புதுக்கோட்டை எழுத்தாளர் - 232
புதுக்கோட்டை சமஸ்தானம் 1686 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தத் தொடக்கம் வரலாறு எழுதியவர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் தனியரசாக இயங்கியது. அதேநேரம் 1800 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சமஸ்தானத்தின் காவல், இராணுவம், நிதி மற்றும் நிர்வாகம் திருச்சிராப்பள்ளியை மையமாகக் கொண்டு பிரிட்டிஷார் ஆளுகையின் கீழ் இருந்தது. புதுக்கோட்டையைப் பிரிட்டிஷார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் உள்ளடங்கிய பகுதியாக நிர்வகித்தது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வந்து செல்ல தனி நுழைவு அனுமதி சீட்டுகள் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷாரின் திருச்சி மாவட்ட நிலவரைப்படத்தில் புதுக்கோட்டை உள்ளடங்கிய பரப்பாகவே வரையப்பட்டுள்ளது.
எப்.ஆர்.ஹெமிங்வே எனும் ஆங்கிலேயர்
1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் THE LIBRARY OF THE UNIVERSITY OF CALIFORNIA LOS ANGELS எனும் பிரிட்டன் நிறுவனம் பிரிட்டிஷார் ஆளுகையின் கீழுள்ள தென்னிந்தியா குறிப்பாக மெட்ராஸ் மாகாண மாவட்டங்களின் வரலாறை ஓலைச்சுவடி மற்றும் பிற ஆதார குறிப்புகளைக் கொண்டு மாவட்ட வரலாறு எழுத ஊக்குவித்தது. அப்பொழுது மெட்ராஸ் மாகாணத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு பத்து மாவட்டங்கள் இருந்தன.
முதல் மாவட்ட வரலாறாக சேலம் மாவட்ட வரலாறு அலெக்ஸாண்டர் ரீ என்பவரால் எழுதப்பட்டது. ஆனால் நூல் வடிவம் பெற காலம் தாமதமானது. தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களின் வரலாறுகள் அடுத்தடுத்து எழுதப்பட்டன. மதுரை வரலாற்றை எழுதியவர் டபுள்யூ. பிரான்சிஸ் ( W. FRANCIS , INDIAN CIVIL SERVICE ) ஆண்டு -1906. தஞ்சாவூர் மாவட்ட வரலாறு எழுதியவர் எப்.ஆர்.ஹெமிங்வே.
இருவரும் இரு மாவட்ட வரலாறுகளில் புதுக்கோட்டையுடனான உறவு, நட்புகள் குறித்து பதிவு செய்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்ட வரலாறு எழுதிய எப்.ஆர்.ஹெமிங்வே திருச்சிராப்பள்ளி மாவட்ட வரலாற்றையும் எழுதினார். அவர் எழுதிய வரலாறு MADRAS DISTRICT GAZETTEERS - TRICHINOPOLY - BY - F.R.HEMINGWAY - INDIAN CIVIL SERVICE என்பதாகும். இந்நூல் அச்சு MADRAS PRINTED BY THE SUPERINTENDENT, GOVERNMENT PRESS. ஆண்டு -1907.
இந்நூல் 1878 ஆம் ஆண்டு Mr.LOWIS MOORE, I.C.S எழுதிய ஆவணக்குறிப்பு ' DISTRICT MANUAL ' என்பதை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது. மேலும் 1911 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் புள்ளி விவரங்களின் படி முன்பு எழுதிய குறிப்புகள் திருத்தம் செய்யப்பட்டன.
இந்த வரலாறு எழுத ராய் பகதூர் வி. வெங்கையா -இன் கல்வெட்டு குறிப்புகள் பெரிதும் உதவின. மேலும் இந்த வரலாறு எழுதுவதற்கு கே. வீரசாமி ஐயர் பெரிதும் உதவினார் என்று முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர், குளித்தலை, முசிறி, நாமக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, உடையார்பாளையம் ஆகிய ஊர்கள் தாலுகாக்களாக இருந்துள்ளன. இந்நூலில் புதுக்கோட்டை ஸ்டேட் எனும் தலைப்பில் (354-374 ) இருபத்தொரு பக்கங்கள் புதுக்கோட்டை ஸ்டேட் குறித்து எழுதியுள்ளார்.
இந்நூலை எழுதுவதற்கு அவர் நான்கு முக்கிய ஆவணங்களை ஆதாரமாக கொண்டுள்ளார்.
1. MUDURA COUNTRY BY MR.NELSON
2. 1819 ஆம் ஆண்டின் புதுக்கோட்டை அரண்மனை குறிப்புகள்
3. பழங்கவிஞர் நாகு பாரதியின் கதைகள்
4. உள்ளூர் கல்வெட்டுகள்
இந்நூல் பொது விளக்கம், கனிமங்கள், காலநிலை, மழைப் பொழிவு, பஞ்சங்கள், தற்போதைய ஆளும் குடும்பத்தின் தோற்றம், பிரிட்டிஷாருடன் உடனான தொடர்பு, அரசியல் நிலைபாடு, தலைமை சாதிகள், மதங்கள், கிறித்துவ பணிகள், முக்கிய புள்ளிவிபரங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடைகள், தொழில்துறை, தொடர்புகள், நிர்வாகம், சட்டம், நில வருவாய், காடுகள், உப்பு, இதர வருவாய், சிவில், நீதி, காவல், சிறைகள், குற்றம், கல்வி, மருத்துவம், தடுப்பூசி, துப்புரவு, முக்கிய இடங்கள், அம்புக்கோவில், ஆவூர், காட்டுபாவா பள்ளிவாசல், கீழாநிலை, குடுமியான்மலை, நார்த்தாமலை, பெருங்களூர், பேரையூர், புதுக்கோட்டை, சித்தனவாசல், திருமணஞ்சேரி, திருமயம், திருவரங்குளம், விராலிமலை ஆகிய ஊர்களைச் சிறிய தலைப்புகளாக கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
இந்நூல் குறிப்பிடும் புதுக்கோட்டை பற்றிய குறிப்புகள்
பிரிட்டிஷார் அரசாங்கத்துடன் நேரடியாக அரசியல் உறவுகள் கொண்ட ஐந்து பூர்வீக மாநிலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது மாநிலமாக புதுக்கோட்டை உள்ளது. இம்மாநிலப்பரப்பு 1178 சதுர மைல்கள்.
கரடு முரடான தரை, சிறிய குன்றுகள், அடர்ந்த காடுகள், கருப்பு மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, காட்டு மாடுகள் என வன உயிர்கள் நிரம்பப் பெற்ற வனத்தைக் கொண்டது. கனிம வளங்கள் குறைவான மாநிலம். ஒரு காலத்தில் திருவரங்குளம் மற்றும் பெருங்களூர் பகுதிகளில் இரும்பு உருக்கு ஆலைகள் இயங்கியுள்ள தடங்கள் இன்றும் உள்ளன.
திருச்சியுடன் ஒப்பிடுகையில் இங்கு வெப்பநிலை குறைவு. மலேரியாவால் பெரிய பாதிப்புக்கு இப்பகுதி உள்ளாகவில்லை. மூன்று பெரும்புயல்கள் 1884, 1890 மற்றும் 1893 ஆண்டுகளில் தாக்கியுள்ளன. வடகிழக்கு பருவக் காற்றால் மழைப் பெய்கிறது. 1876 -78 காலம் பெரும் பஞ்சம்.
பதினேழாம் நூற்றாட்டின் முற்பட்ட புதுக்கோட்டையின் உள்ளூர் வரலாறு பற்றி எதுவும் உறுதியாகத் தெரியவில்லை. பழங்கால எச்சங்கள் ஏராளமாக உள்ளன. ஆனால் அந்த அதிர்ஷ்டத்தின் மீது வெளிச்சம் படவில்லை. சிலப்பதிகாரம் பாடியுள்ள கொடும்பாளூர் இம்மாநிலத்தில் உள்ளது. சமணர்கள் வாழ்ந்த சித்தனவாசல் மற்றும் விராலிமலை, குடுமியான்மலை, அம்மா சத்திரம், நார்த்தாமலை ஆகிய ஊர்களிலுள்ள கல்வெட்டுகள் இன்னும் புரிந்துகொள்ளப்படாமல் இருக்கின்றன.
சோழர், பாண்டியர், பல்லவர்களால் இப்பகுதி ஆளப்பட்டுள்ளது. தாமிர தகடுகள் அல்லது பனை ஓலைகளில் சுமார் 200 மானியங்கள் உள்ளன. இவற்றில் சில பண்டைய காலத்தைக் (கி.பி. 1108, 1100, 1288, 1378, முதலியன) காட்டுகின்றன. மீதி தொண்டைமான்களால் பதினெட்டாம் மற்றும் அதற்குப் பிந்தைய நூற்றாண்டுகளில் வழங்கப்பட்ட நிலம் தொடர்பானவை. புதுக்கோட்டைக்கு வடகிழக்கே 20 மைல் தொலைவில் உள்ள கருக்காக்குறிச்சியில் சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 400 ரோமானிய தங்க நாணயங்கள் (aurai) கண்டெடுக்கப்பட்டன. இவை முதலாம், இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. வெள்ளாறு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கிறது. இந்த ஆறறைப் பண்டைய இலக்கியங்கள் சோழ, பாண்டிய அரசுகளுக்கு இடையேயான எல்லையாகக் குறிப்பிடப்படுகிறது. பாண்டிய வாரிசுப் போரின் போது பாண்டிய மன்னன் குலசேகரன் தப்பியோடு இப்பகுதி காட்டிற்குள் மறைந்து வாழ்ந்ததற்கான குறிப்புகள் உள்ளன.
நாகு பாரதி எனும் கவிஞர்
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் தற்போதைய புதுக்கோட்டை மதுரா மற்றும் தஞ்சை நாயக்கன் மன்னர்களின் நேரடி கட்டுப்பாட்டிலும் பிறகு ராமநாட்டு சேதுபதி கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இப்பகுதி பிரிக்கப்பட்டு மருங்காபுரி ஜமீன்தார், மணப்பாறை ஜமீன்தார் மற்றும் புதுக்கோட்டையின் பல்லவராயர்கள் என்று அழைக்கப்படும் ஜமீன்தார்களின் வசம் சென்றிருக்கிறது.
புதுக்கோட்டை அரண்மனை பதிவேடுகளில் பாதுகாக்கப்பட்ட 1819 ஆம் ஆண்டின் ஆவணக்குறிப்பின்படி, தொண்டைமான்கள் இராமநாடு சேதுபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மேலும் பழந்தமிழ் கவிஞர் நாகு பாரதி ( NAGU BHATATHI )யின் கதைகள் மற்றும் உள்ளூர் கல்வெட்டு குறிப்புகள் அப்படியாக சொல்கின்றன.
இப்பகுதி பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் புதுக்கோட்டை மதுரை, தஞ்சை நாயக்கர்களின் கட்டுப்பாட்டிலும் பிறகு இராமநாதபுரம் சேதுபதியின் கட்டுப்பாட்டிலும் இருந்திருக்கிறது. இத்துடன் ஒன்றுபட்ட பகுதி மருங்காபுரி ஜமீன், மணப்பாறை ஜமீன், புதுக்கோட்டை பல்லவராயர்கள் ஆகிய பகுதியாகப் பிரிக்கப்பட்டன. கடைசியாக உருவான புதுக்கோட்டை ராமநாதபுரம் சேதுபதிக்கு அடிபணிந்த நிலமாக இருந்தது.
புதுக்கோட்டைக்கான தனிச் சட்டம்
பிரிட்டிஷாருக்கு புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் செய்த பல்வேறு உதவிகளின் அடிப்படையில் 1844 ஆம் ஆண்டு பிரிட்டிஷாரின் ஆறாம் சட்டத்தின் கீழ் இது வெளிநாட்டு பிரதேசம் என அறிவிக்கப்பட்டது.
விஜய என்கிற சொல் நாணயத்தில் குறிக்கப்பட்டது. இச்சொல் விஜய ரகுநாத தொண்டைமான் என்பதைக் குறிக்கும். இவரது காலம் 1730- 69. 1888 வரை புதுக்கோட்டை நாணயங்கள் தோரயமாக புதுக்கோட்டையிலேயே அச்சடிக்கப்பட்டன. இதன்பிறகு இங்கிலாந்தில் அச்சிடப்பட்டு வந்தன. சுங்கநிலையங்கள் நிறுவப்படவில்லை. மாநிலத்தில் 377 கிராமங்கள் உள்ளன. முஸ்லீம் 3.2, கிறித்தவம் 3.8. பெரும்பான்மை இந்து. ஆவூரில் இத்தாலியர் ஜெஸ்னிட் தந்தை ஜோசப் பெஸ்கி தங்கியிருந்து மதப் போதனையில் ஈடுபட்டுள்ளார். 1903 ஆம் ஆண்டு ஒழுங்கு முறை பதிவேடு உருவாகக்ப்பட்டது. அந்த ஆண்டு முதல் தர்பார் அதிகாரம் கிராமத்திற்கும் பரவலாகக்ப்பட்டது. புதுக்கோட்டையில் கால்நடை கண்காட்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் முதல் நிகழ்ச்சி 1903 -04 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
புதுக்கோட்டை நீர் நிலைகள்
1,31,000 ஏக்கர் நீர்பாசன சாகுபடி நிலங்கள் , 208000 ஏக்கர் உலர் நிலங்கள், நான்கு ஆறுகளின் பாசனங்கள், 190 கால்வாய்கள், 720 பெரிய குளங்கள், 3489 சிறிய குளங்கள், 18452 கிணறுகளைக் கொண்டுள்ளது. இவற்றில் கவிநாடு ஏரி இம்மாநிலத்தின் பெரிய ஏரியாகும்.
புதுக்கோட்டை தொழில்கள்
திருவப்பூரில் பட்டு, சாயம் உற்பத்தி முக்கியத் தொழிலாக இருக்கிறது. கரம்பக்குடியில் பருத்தி துணிகள் மற்றும் பாத்திரங்கள். செல்லுக்குடியில் போர்வை. பொன்னமராவதி பனை, இலை மற்றும் பாய்கள். ஆலங்குடி, கீரனூர் பகுதியில் மணி உலோக பாத்திரங்கள். கீழாநிலையில் கூடைகள். வைத்தூரில் வளையல்கள். திருவேங்கைவாசல் வீடுகளுக்கான ஓடுகள்,..என உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன.
திருச்சியிலிருந்து இரண்டு முக்கிய சாலை வசதிகள். ஒன்று கீரனூர் வழி. மற்றொன்று இலுப்பூர் மற்றும் விராலிமலை வழி.
28 அஞ்சல் நிலையங்கள்.
நிர்வாகம் திவான் கையில் இருந்துள்ளது. இவர் திவான் இன் கவுன்சில் என அழைக்கப்பட்டார். சர். ஏ. சேஷய்யா சாஸ்திரி 1886 முதல் 1894 வரை திவானாக இருந்துள்ளார்.
புதுக்கோட்டையின் முன் மாதிரியான சட்டபேரவை
1902 முதல் மைசூர் சட்டமன்றத்தை மாதிரியாகக் கொண்டு பிரதிநிதித்துவ பேரவை புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டது. பல்வேறு சமூக மக்களைக் கொண்டு 30 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டசபைக்கு நிர்வாக அதிகாரம் இல்லை. வருவாய் மற்றும் நீதி திவான் கையில் இருந்திருக்கிறது.
மாநிலம் மூன்று தாலுகாக்களாகப் பிரிக்கப்பட்டது.
1. குளத்தூர் இதன் தலைமையிடம் கீரனூர்,
2. திருமயம் 3. ஆலங்குடி.
நிலம், உப்பு, போதைப் பொருட்கள், பொதுப்பணி வழியான வருவாய் முக்கிய வருவாயாக இருந்தது. புதுக்கோட்டை வருவாயில் உப்பு வரி முக்கிய வருமானமாக இருந்தது. 1887 முதல் உப்பு வழி வருவாய் நிறுத்தப்பட்டது. இதனால் ஆண்டுக்கு ரூபாய் 38,000 இழப்பீடு ஆனது. இதற்கான நஷ்ட ஈட்டை பிரிட்டிஷ் அரசு வழங்கியது. அரசு மதுபான ஆலை இருந்தது. கள்ளுக்கடை மற்றும் பனை மரங்களுக்கு வரி விதிக்கப்பட்டன..
புதுக்கோட்டை நகரில் பத்து இடங்களில் சுங்க வரி சாவடிகள் இருந்தன. கடைத்தெரு, மாட்டுவண்டி நிறுத்துமிடங்களுக்கு வரி.
நீதித்துறை தலைமை நீதிமன்ற நீதிபதி, தலைமை மாஜிஸ்ரேட், சிறப்பு மாஜிஸ்ரேட் என மூன்றடுக்குகளாக இருந்தன.
1875 அம் ஆண்டு காவல்றை ஓழுங்கு முறை ஆணையம் நிறுவப்பட்டது. இதன் தலைமையிடம் திருச்சியாக இருந்தது. எட்டு மத்திய சிறைகள், ஏழு கிளை சிறைகள்.
1891 செப்டம்பரில் ரயில் பாதை உடைக்கப்பட்டு ரயிலில் ஏற்றிவந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
வரலாற்று ஊர்கள்
இந்நூலில் இறுதியில் அம்புக்கோவில், ஆவூர், காட்டுபாவா பள்ளிவாசல், கீழாநிலை, குடுமியான் மலை, நார்த்தாமலை, பெருங்களூர். பேரையூர், புதுக்கோட் சித்தனவாசல், திருமயம், திருவரங்குளம், விராலிமலை ஆகிய ஊர்களைப் பற்றிய குறிப்புகள் சிறிய பத்திகளாக கொடுக்கப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை வரலாற்றைப் பத்துக்கும் மேற்பட்ட வரலாற்று அறிஞர்கள் எழுதியுள்ளார்கள். இவற்றில் முதல் வரலாறு எப்.ஆர் ஹெமிங்வே எழுதிய வரலாறாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக