புதுக்கோட்டை எழுத்தாளர் -226
அ. விமலா மாதவன், ( 10. 02.1972 ) , பெற்றோர் - (வீ. அருணாசலம் - சரோஜா). முனைவர் சு. மாதவன் அவர்களின் இல்லற இணையர். புதுக்கோட்டை ஜெ.ஜெ கல்லூரியில் நீண்ட காலம் பணியாற்றிய இவர் தற்போது சென்னை பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். சிறுகதையாளர், கட்டுரையாளர், கவிஞர். பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இலக்கியத் திலகம், ஆய்வுலகச் சிற்பி எனும் பட்டங்களால் பாராட்டுப் பெற்றவர்.தமிழ்விடுதூதின் பன்முகப் பரிமாணங்கள் எனும் தலைப்பில் தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்றிருக்கிறார். இதுதவிர சமூக இயங்கியல் நோக்கில் கம்பனும் வால்மீகியும் எனும் இந்நூல் எழுதியுள்ளார். இந்நூல் இரு மகா கவிஞர்களைச் சமூக நோக்கில் ஒப்பிடுகிறது.
இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் முனைவர். சண்முக. செல்வ கணபதி அவர்கள் கம்பராமாயணம், வால்மீகி இராமாயணம் இரண்டையும் ஒப்பிட்டு கம்பரின் மேன்மையைத் தெளிவுப்படுத்துகிறார்.
இந்திய நாட்டில் இதிகாசங்களாக இராமாயணமும் மகாபாரதமும் விளங்குகின்றன. இந்திய மொழிகள் அனைத்திலும் வேரூன்றிய கதைகளாக இவை விளங்குகின்றன. மொழியால் இனத்தால் வேறுபட்ட இந்தியர்களை ஒருங்கிணைக்கும் ஒருமைப்பாட்டு இலக்கியங்களாக உள்ளன. இந்திய மொழிகள் சிலவற்றின் தனி சிறப்புக்கும் காரணமாகவும் இவை விளங்குகின்றன.
மானுடத்தைச் சுற்றி சுழலவைக்கும் ஆசைகள் இரண்டு. ஒன்று, மண்ணாசை. மற்றொன்று பெண்ணாசை. மண்ணாசையின் காரணத்தால் ஏற்பட்ட போர்க்கதை மகாபாரதம் ஆகும். பெண்ணாசையால் ஏற்பட்ட விளைவு இராமாயணம் கூறுகிறது. இவ்விரு ஆசைகளும் மானுடத்தை வஞ்சிக்கும் நிலைகளில் பாரதமும் இராமாயணமும் இன்று வாழ்ந்து வரும் இலக்கியங்களாக உள்ளன.
திருமாலின் பத்து அவதாரங்களில் பரிபூரண அவதாரமாக கருதப்படுவது இராமாவதாரமும் கிருஷ்ணாவதாரமும் ஆகும். தெய்வம் மண்ணில் வந்து அவதரித்தாலும் மண்ணில் வாழும் மனிதனாக வாழ்ந்து காட்டுவது இராமாயணம். மண்ணிலே தெய்வீகத்தை நிலை நிறுத்துவது கிருஷ்ணவதாரம். இந்திய நாடு முழுவதும் வழிபடு தெய்வங்களாகவும் இவர்கள் வாழ்க்கையோடு தொடர்புடைய தலங்களும் தெய்வீகத்தை வழிபடும் கோவில்களும் வழிபாட்டுக்குரிய சாத்திரங்கள், தோத்திரங்கள், காவியங்கள், நாடகங்கள் பல தோன்றி வருகின்றன. தமிழ்நாட்டில் ராமன் கண்ணனோடு தொடர்புடைய இலக்கிய படைப்புகள் பல உள.
இராமவதாரத்தை மையமிட்ட படைப்புகளும் பல உள. சோழ நாட்டில் தேரழுந்தூரில் பிறந்த கம்பனது இராமகாதை தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு உச்சி நிலை காவியமாகும். தமிழ் இலக்கிய போக்கைக் கம்பனுக்கு முன், கம்பனுக்குப் பின் என்று பார்க்கும் நிலையில் அமைந்த ஒரு கொடுமுடி காவியமாகும்.
கம்பன் சமஸ்கிருதத்திலிருந்து மூலக்கதையைப் பெற்றவர். தேவபாஷையில் இக்கதை செய்தவர் மூவர் என்று கம்பர் குறிப்பிடுகிறார். அவர்களுள் ஆதிக்கவியாக விளங்கிய வால்மீகி. " வாங்கரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி" என்று கம்பர் குறிப்பிடுகிறார். வான்மீகி தந்த இராமாயணத்தைத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப தமிழ் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப ஒரு காவியமாக படைக்க வேண்டிய காவியச் சூழலுக்கு ஏற்ப கம்பன் இராமகாதையைத் தந்தான்.
வால்மீகி 24 ஆயிரம் சுலோகங்களில் சொன்ன இராமசரிதத்தில் கம்பன் இராமாவதாரத்தின் நோக்கமான இராவண வதத்தை மட்டும் ஆறு காண்டங்களில் சுமார் 10,300 பாடல்களில் பாடினான். வால்மீகியிடமிருந்து கதையைப் பெற்றாலும் அதனை ஒட்டியோ மொழிபெயர்த்தோ பலமொழிகளில் இராமாயணம் படைக்கப்பட்டு வந்த இந்திய இலக்கியங்களில் கம்பன் ஒருவனே அயோத்தி இராமனைச் சோழநாட்டு மன்னனாக்கி காட்டினான். அவன் காண விழைந்த சரயுநதி நம் காவிரியே. தமிழ்ப் பண்பாட்டுக்கு ஏற்ப வால்மீகியைத் தழுவி கம்பன் இராமகாதையைப் படைத்தான்.
" ஒரு கதை ஒரு நாட்டிலிருந்து பிறிதொரு நாட்டிற்கோ, பிறிதொரு மொழிக்கோ செல்கின்றபொழுது அக்கதையில் மாற்றங்கள் உண்டாதல் இயல்பே. அந்த இயல்பின் வகையால் கம்பன் தன் காவியத்தில் பல மாற்றங்களை அமைத்துள்ளான். அவ்வாறு மாற்றங்கள் செய்தமையால் கம்பன் வான்மீகியிலிருந்து விலகித் தனித்தன்மை கொண்டு விளங்குகிறான். கம்பனது தனித்தன்மையை அறியவேண்டுமெனில் வான்மீகத்தையும் கம்பனது காவியத்தையும் பயில்தல் முறையாகும்"
கம்பர் காவிய நோக்கத்திற்காகவும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்பவும் இராமாவதாரத்தைப் படைத்தான். இவன் நோக்கம் முக்கோடி வாழ்நாளும் மூன்றுடைய பெருந்தவமும் உடைய இராவணனை அழிப்பதே. இராவணனை வதம் செய்ய ஒரு வீரனைக் கம்பன் உருவாக்கினான். பாலகாண்டத்தில் இராமனின் பால பருவ நிகழ்ச்சிகளை விட அவனை ஒரு வீரனாகவும் வேள்வியின் காவலனாகவும் மிதிலையில் சீதையைக் கண்டவனாகவும் மணக்கோலம் பெற்ற மைந்தனாகவும் பரசுராமனின் செருக்கை ஒடுக்கியவனாகவும் படைக்கப்பட்டான். இராமனுக்கு முடிசூடுதலில் தொடங்கிய காவியக்களன் மீண்டும் இராமன் முடிசூடியதோடு கம்பன் முடித்து விடுவான். இங்கு வால்மீக கூறும் லவகுச வரலாறோ ஏனையவைகளோ இடம்பெறா.
காவிய நிலைக்கு ஏற்ப கம்பன் இராமகாதையைப் படைத்தான். காவியத்தின் தொடக்கத்தில் ஆற்றுப்படலம், நாட்டுப்படலம், நகரப் படலம், அரசியற்படலம் பாடியபின் இராமனின் திரு அவதாரத்தைப் பாடும் திருஅவதாரப் படலம் இடம் பெறுகிறது. மேலும், வால்மீகியில் இடம்பெறாத இரணியன் வதைப்படலம், மாயாசனகப் படலத்தையும் வேதவதிசாபம், வாலி வரத்தையும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப வால்மீகியின் கதைப்போக்கில் மாற்றம் செய்த அகலிகை வரலாறு, தாரை வரலாறு, மண்டோதரியின் முடிவு, இராமன் சீதை ஒருவரை ஒருவர் கண்ட முதற்காட்சி போன்றவற்றைக் கம்பன் படைத்தான். பாத்திரப் பண்புகள் சிறப்புறும் நிலையில் தசரதன், இராமன், சீதை இவர்கள் நிலைகளில் சில மாற்றங்களைச் செய்தான்.
காவியத்தினுடைய உச்சநிலைக்காகக் கம்பன் படைத்த இராமன்- சூர்ப்பனகை உரையாடல் மிக அற்புதக் காட்சிகளாகும். இராமனுடைய பண்புநிலை குறையாமல் அதே நேரத்தில் இராமனை இராவணனுக்கு எதிராளியாக அமைக்கக்கூடிய சூழலை உருவாக்கி இராவணனை எதிர்நிலைப் பாத்திரமாக்கிய இக்களன் கம்பனது கைவணத்தால் சிறப்புப்பெற்ற களனாகும்.
வாலி வதத்தில் கம்பன் கையாண்ட மிக அற்புதமான உத்தி படித்துப் படித்து மகிழத்தக்கதாகும். நவில்தொறும் நூல் நயம் போல இக்காதை பயில்தோறும் புதுப்புது பரிணாமத்தைக் காட்டும் பகுதியாகும். விலங்குநிலையில் வாழ்ந்த வாலியை மனித நிலைக்கு உயர்த்தி அவனைத் தெய்வமாக்கி வழிபட வைத்தவர் கம்பர்.
வடநாட்டில் இராமலீலா என்ற நிகழ்ச்சி நடைபெறும் பொழுது இராவணனை ஒரு அரக்கனாகவும் மனித சமுதாயத்தின் எதிரியாகவும் கொடூரத்தின் ஒருங்கு திரண்ட வடிவமாகவும் கண்டு அவனது கொடும்பாவியை எரிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இராவணனை-இராமனேஸ்வரனாகவும், இலங்கேஸ்வரனாகவும் தமிழ்நாடு வணங்குகிறது. இராவண காவியமும் தமிழுலகம் கண்டது. இத்தகைய உயர்வுக்குக் காரணம் கம்பனது கைவண்ணத்தால் மெருகுபெற்ற இராவணனே ஆவான். இராவணன் வீழ்ந்து கிடைக்கும்பொழுது போர்க்களத்தில் இராவணனை கண்ட மண்டோதரி இனி பூச்சூடப் போகிறவள் ஜானகியே என்று தமிழ்ப் பண்பாட்டை எடுத்துரைக்கிறாள்.
இத்தகைய ஒப்புமைமிக்க செய்திகளையெல்லாம் என் அன்பு மாணவி விரைவுரையாளர் திருமதி அ.விமலா, திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்ற காலத்தில் பெற்ற அனுபவங்களை எல்லாம் திரட்டி, "சமூக இயங்கியல் நோக்கில் கம்பனும் வால்மீகியும்" என்ற தலைப்பில் நூலாக வெளியிடுகிறார். இந்நூலில் வான்மீகத்தையும் கம்பனையும் பல இடங்கள் ஒப்பீடு செய்துள்ளார். ஒப்புமைக்குரிய காரண-காரிய விளக்கங்களையும் தந்துள்ளார். ஒப்பிலக்கிய வளர்ச்சிக்கு அடிகோலிய சமூகவியல் வழிநின்று இவ்விரு இலக்கியங்களையும் பார்க்க முயன்றுள்ளார். வீரயுகக் காலத்திற்கும் அறநெறிக் காலத்திற்கும் இடைப்பட்ட படைப்பான இராமாயணம் திகழ்வதையும் கற்புடையவனாக இராமனையும் இதற்கு எதிர்நிலையில் நின்ற இராவணனையும் இராமாயணம் காட்டும் நிலையை ஒப்பிட்டுக் காண்கிறார். இப்படைப்பின் முக்கிய நோக்கம் பிறன்மனை நோக்காப் பேராண்மை என்ற கருத்தை மையமிட்டு இராமாயணம் தோன்றிய சூழலும் வான்மீகி படைத்த சூழலும் கம்பன் காவியமாக்கிய சூழலையும் எடுத்துரைக்கிறார். தெளிவான கருதுகோளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்நூல் பலரை படிக்கவும் சிந்திக்க வைக்கும். இதுபோல நூற்களை நூலாசிரியர் மென்மேலும் படைத்திட வாழ்த்துகிறேன்
முனைவர். சண்முக. செல்வ கணபதி
சிறப்புநிலை பேராசிரியர்
இலக்கியத்துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்.


சிறந்த வரலாற்று ஆவணக் களஞ்சியமே....!
பதிலளிநீக்குவாழ்க வாழ்க வாழ்கவே....!!