAL HISTORY OF THE PUDUKOTTAI STATE BY S.RADHAKRISHNA AIYAR
1813-ல் புதுக்கோட்டை ஓலைச்சுவடி புள்ளி விபரக் கணக்கு Statstical Account Of Pudukkottai In 1813 Palm Leaf Gazetteer - பதிப்பாசிரியர் டாக்டர் ஜெ. ராஜாமுகமது மற்றும் செ. கோவிந்தராஜ்.
.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக