முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரு.ராசேந்திரன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -223

கரு.ராசேந்திரன், ( 03.03. 1940 ) பெற்றோர் - கருப்பையா – எழும்பாயி. மேலப்பனையூர். திருமயம் தாலுகா, புதுக்கோட்டை. பத்தாம் வகுப்பு முடித்து, தொலைதூரக் கல்வி மூலமாக வரலாறு முதுகலை முடித்துள்ளார். எழுத்தாளர், கல்வெட்டு ஆய்வாளர். தொல்லியல் ஆர்வலர்.




ஐந்து நூல்கள் எழுதியுள்ளார்.

1.   புதுக்கோட்டை வட்டாரக் கல்வெட்டுகள் –

2.   புதுக்கோட்டை மறவர் செப்பேடு

3. வாசிக்க வேண்டிய வரலாறு (ஆய்வுக் கட்டுரைகள்).

4.   புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டுகள் 

5.   பனையூர் சிவன் கோவிலின் வனப்பும் வரலாறும்

இது தவிர ஆய்வு கட்டுரைகள்  தொண்ணூற்று ஐந்து எழுதியுள்ளார்.

அவரிடம் அலைபேசி வழியே 03.08.2023 அன்று நான் கண்ட நேர்முகம் இது.

கேள்வி – “ ஐயா வணக்கம், உங்களுக்கு இந்த கல்வெட்டுத் துறை மீது எப்படி ஆர்வம் வந்தது?”

பதில் – “எங்கள் ஊரில் ஒரு பழைமையான சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுக்கும் முந்தைய கோவில் அது. அக்கோவிலில் நிறைய கல்வெட்டுகள் இருந்தன. பள்ளிக்கூடத்தில் படிக்கையில் அந்தக் கல்வெட்டுகளை எழுத்துக்கூட்டி வாசிப்பேன். பிறகு எங்கெல்லாம் கல்வெட்டுகள் இருக்கிறதென தேடி வாசிக்கத் தொடங்கினேன்.புதுக்கோட்டை மியூசியம் சென்று, அங்குள்ள புதுக்கோட்டை கல்வெட்டு ஆவணம் நூல் வாங்கி, நான் கண்டுபிடித்த கல்வெட்டுகள் பற்றிய குறிப்பு இருக்கிறதா எனப் பார்த்தேன். சில கல்வெட்டுகள் அதில் பதிவாகியிருந்தன. சில புதிதாக இருந்தன.அப்படியாக தேடுகையில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்குள் எண்ணூறு கல்வெட்டுகள் கண்டுபிடித்தேன்

கேள்வி – உங்களுக்குளிருந்த இந்த ஆர்வத்தை எப்படி வெளி உலகத்திற்கு கொண்டுவந்தீர்கள்?

பதில் – நான் கண்டுபிடித்த கல்வெட்டுகளைத் தமிழ்நாடு தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்தேன். அவர்கள் கல்வெட்டு இருக்கிற இடத்தைத் தேடி வந்தார்கள். அவர்களுடன் சேர்ந்து பயணித்தேன். அவர்கள் கல்வெட்டுகளை எப்படியாக வாசிக்கிறார்கள் என்று பார்த்தேன். முனைவர் ஒய். சுப்பராயலு என்கிற பேராசிரியர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கல்வெட்டுத் துறையில் பணியாற்றினார். அவர் கல்வெட்டுகளை முறையாக வாசிக்கும் முறையைச் சொல்லிக் கொடுத்தார். அவர் மூலமாக தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரி முனைவர் ராசகோபால் உடனான நெருக்கம் கிடைத்தது. அவர், நீங்கள் கண்டுபிடிக்கும் கல்வெட்டுகளை நீங்களே பதிவு செய்து நூலாக வெளியிடுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். அதன் பிறகு நானே பதிவு செய்து நூலாக வெளியிட்டேன். இவர்களுடன் மதுரை முனைவர் வேதாச்சலம், தொல்லியல் துறை அதிகாரியையும் நான் நினைவுகூர வேண்டும். இவர்களின் தூண்டுதலால் இது வரை எண்ணூறு முதல் தொள்ளாயிரம் கல்வெட்டுகள் கண்டுபிடித்துள்ளேன்.

கேள்வி – நீங்கள் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் பெருமைக்குரியதாக எதைக் கருதுகிறீர்கள்?.

பதில் - பாசனக் கல்வெட்டுகள். பாசனக் கல்வெட்டுகள் மீது இதற்கும் முன்பு வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. நான் அதைக் கண்டுபிடித்து வெளி உலகத்திற்குக் கொண்டு வந்தேன். அறுபதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடித்தேன். எல்லாம் ஆறாம், ஏழாம், எட்டாம் நூற்றாண்டு கல்வெட்டுகள்.

கேள்வி – ஓலைச்சுவடி, கல்வெட்டுகள், செப்புப்பட்டயம் மூன்றுக்கான வித்தியாசம் என்ன? ஓலைச்சுவடிக்கும் முன்னே கல்வெட்டு எழுத்துகள் வந்துவிட்டதா?

பதில் – ஓலைச்சுவடிதான் முதலில் வந்தது. ஓலைச்சுவடியின் ஆயுட்காலம் முந்நூறு ஆண்டுகள். அதன்பிறகு அதைப் படியெடுக்க வேண்டும். சில முக்கியமான செய்தியை காலத்திற்கும் தேவையான செய்திகளை கல்வெட்டுகளாக வடிக்கப்பட்டன. கல்வெட்டு பொது மக்களுக்கானது. செப்புப்பட்டயம் மன்னர்க்குரியது.

கேள்வி – ஓலைச்சுவடி, கல்வெட்டு, செப்புப்பட்டயம் மூன்றும் ஒரே எழுத்து வடிவம் கொண்டதா, மாறுபட்டதா?

பதில் – ஒரே வடிவம் கொண்டது. ஆனால் ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் எழுத்து வடிவம் மாறக்கூடியது. ஆறாம் நூறாண்டு எழுத்து வடிவமும் எட்டாம் நூற்றாண்டு எழுத்து வடிவமும் ஒன்றல்ல. எழுத்து வடிவங்களை வைத்து கல்வெட்டு வடிக்கப்பட்ட காலத்தைக் கணித்துவிட முடியும்.

கேள்வி – ஏதேனும்  அமைப்புகளில் சேர்ந்து பயணிக்கிறீர்களா?

பதில் - புதுக்கோட்டை வரலாற்றுப் பேரவை, தமிழ்நாடு தொல்லியல் கழகம், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகம் மூன்று அமைப்புகளில் சேர்ந்து பயணிக்கிறேன். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவராக உள்ளேன். இந்த அமைப்பின் நிறுவனத் செயலாளராக திரு. ஆ. மணிகண்டன் உள்ளார்.

கேள்வி – இந்தக் கல்வெட்டு கண்டுபிடிப்புகளைப் பொதுமக்களிடம் எப்படிக் கொண்டுபோய் சேர்க்கிறீர்கள்?

பதில் - முனைவர் சு. இராசகோபால் அவர்கள் பதிப்பாசிரியராகக் கொண்டு ஆவணம் இதழ் வெளியிட்டு வருகிறார். இந்த இதழ் தஞ்சாவூர் தொல்லியல் கழகத்திலிருந்து வெளிவருகிறது. இதன் தலைவர் திரு. செந்தீ நடராஜன். செயலர் பேரா. சு. இராசவேலு. நான் செயற்குழு உறுப்பினராக உள்ளேன். அதன் மூலமாக அவ்வபோது கண்டுபிடிக்கும் கல்வெட்டுகளை பிரசுரக்கிறோம்.

கேள்வி – ஓலைச்சுவடிகளைப் பாதுகாப்பவர் யார்? அச்செய்தியை எழுதுபவர் யார்?

பதில் – ஓலைச்சுவடிகளைப் பாதுக்காப்பவர்கள் திருமந்திர ஓலை நாயகம் என்று அழைக்கப்படுகிறார்கள். அதைப் பாதுகாக்கும் இடத்திற்கு ஆவணக் களரி என்று பெயர். ஓலைச்சுவடி வேலைகளை நிறைவேற்றுபவர் ஆணத்தி என அழைக்கப்படுகிறார். ஓலைச்சுவடி படியெடுப்பதில் மூவேந்திர வேளாளர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள்.

கேள்வி – உங்கள் பணிக்கான அங்கீகாரம், கவனிப்பு எப்படியாக உள்ளது?

பதில் – பெரிதும் கவனிக்கப்படுகிறது. பத்திரிகைத் துறை கல்வெட்டு கண்டுபிடிப்புகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன.  இக்கண்டுபிடிப்புகளைப் பொதுமக்கள் தேடி வந்து பார்க்கிறார்கள்.

கேள்வி – உங்களது இந்தப் பணிக்காக பாராட்டுப் பெற்றிருக்கீர்களா?

பதில் – மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது. அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த அமைப்பின் தலைவராக இருக்கிறார். சமீபத்தில் தமிழ்நாடு தொல்லியல் கழகம் ஐம்பதாயிரம் உரூபாய் பொற்கிழியுடன் வாழ்நாள் சாதனை விருது வழங்கி கௌரவித்தது. இந்ததாண்டு நடைபெறுகின்ற ஆறாவது புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்னை உட்பட ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனை வழங்கி கௌரவிக்கிறது.

வாழ்த்துகள் ஐயா. உங்கள் பணி மென்மேலும் சிறக்கவும் இன்னும் பல புதிய கல்வெட்டுகள் கண்டுபிடித்து வெளியுலகத்திற்குக் கொண்டுவரவும் வாழ்த்துகிறேன். உங்கள் பணியை வணங்குகிறேன் ஐயா. நன்றி.





 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...