புதுக்கோட்டை எழுத்தாளர் -220
விஜயா சிவகாசிநான், ( 18.09.1940) , பெற்றோர் – இராதாகிருஷ்ணன், பாக்கியத்தம்மாள்). சிறுகதை வேந்தர் என அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் தலைவராக இருந்தவர்.
1960 முதல் சிறுகதைகள், மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள் எழுதி வருகிறார். சிறுகதை, பெருங்கதை, குறுநாவல், நாடகம், கவிதை என இவரது மொத்த படைப்புகள் – 756. 1980 ஆம் ஆண்டுகளில் இவரது சிறுகதைகள் வராத பத்திரிகைகள் இல்லை. நிறைய எழுதியவர். இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்.
பள்ளியில் படிக்கையில் புதுக்கோட்டையில் தீ அணைப்பு நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டது. இதன் முன்னிட்டு தீ அணைப்பு வாரம் என்று ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. அதற்காக நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் இவர் எழுதிய ‘ பயர் ஆபிசர் சண்முகம்’ என்கிற நாடகம் முதல் பரிசு பெற்றது. அதிலிருந்து நாடகம் எழுதுதல், நடித்தலில் பேரார்வம் கொண்டு எழுதத் தொடங்கினார்.
இவர் எழுதிய தெய்வமலர் கதை தினமலர் இதழில் தொடராக வெளி வந்தது. இதைத் தொடர்ந்து பம்பரம் என்கிற நாடகம் எழுதினார். மேலும் துணுக்குகள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். முதலில் இரா. சிவகாசிநாதன் என்று எழுதிவந்தவர் பிறகு பெயருக்கும் முன் அவரது மனைவி பெயரான விஜயா எனும் பெயரை இணைத்துக்கொண்டதன் பிறகு ‘விஜயா சிவகாசிநாதன்’ ஆனார். இவரது படைப்புகளைத் தொகுத்து, கூட்டாஞ்சோறு எனும் தலைப்பில் நூலாக வெளிவந்தது.
இவர் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். வாழ்வின் வரங்கள், பாசத்தின் சுவை.
வாழ்வின் வரங்கள் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. இந்நூலுக்கு வாழ்த்துரை புதுக்கோட்டையின் கடைசி மன்னர் வரலாற்றில் வாழும் புதுக்கோட்டை மகாராஜா ஆர். ராஜகோபாலத் தொண்டைமான் அவர்கள். நாள் – 16.10.1980.
இவரது வாழ்த்துரையில் விஜயா சிவகாசிநாதன் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர். இவருடைய சிறுகதைகள் தினமணி சுடர், தினமணி கதிர், தினமலர், தினகரன், மாலை முரசு, முதலிய தின இதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்துள்ளன. இவருடைய எழுத்துகள் சிறந்த பண்பாட்டின் அடிப்படையில், சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. இம்மாதிரி இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முறையில் பத்திரிகை நிறுவனங்கள் ஆதரவு தர வேண்டும். இவருடைய கதைகளின் தொகுப்பு ஒன்றை புதுக்கோட்டை இளம் எழுத்தாளர்களின் பேரவை வெளியிட முன்வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விஜயா சிவகாசிநாதன் மேலும் வளர்ந்து இலக்கியப் பணி செய்ய நீண்ட ஆயுளை அளிக்க அருள்மிகு அன்னை பிரகதாம்பாளை வேண்டுகிறேன், என்று வாழ்த்துரை தந்துள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கலைமாமணி டாக்டர் வாசவன் அவர்கள், எழுத்து ஜட்டி போட்டுக்கொண்டு அரை நிர்வாணமாக நிற்கும் காலம் இது. எதிலும் ஒளிவு மறைவு இல்லை. கதைகள் சதைகள் ஆயின. கற்பூரக் கடைகளில் கருவாடுகள் விற்கப்பட்டன. கற்புக்கு ஏலக் கடைகள் திறக்கப்பட்டன. கருவறைகளில் கல்லறைகள் எழுப்பப்பட்டன. நடந்தை நடந்தபடியே கூறுவதாகக் கதைத்தவர்கள் சத்தியச் சாத்தியங்களைச் சாய்த்து மகிழ்ந்தனர்
ஜட்டியே போதும் என்றுபெரும்பாலான வியாபார எழுத்தாளர்கள் இலக்கிய விற்பனைக் கடைகளைத் திறந்து கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் திரு.விஜயா சிவகாசிநாதன் நெறியான நெசவாலை ஒன்றைத் தொடங்கி துரோகத் துரியர்களால் ஆடையின்றி நின்ற எழுத்துத் திரௌபதிக்குத் துகிலை நெய்து வழங்கிப் புத்திலக்கியத்தின் மானத்தைக் காத்திருக்கின்றார், என்று எழுதியுள்ளார்.
இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் இந்நூல் நாற்பது வருடங்களாக எழுதிய கதைகளின் சேகரிப்பு என்கிறார்.
நாற்பத்து எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. வாழ்வின் வரங்கள் எனும் சிறுகதை அறுந்த செருப்பை உதறிவிட்டு நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் இளைஞனிடம், எங்கே உங்கள் செருப்பு என்கிற கேள்வி கேட்கப்படுகிறது. “ பணி செய்யுமிடம் கோவில். கோவிலுக்குள் செருப்பணிந்து வருவது தவறு என்பதால் வெளியே கழட்டிவிட்டு வந்திருக்கிறேன்” எனச் சொல்கிறார். இப்பதிலில் ஆழ்ந்துபோய் இந்த இளைஞருக்கு வேலைக்கான ஆணை வழங்கப்படுகிறது. இந்த இளைஞன் அறுந்த செருப்பை விட்டெறிந்த இடத்தைத் தேடி ஓடுகிறான். அவனது வாழ்வின் வரங்களாக செருப்புகள் திகழ்கின்றன.


கருத்துகள்
கருத்துரையிடுக