முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்ச்செம்மல் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எழுத்தாளர்

புதுக்கோட்டை எழுத்தாளர் -221

தமிழ்ச்செம்மல் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி, (பிறப்பு - 15.08.1941). ஊர் -  திருவாரூர் மாவட்டம் காவலக்குடி. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஞானாலயா இல்லத்தில் வசித்து வருகிறார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெற்றோர் - கா.வீ.பாலசுப்பிரமணியன்,  கி.மீனாட்சி அம்மாள். துணைவியார் டோரதி கிருஷ்ணகுமார்.

ஞானாலயா என்பது இவரது இணையர் டோரதி கிருஷ்ணமூர்த்தியுடன் இணைந்து உருவாக்கிய  நூலகம். இந்த நூலகம் குறித்து இலங்கை நாளிதழ் வீரகேசரி (16.12.2014 ) இவ்வாறு எழுதியுள்ளது.

ஞானாலயா பிறந்த கதை

கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதிகள் இருவரும் அரசு துறையில் ஆசிரியப் பணி புரிந்தவர்களே என்பதால் பணிமாற்றம் காரணமாக ஊடகங்களில் பணிபுரிந்து உள்ளார்கள்.

பல இடங்களில் பணியாற்றி 1979இல் இவர்கள் புதுக்கோட்டைக்கு வந்தார்கள். இவர்கள் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகள் என்பதால், இவர்களுக்கு வாடகை வீடு தர அங்குள்ளவர்கள் விரும்பவில்லை. புதுக்கோட்டையில் ஓர் இடம் வாங்கி 1985 இல் சொந்த வீடு கட்டிக் கொண்டு முதலில் தாங்கள் சேகரித்த நூல்களை இவர்கள் தங்கள் வீட்டின் மேல் மாடியில் வைத்து காட்சி நூலகமாக அமைத்தார்கள்

ஆனால், பெரும் தொகையான நூல்களின் பாரத்தை வீட்டின் மேல் மாடி தாங்காது எனக்  கட்டடப் பொறியியலாளர் எச்சரிக்கவே வீட்டுப் பக்கத்திலேயே நிலம் வாங்கித் தமது சேமிப்பில் இருந்து 11 லட்சம் ரூபாவைச் செலவழித்து புதிய கட்டடம் கட்டி 'ஞானாலயா' எனப் பெயர் சூட்டி 1999 இல் அறிவாலயத்தைத் திறந்தார்கள்.




அறிவாலயமான 'ஞானாலயா' ஒரு சிறந்த நூலகம் எப்படி இருக்க வேண்டும்  என்பதற்கு  ஆதாரமாக திகழ்கிறது. நூலகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தங்கி மாடியிலேயே படிக்க நவீன வசதிகளுடனான அறை, தங்குபவர்களுக்கான உணவு, தேநீர் போன்றவையும் அங்கேயே தரப்படுகிறது. உணவு மற்றும் தங்குமிடத்திற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது.
சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான மறைமலை அடிகள் நூலகத்திற்கு ஈடு கொடுப்பதைப் போலப் புதுக்கோட்டையில் விளங்கும் இந்நூலகத்தில் சுமார் ஒரு லட்சம் நூல்கள் உள்ளன.

ஆங்கில நூல்கள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. இலக்கிய சிற்றிதழ்களை பொறுத்தவரை தமிழ் நாட்டில் வேறு எந்த நூலகத்திலும் இல்லாத சிற்றிதழ்கள் இங்கு உள்ளன.

ஞானாலயாவில் இருக்கும் நூல்களைப் பார்த்து நாம் வியப்படைய வேண்டி உள்ளது. தமிழில் முதலில் வெளியிடப்பட்ட 'தம்பிரான் வணக்கம்'. 1842ஆம் ஆண்டு வெளிவந்த வீரமா முனிவரின் 'சதுரகராதி' ஜி.யூ.போப் எழுதிய தமிழ் இலக்கண நூல். துணிகளில் அச்சிடப்பட்ட பகவத் கீதை 1908 இல் வெளிவந்த மகாகவி பாரதியாரின் 'சுதேச கீதங்கள்' தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர் பதிப்பித்த நூல்கள், 1924 இல் ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதி நூல்கள், 1932 இல் வெளிவந்த ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் தத்துவ நூல்கள், இப்படி 100 வருடத்திற்கும் முற்பட்ட 400க்கு மேற்பட்ட நூல்கள் பாதுகாக்கப்படுகின்றன.

அதேபோல் பழைமை வாய்ந்த பத்திரிகைச் சிற்றிதழ்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. பாரதியின் அச்சில் வெளிவந்த முதல் கவிதையான 'தனிமை இரக்கம்' கந்தசாமி கவிராயர் நடத்திய 'விவேக பானு', பாரதிதாசன் கவிதைகள் வெளிவந்த 'ஆத்ம சக்தி', வ.வே.சு.ஐயரின் 'பாலபாரதி மாதவையாவின் 'பஞ்சாமிர்தம்', ஏ.கே. செட்டியாரின் 'குமரி மலர்', வை, கோவிந்தனின் 'சக்தி', ராய. சொ.வின் 'ஊழியன்', சொ. முருகப்பா நடத்திய 'குமரன்', பெரியார் ஈ.வெ.ரா. நடத்திய ‘குடியரசு', 'விடுதலை', அறிஞர் அண்ணாவின் 'திராவிட நாடு' இப்படியான சேகரிப்புகள்.

அத்துடன் விஜயபாஸ்கரன் நடத்திய 'சரஸ்வதி. (இந்த இதழ் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது). க.நா.சு. நடத்திய இலக்கிய வட்டம் ப. ஜீவானந்தம் தொடக்கிய தாமரை இலக்கிய விமர்சனத்திற்கும் புதுக்கவிதைக்காகவும் சி.சு.செல்லப்பா நடத்திய 'எழுத்து' புதுமைப்பித்தன் பி.எஸ்.ராமையா போன்றவர்களின் படைப்புகள் இடம்பெற்ற 'மணிக்கொடி' போன்ற கடந்த கால இலக்கிய சிற்றிதழ்களுடன் இப்பொழுது தமிழ் நாட்டில் வெளிவருகின்ற அனைத்து இதழ்களையும் பார்க்க முடியும். பாரதி யுகத்தில் தோன்றிய மறுமலர்ச்சி எழுத்தாளர்கள் அனைவரின் நூல்கள் அதுவும் முதற்பதிப்பு இங்கே காணப்படுகின்றது. அறிஞர் வெ. துரைக்கண்ணன், வ. ராமசாமி (வ.ரா) புதுமைப் பித்தன் ,க.நா.சுப்பிரமணியன், பாவேந்தர் பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கல்கி கிருஷ்ணமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன்,  கரிச்சான் குஞ்சு, ஜெயகாந்தன் இப்படி இவர்களின் நூல்களை ஞானாலயாவில் பார்க்க முடிகிறது.

- இலங்கை வீரகேசரி (16.12.2014)




ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மிகச் சிறந்த கட்டுரையாளர். இவர் பல்வேறு இதழ்களில் ஆழமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1. வாருங்கள் பார்க்கலாம் கி.வா.ஜ. வின் எழுத்துலகம்
2. டி.எஸ்.எஸ்.ராஜனின் கல்கியைக் கவர்ந்த சுயசரிதை
3. பௌத்த தருமம் தமிழுக்குப் ப.ரா.வின் பங்களிப்பு
4. நாகர்கோவில் ப.சிதம்பரம் பிள்ளையின் ஆலயப் பிரவேச உரிமை
5. விக்டர் ஹியூகோவின் நாவல்கள்
6. வெ.சாமிநாத சர்மாவின் சாதனைகள்
7. நாமக்கல் கவிஞரை அவர் வாயிலாகவே அறியவைக்கும் நூல்
8. பாரதி : சமத்துவத்துக்கான ஆற்றல் மிக்கக் கருவி
9. சீர்த்திருத்தச் செம்மல் சொ.முருகப்பா
10. ஜென் என்பது என்ன?
ஆகியவை இவர் எழுதிய  கட்டுரைகளில் முக்கியமானவை.

1979 இல் கரிச்சான் குஞ்சு வெளியிட்ட ஒரே நாவலான பசித்த மானுடம் கிருஷ்ணமூர்த்தி தம்பதிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நாவலும் ,இனி
நான் ஏதாவது எழுதினால்
அவையும்
தமது பண்பட்ட
மன விரிவால்  என்னை
ஆட்கொண்ட
திரு. டோரதி கிருஷ்ணமூர்த்தி
தம்பதி
திரு.எல்.கே.ராமானுஜம்
ஆகிய மூவருடைய அன்பிற்கும் காணிக்கை
"கரிச்சான் குஞ்சு"

மேலும் 1997 இல் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் தமிழ்த்தாய் கோட்பாடு ( CONCEPT OF TAMIL THAI ) பற்றி சுமதி ராமசாமி என்பார் எழுதிய பாசன்ஸ் ஆஃப் தி டேங்க்( PASSIONS OF THE TONGUE ) என்ற ஆங்கில நூலில் இவர்கள் இருவரது உதவியைக் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் புத்தக வித்தகர் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.

இவரது கடிதங்கள் மற்றும் இவருக்கு எழுதிய கடிதங்கள் இவற்றை தொகுத்து வெளியான 'தேடலில் தெளியும் திசைகள்' எனும் நூல் முக்கியமான ஆவணமாகும். அந்நூலின் பதிப்புரை இது.



தேடலில் தெளியும் திசைகள்' என்னும் இந்நூலில் 255 கடிதங்கள் அடங்கி உள்ளன. ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுத்தாளர்களாகவும் நண்பர்களாகவும் இருந்த இலக்கிய ஆளுமைகள் எழுதிய கடிதங்கள் இவை.

கடிதங்கள் என்று சொன்னால், நினைவில் நிற்பது செய்திகள் எழுதப்பெற்ற தாள்கள்தாம். இத்தாள்கள் வடிவம் வருவதற்கு முன்னர் தாழை மடல்களிலும் பனை ஓலைகளிலும் கடிதங்கள் எழுதப்பெற்ற காலங்களும் இருந்தன. அதன் தொடர்ச்சியாகத்தான் இன்றும் தாள்களில் எழுதப்பெற்ற கடிதங்களை மடல்கள் என்று குறிப்பிட்டு வருகின்றோம்.

தாள்களில் எழுதுகிற கடித முறைக்கும் தாழை மடல்களில் எழுதுகிற கடித முறைக்கும் இடையே ஒரு பெரும் சமூக மாற்றம் நிகழ்ந்த வரலாறு புதையுண்டு கிடக்கிறது. சமூகத்தில் மேல்மட்டத்தில் இருந்தவர்களுக்கே கல்வி என்றிருந்த காலகட்டத்தில் இருந்து, கல்வி சமூகத்தில் உள்ள அனைவருக்குமான உரிமை என்னும் காலகட்டத்துக்கு மாறிய மாற்றத்தின் தேவைதான் தாள்களில் எழுதப்பெற்ற கடிதங்கள்.

அஞ்சலகம், அஞ்சல் அட்டை, உள்நாட்டஞ்சல், அஞ்சல் உறை,பதிவஞ்சல்,அஞ்சல்காரர், அஞ்சல் அதிகாரி என்னும் சொற்கள் பயன்பாடுகளின் பின்னே இயங்கிக் கொண்டிருக்கும் நிருவாக அமைப்பு முறைகள் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்தவைதாம்.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் வந்த அஞ்சல் முறையால் நேரில் பேசுவதைப் போலவே எழுத்தில் எழுதுகிற, உள்ளம் தொடுகிற முறை எழுத்துலகிற்கு அறிமுகமானது. நிருபம், லிகிதம் என்னும் சொற்கள் மன்னர் கால அதிகாரம் சார்ந்து எழுதப்பெற்ற அயல்மொழிச் சொற்கள். எளிய மனிதனும் கடிதம் எழுதுகிற வாய்ப்பு நேர்ந்துள்ள இன்றையக் காலகட்டத்தில் காயிதம், காகிதம், தபால், கடிதம் என்னும் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன.

''Letter' என்று எழுத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல், கடிதத்தைக் குறிப்பதுபோல 'எழுத்து' என்னும் மலையாளச் சொல்லும் கடிதத்தையே குறிக்கிறது. தமிழில் தான் எழுதப்பயன்படுகிற தாழைமடலின் மடல் என்கிற சொல் காகிதக் கடிதத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கடிதங்கள் மூலம் காதலை வளர்த்துக் கொண்டவர்கள், நட்பை வளர்த்துக் கொண்டவர்கள், அரசியல் உணர்வை வளர்த்துக் கொண்டவர்கள் இன்றைய அச்சுவழிப் பாடப் புத்தகங்கள் மூலம் கல்வி கற்றவர்கள்தாம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்நாட்டு விடுதலைக்கும் ஒடுக்கப்பெற்ற மக்களின் விடுதலைக்கும் போராடிச் சிறை சென்றவர்கள் எழுதிய கடிதங்கள் எழுதியவரையும் கடிதங்களைப் பெற்றவரையும் தாண்டி சமுதாயப் பொது உணர்வாக, போராட்ட உணர்வாக மாறிய கடிதங்களுக்கு எடுத்துக்காட்டு நேருவின் சிறைக்கடிதங்கள், பகத்சிங்கின் சிறைக் கடிதங்கள், ரோசாலக்சம்பர்க்கின் சிறைக் கடிதங்கள், இராஜாஜியின் சிறைக்கடிதங்கள், ஜூலியஸ்பூசிக்கின் சிறைக் குறிப்புகள் ஆகியவை குறிப்பிடத்தக்கன.

இரண்டாம் உலகப்போரில் உலக நாடுகள் இரண்டு அணியாகப் பிரிந்து நின்று, சண்டையிட்ட காலங்களில் நாடுகளின் ஆட்சித் தலைவர்களும் ஆட்சி அதிகாரிகளும் எழுதிக் கொண்ட கடிதங்கள் இப்போது வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன.

கடிதங்கள் இப்போது தாளிலிருந்து ஒளித்திரைக்கு மாறிவிட்டது. கணினி மூலமும் கைப்பேசி மூலமும் ஒரு சில
வினாடிகளுக்குள் கடிதங்கள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன. கடிதங்களை ஒளியச்சு செய்ய எடுத்துக் கொள்கிற காலத்தைவிட மிகக் குறைந்த ஒரு சில வினாடிகளுக்குள் மின்னஞ்சல்களாகச் சென்று சேர்ந்துவிடுகின்றன.

மின்னஞ்சல் கடிதங்கள் கையெழுத்து முறையையே காலாவதியாக்கி விட்டது. ஒரு காலகட்டத்தில் கையால் எழுதப்பெற்ற கடிதங்கள் ஆவணங்களாவதில் வியப்பேதும் இல்லைதான். இலக்கியக்காரர்கள் மொழி ஆளுமை மிக்கவர்கள் மட்டுமல்ல அவர்கள் உணர்வுப் படகோட்டிகள். ஆண்களை, பெண்களை, செடிகளை. மரங்களை, மலைகளை, மழையை, வெய்யிலை உருவமாக கொடிகளை. உணர்வாக மட்டுமே சித்திரிப்பவர்கள் அல்லர். அவற்றுக்குள் இருக்கின்ற உள்ளத் துடிப்பை, வேட்கைத் தகிப்பை ஊடுருவிப் பார்ப்பவர்கள் அவர்கள். எனவே, கையால் எழுதப்பெற்ற கடிதங்கள் வெறும் எழுத்துகளால் நிரப்பப்பட்டவையாக இருக்காது என்பதற்கு ஞானாலயா கிருஷ்ணமூர்த்திக்கு எழுதப்பெற்ற கடிதங்களே சான்றாக அமைந்துள்ளன.

உச்சத்தைத் தொட்டவர்களின் உணர்வு நிலைக்கு எதிரில் இருப்பவரால் உயர முடியாது. இதனால் ஏற்படும் உணர்வு ஏற்ற இறக்கம் இரு தரப்பினரிடமும் இடைவெளியையும் மௌனத்தையும் மிகுதிப்படுத்தும். ஆனால், ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியிடம் இந்தப் போக்கைக் காண முடியாது. எதிரிலிருப்பவரின் மனநிலைக்கு ஒரு குழந்தையைப் போல இறங்கி ஓடி வந்து விடுவார். அவர் பேச்சு அருவியாகக் கொட்டும். தென்றலைப் போல இதப்படுத்தும். மழையைப்போல நனைக்கும். இதனால் ஏற்படும் வியப்பு நம்மை அவரிடமிருந்து பிரிக்காது. அவரோடு மேலும் நெருக்கமாக்கும் என்பதுதான் உண்மை.

கிருஷ்ணமூர்த்தி பேசுவதைக் கேட்கும்போது, நமக்காகவே தனித்து இசைக்கப்படும் இசைக் கச்சேரி நிகழ்வு போலவே இருக்கும். இசையின் சுருதி சுத்தம்போல அவர் சொல்லும் புள்ளி விவரச் சுத்தத்தைச் சரிப்படுத்துவார் உடனிருக்கும் டோரதி அவர்கள்.

பெரியார் - நாகம்மையார், குஞ்சிதம்-குருசாமி, சாமி சிதம்பரனார்-சிவகாமி, நெ.து.சுந்தரவடிவேலு-காந்தம்மாள் என்று இணையர் பலரைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், நேரில் பார்க்கும் எடுத்துக் காட்டாக வாழும் இணையர் கிருஷ்ணமூர்த்தி-டோரதி இணையர்தான்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள கடிதங்களை எழுதியவர்கள் கிருஷ்ணமூர்த்தி-டோரதி இணையரின் குடும்ப நண்பர்கள். நெருங்கிய நட்புணர்வு கொண்டவர்கள். கிருஷ்ணமூர்த்தியும் டோரதியும் தமிழகத்தின் பல ஊர்களில் பணியாற்றினாலும் அவர்களின் வசிப்பிடமாக இருந்த ஊர்கள் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய ஊர்கள்தாம்.

இவர்கள் எந்த எந்த ஊருக்குச் சென்றாலும் இலக்கிய நண்பர்கள் அந்த அந்த ஊர்களுக்கு நேரில் செல்வார்கள். கிருஷ்ணமூர்த்தி-டோரதி இணையர் இல்லத்தில் உண்டு உறைந்து உறங்கிய நேரங்களைவிடப் பேசி, விவாதம் செய்து சண்டை போட்ட நேரம்தான் அதிகம். இவர்களுக்குள் நிகழ்ந்த விவாதங்களின் தொடர்ச்சியாகவும் ஆவணங்களாகவுமே இந்தக் கடிதங்கள் விளங்குகின்றன.


இந்தக் கடிதங்களைப் படிக்கும்போது, இவற்றை ப்ரகாஷ், ல.கி.ராமானுஜம், கரிச்சான் குஞ்சு,எம்.வி.வெங்கட்ராம் முதலியோர் கோபப்படுவதைப் போலவும் ஏக்கமுறுவதைப் போலவும், இயலாமையில் மனம் நோவது போலவும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து எழுவதைப் போலவும் பலவேறு காட்சிகள் மனத்தில் நிழலாடுகின்றன. படித்த புத்தகங்களை படிக்க வேண்டிய புத்தகங்களை புதிப்பிக்க வேண்டிய புத்தகங்களை, தேடியும் கிடைக்காத புத்தகங்களை, கிடைத்த புத்தகங்களைப் பற்றியெல்லாம் போனவர்களை கண்டங்களைக் கண்டுபிடிக்கப் போன கடலோடிகளை நினைப்பதா என்று தெரியவில்லை.

இந்நூலில் இடம் பெற்றுள்ள கடிதங்களில் - எல்லாக் குழப்பங்களும் உண்டு. தெளிவுகளும் உண்டு, வெற்றிகளும் உண்டு, தோல்விகளும் உண்டு. எல்லாவற்றையும் விட மனிதநேயமும் உண்டு. இந்தக் கடிதங்களை இயன்றவரை காலவரிசைப் படுத்திப் பதிப்பித்திருக்கிறோம். ஒவ்வோர் எழுத்தாளர் கடிதங்களையும் தனித் தனித் தொகுப்பாகத் தந்திருக்கிறோம். கடிதங்கள் தனித்தாளில் எழுதப்பட்டதா? மடல் தாளில் எழுதப்பட்டதா? உள்நாட்டு அஞ்சலில் எழுதப்பட்டதா? அஞ்சலட்டையில் எழுதப்பட்டதா? என்கிற விவரங்களையும் குறித்துள்ளோம்.

ப்ரகாஷ் ஒவ்வொன்றிலும் ரசனை மிக்கவர் என்பதைக் கடிதங்களின் உண்மைப் படிகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். பலவேறு தரத்திலான தாள்கள், பலவேறு வடிவத்திலான தாள்கள், பலவேறு வண்ணங்களிலான தாள்கள்  என வண்ண அணிவகுப்பாகவே  இருக்கும். கடிதங்களை எழுதப் பயன்படுத்திய மைகளும் பல வண்ணங்களில் ஒளி வீசும். போதுமான கால அவகாசம் கிடைத்திருந்தால் தொகுப்புப் பணி மேலும் செம்மைப்பட்டிருக்கும் என்றே தோன்றுகிறது.

அந்தந்த தேடலில் தெளியும் திசைகள்' என்னும் பெயரில் அமைந்த இந்த நூலை கிருஷ்ணமூர்த்தி - டோரதி இணையர் வெளியீடாக எழுத்தாளர்களுக்குச் செய்யும் சிறப்பாகவே பவளவிழா எண்ணுகிறேன். இந்நூலுக்குக் கடித முன்னுரை எழுதிய தஞ்சாவூர்க் கவிராயருக்கும் நூல் உருவாக்கப் பணியில் உடனிருந்து உழைத்த செல்வி ம.மதிமொழிக்கும் மற்றும்  செல்வி நித்தியகல்யாணிக்கும் நன்றி. ஞானாலயா ஆய்வு நூலகப் பணிகளை அர்ப்பணிப்புடன் செய்யும் ஊழியர் திருமதி. சுகந்திக்கும் நன்றி. ஒளியச்சுச் செய்த ஐசக், படைப்புகளைச் செம்மைப்படுத்திய இதழாளர் 'தமிழ் இலெமுரியா'மு.தருமராசனுக்கும் நன்றி.

விடாமுயற்சியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்ற கிருஷ்ணமூர்த்தி -டோரதி இணையர் பவளவிழாக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி.

இத்தகைய பெருமைக்குரிய ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். ஞானக்கடலுக்கு வாழ்த்துகள்,,,






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...