முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்டர் ஜெ.ராஜாமுகமது,

 புதுக்கோட்டை எழுத்தாளர் -100

டாக்டர் ஜெ.ராஜாமுகமது, புதுக்கோட்டை ஜீவா நகரில் வசிக்கிறார். பூர்வீகம் தஞ்சாவூர் திருபுவனம், குடிபெயர்வு திருச்சிராப்பள்ளி. புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் உதவிக் காப்பாட்சியர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட 28.10.1968 முதல் புதுக்கோட்டைவாசியானார். 1980 வரை புதுக்கோட்டை அருங்காட்சியகத்தின் உதவிக் காப்பாட்சியர், 2004 வரை காப்பாட்சியர். அதன் பிறகு ஐந்து மாதங்கள் தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். 53 வயதில் முனைவர் பட்டம்.




புதுக்கோட்டை நார்த்தாமலையில் உள்ள விஜயாலய சோழீச்சுரம் எனும் கோவில் குறித்து அதுவரை சொல்லப்பட்டு இருந்த கருத்துகளில் மீளாய்வு செய்து அதை கட்டியது முத்தரையர் மன்னன் என விவரித்து எழுதினார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் ரூபாய் 2 லட்சம் நிதி நல்கையுடன் பண்டைய புதுக்கோட்டையின் வரலாறும் பண்பாடும் என்ற தலைப்பில் ஆய்வும் இந்திய அரசின் வரலாற்று ஆய்வு கழகம் ஒரு இலட்சம் நிதி உதவியுடன் புதுக்கோட்டையில் சிறுதெய்வ வழிபாடும் பண்பாடும் என்ற ஆய்வும் செய்துள்ளார். இவர் எழுதிய தமிழகத்தில் இஸ்லாம் பரவிய வரலாறு என்னும் ஆய்வு அறிக்கை தமிழகத்தில் இஸ்லாம் அமைதி வழியில் பரவியதையும் வாள் கொண்டு பரப்பினார்கள் என்பதை மறுத்தும் தெளிவுபடுத்துகிறது. இந்தப் பணியை பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை ரூபாய் முப்பதாயிரம் பரிசு வழங்கித் தமிழ்மாமணி விருது வழங்கியது. தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வாகும். தமிழகத்தில் இஸ்லாமிய கட்டடக்கலை என்னும் ஆய்வு அறிக்கை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிதி நல்கை பெற்றது.

1989 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கிராமத்தில் மதப்பிணக்கு ஏற்பட்டு கலவரம் வெடித்தது. மனிதநேய மிக்கவர்கள் எல்லாம் திரட்டிக்கொண்டு குன்றக்குடி அடிகளார் (பெரியவர்) அவர்கள் மண்டைக்காடு விரைந்தார். அந்தக் குழுவில் ஒருவராக இவரும் இருந்தார்.  இதனைத் தொடர்ந்து சர்வ மகா அமைப்பான திருவருட்பேரவையின் ஓர் அங்கமாக திகழ்ந்தார். இவரது மத நல்லிணக்கப் பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு அரசு 2012 ஆம் ஆண்டு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கியது.

இதுதவிர. வரலாற்று வித்தகர் விருது, புதுக்கோட்டை சாதனையாளர் விருது, மனிதநேய மாண்பாளர் விருது, அருங்காட்சியக செம்மல் விருது, சமூக சேவையில் சிறந்த அரசு அலுவலர் விருது, தமிழ்மாமணி விருது, சிறந்த வரலாற்று ஆசிரியர் விருது,சிறந்த ஆய்வாளர் விருது, நடமாடும் அகராதி விருது, புதுகையில் ஒளிரும் ஒரு நவரத்தினம் விருது, வரலாற்று மாமணி விருது, வரலாற்று சாதனையாளர் விருது, வரலாற்று நாயகர் விருது, மூதறிஞர் மகதி விருது,..உட்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். 18 நூல்களும் 6 குறுநூல்களும் எழுதி உள்ளார். இந்நூல்களில் புதுக்கோட்டை அரசு அருங்காட்சியக விளக்க கையேடு,  புதுக்கோட்டை தொண்டைமான் செப்பேடுகள், தமிழகத்தில் இஸ்லாம் வந்ததும் வளர்ந்ததும் வாழ்வதும் வரலாறு, தமிழகத்தில் மாலிக்காபூர் வரலாறும் திரிபுகளும் போன்ற நூல்கள் மிக முக்கியமானவை

இவர் 1992 ஆம் ஆண்டு எழுதிய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு எனும் நூல் வரலாற்று ஆய்வுகளில் ஒரு ஜனரஞ்சகமான இடத்தைப் பிடித்தது. இந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய பத்மபூஷன் திரு.கே.ஆர்.ஸ்ரீநிவாசன் (மேனாள் துணை இயக்குநர் இந்திய  அரசு தொல்லியல் துறை ) அவர்கள், இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் மையமாக அமைந்துள்ள புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து அவ் ஊரிலேயே உள்ள அருங்காட்சியத்தின் காப்பாட்சியராக பணியாற்றும் நல்வாய்ப்பினைப் பெற்று, பின்னர் இந்திய தொல்லியல் துறையில் டெபுடி டைரக்டர் ஜெனரலாக பத்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய நான், இப்பகுதியின் வரலாறு, கலை, கல்வெட்டுகள் குறித்து ஆய்வுகள், அகழாய்வுகள் செய்து பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ள காரணத்தினால் இப்பகுதியின் வரலாறு குறித்து ஓரளவு நன்கு அறிந்தவன் என்ற முறையில் புதுக்கோட்டை அருங்காட்சியர்  திரு ஜெ.ராஜாமுகமது எழுதியுள்ள இந்த நூலுக்கு அணிந்துரை அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களைவிட புதுக்கோட்டை சமஸ்தானத்தை உள்ளடக்கியுள்ள புதுக்கோட்டை மாவட்டம் தமிழக வரலாற்றின் அரும்பொருட்காட்சி கூடமாக விளங்குகிறது.

இம்மாவட்டத்திற்கு பல தனி சிறப்புகள் உண்டு. தமிழகத்தில் பெரும் கற்கால நாகரிகம் குறித்து படித்தறிய சிறந்த இடம், அதிக எண்ணிக்கையில் குகை கோயில்கள் உள்ள இடம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம், மிக அதிகமான எண்ணிக்கையில் ரோம பொன் நாணயங்கள் கிடைத்துள்ள இடம், மிக அதிகமான தொல்லியல் பழமை சின்னங்கள் காணப்படும் இடம், கோயில் கட்டடக்கலை வளர்ச்சி வரலாற்றைப் படிக்க சிறந்த இடம், சரித்திர காலத் தொடக்கத்தில் வழக்கத்தில் இருந்த தமிழ் பிராமி கல்வெட்டும் தொடர்ந்து நடைமுறைக்கு வந்த பழந்தமிழ் கல்வெட்டுகளும் நிறைந்து தமிழ் எழுத்து வளர்ச்சி வரலாற்றைக் காட்டும் இடம், இப்படியாக இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

கி.பி 7 - 8 ஆம்  நூற்றாண்டில் தொடங்கி ஆங்கிலேயரது ஆட்சிக் காலம் இறுதியாக இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்ட பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகிய அனைத்து வம்சாவளிகள் ஆட்சியும் கண்டது இப்பகுதி. அரசியல் போட்டிகள் மற்றும் போர்க்களங்களினூடேயும் இப்பகுதியை ஆண்ட மன்னர்கள், தங்களது கலையார்வத்தையும் ஆட்சிச் சிறப்புகளையும் இங்கு காணப்படும் கலை சின்னங்களிலும் கல்வெட்டுகளிலும் பதித்து வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்று காணப்பட்டாலும் ஒரே இடத்தில் காலக்கிராமத் தொடர்ச்சியாக இவை காணப்படுவது இங்குதான். கி.பி 13 ஆம் நூற்றாண்டில் சிறிது காலம் கண்ணனூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த ஹோய்சளர் காலத்துக் கல்வெட்டுகளும் மதுரை பாண்டியரின் வீழ்ச்சிக்குப் பின் அரை நூற்றாண்டே மதுரையிலிருந்து ஆட்சி செலுத்திய சூரத்தாள்கள் அதாவது சுல்தான்கள் காலத்து கல்வெட்டுகளும் இங்கு காணப்படுகின்றன. இவ்வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்திய எல்லா வம்சத்தினரின் தொடர்பையும் இப்பகுதி பெற்றிருந்தது சொல்லாமல் விளங்கும்.

இக்காலங்களில் அடுத்து அண்மை காலம் வரை சுமார் 300 ஆண்டுகள் தனியரசாக விளங்கியதும் புதுக்கோட்டை ஒன்றே ! சுருங்கக்கூறின், புதுக்கோட்டையின் வரலாறு தமிழக வரலாற்றின் ஒரு சுருக்கமான தொகுதி என்று கூறலாம்.

60 ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு பணிபுரியும்போது இப்பகுதியின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பைப் போன்று, இளைய தலைமுறையைச் சேர்ந்த திரு. ஜெ.ராஜா முகமது அவர்களுக்கும் கிட்டியுள்ளது அதை அவர் நன்கு பயன்படுத்திக் கொண்டு, ஏற்கனவே பலர் கண்டு வெளியிட்டுள்ள, இப்பகுதியின் வரலாற்றுச் செய்திகளையும் கருத்துகளையும் மறு ஆய்வுகள் செய்து, ஆய்ந்து ஆராய்ந்து, பல புதிய கருத்துகளை தெளிவான முறையில் இந்த நூலில் வெளிக்கொணர்ந்திருக்கிறார். கற்காலந்தொட்டு 1948 ஆம் ஆண்டு வரையிலான இப்பகுதியில் வரலாறு தக்க ஆதாரங்களுடன் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது .

கல்வெட்டுச் செய்திகளை ஊன்றிப்படித்துப் பல அறிய செய்திகளை ஆசிரியர் அளித்திருக்கிறார். மாவட்டத்தின் பல இடங்களிலும் காணப்படும் பழமைச் சின்னங்கள், கோயில்கள், சிற்பங்கள், ஓவியங்கள் ஆகியன பற்றி விரிவான குறிப்புகளை தந்திருக்கிறார். கல்வெட்டுகள், கோயில், கட்டிடக்கலை மற்றும் புராண இதிகாசங்கள் ஆகிய துறைகளில் ஆசிரியருக்குள்ள பயிற்சியை இவை காட்டுகின்றன.

நல்லதொரு வரலாற்று நூல் தமிழகத்திற்கு அறிமுகமாகிறது என்று சொல்லலாம். படித்து முடித்தபின்பே வைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவகையில் நல்ல தமிழ் நடையில் இந்த நூலை எழுதி நமக்களித்துள்ள அன்பர் திரு ஜெ. ராஜாமுகமது அவர்களுக்கு தமிழறிந்த நன்மக்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். படித்து பயன்பெற வேண்டிய நூல், ஆசிரியரின் ஆய்வு பணிக்கு எனது பாராட்டுக்கள். 

பல்வேறு சிறப்புக்குரிய திருவாளர் முனைவர் ஜெ.ராஜாமுகமது அவர்கள் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகிறார். வாழ்த்துகள்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...