முந்தைய பதிவின் தொடர்ச்சி
புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர்
கே.ஆர். வெங்கடராம ஐயர், B.A,L.T,M.R.A.S,
இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935.
புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர்.
இவர் எழுதிய வரலாறு மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன.
1. A MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I )
2. MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART I )
3. MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART II )
தொகுதி -II, பகுதி -I
MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME II PART I )
இந்நூலின் பெரும்பகுதி புதுக்கோட்டையை ஆண்ட மன்னர்கள் குறித்து பேசுகிறது. இந்நூலின் திருத்தப்பட்ட பதிப்பு -1940. மறுபதிப்பு -2002.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப. அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை ஆணையர்.
சர் வில்லியம் பிளாக் பர்னர் எடுத்த முயற்சியின் பேரில், கி.பி 1813 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தின் புள்ளிவிவரக் கணக்கு எடுக்கப்பட்டது. பனை ஓலையில் எழுதப்பட்ட புள்ளி விவரக் கணக்கு இன்று புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கி.பி 1910 ஆம் ஆண்டு அருங்காட்சியகம் மற்றும் தொல்லியல் துறை உருவாக்கப்பட்டது. இத்துறையின் கீழ் மாநிலத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை சேகரித்து ஒரு கையேட்டைத் தயாரிப்பதற்காக ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் 1920 இல் ஒரு கையேட்டைக் கொண்டு வந்தார். அந்தக் கையேடு முழுமைப்பெற்றதாக இல்லை.
பிறகு ஜூன் 1934 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு விரிவான புள்ளி விவரக் கணக்குகள் கொண்ட கையேடு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதற்காக நியமிக்கப்பட்டவர் திரு கே.ஆர். வெங்கடராம ஐயர் அவர்கள். இவரது தொடர் உழைப்பின் பேரால் புதுக்கோட்டை சமஸ்தான கையேடு முதல் தொகுதி 1938 ஆண்டு கொண்டுவரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1940 ஆம் ஆண்டு இரண்டாம் தொகுதியின் முதல் பாகம் வெளிவந்தது. இந்நூல் பழைய கற்காலம் முதல் இன்றைய கடைசி மன்னன் ராஜகோபால தொண்டைமான் காலம் வரையிலான புதுக்கோட்டை சமஸ்தான காலத்தை வரலாறாகப் பேசுகிறது.
பதினேழாம் நூற்றாண்டு மத்திய கால தென்னிந்திய வரலாறுகள் பெரியளவில் பதிவு செய்யப்படாமல் இருக்கிறது. இந்நூல் தென்னிந்திய வரலாறு குறிப்பாக பதினேழாம் நூற்றாண்டிலிருந்து 250 ஆண்டு கால வரலாறு. தமிழ்நாடு அரசின் நிதி உதவியின் பேரால் இந்நூல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது, என தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
தொகுதி -I இருபத்து இரண்டு அத்தியாயங்கள் கொண்டிருக்கும் நிலையில் இந்நூல் இருபத்து மூன்றாம் அத்தியாயம் கொண்டது.
இத்தொகுதியில் ,
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கக்காலம் - கற்காலம்- சங்கக் காலம்;
குறும்பர், வடுவர், மறவர், கள்ளர், வெள்ளாளர், முத்தரையர், பறையர், பள்ளர்,…என பதினெட்டு சாதிகள்;
பௌத்தம், சமணம்;
ஏழாம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு;
பல்லவர்கள்;
முத்தரையர்கள்;
ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு ;
சோழப் பேரரசு; பாண்டியப் பேரரசு;
பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பதினேழாம் நூற்றாண்டு; தொண்டைமான் : சமஸ்தானம் உருவாக்கம்;
ரகுநாத ராய தொண்டைமான் ( 1686- 1730)
விஜய ரகுநாத ராய தொண்டைமான் ( 1730 - 1769)
விஜய ராய ரகுநாத தொண்டைமான் ( 1769- 1789)
விஜய ரகுநாத தொண்டைமான் ( 1789 - 1807)
விஜய ரகுநாத ராய தொண்டைமான் ( 1807 - 1825)
விஜய ரகுநாத தொண்டைமான் ( 1825- 1839)
ராமச்சந்திர தொண்டைமான் ( 1839- 1886)
மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ( 1886- 1928)
ராஜகோபால தொண்டைமான் ( 1928 - )
இத்துடன் இந்நூலின் பின் இணைப்பாக புதுக்கோட்டையை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகளைப் பட்டியலிடுகிறது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் முதல் ரெசிடென்சி அதிகாரி கேப்டன் வில்லியம் ப்ளாக்பர்ன். இவர் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809 வரை அதிகாரியாக இருந்தவர். இவர் தஞ்சாவூர் ரெசிடென்சி அதிகாரியுடன் புதுக்கோட்டைக்கு கூடுதல் பொறுப்பு வகித்தவர். ரெசிடென்சி அதிகாரி என்கிற பதவி டிசம்பர் 21, 1841 வரை இருந்தது. கடைசி ரெசிடென்சி அதிகாரி டபிள்யூ. எச் பெய்லே.
இதன்பிறகு இப்பதவி பொலிட்டிக்கல் ஏஜெண்ட் என்று மாற்றப்பட்டது. இப்பதவி மாவட்ட ஆட்சியர் பதவிக்கு நிகரானது. முதல் பொலிட்டிக்கல் ஏஜெண்ட் ஜெ. ப்ளாக்பர்ன். இவர் முந்தைய வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர்.
இது தவிர மேனேஜர்ஸ், சர்க்கிள், ரெசிடென்ட் ஏஜெண்ட் என்கிற மூன்று பேர் அடங்கிய குழு அரசு நிர்வாகத்தில் இருந்திருக்கிறது. மேனேஜர் மன்னர் அல்லது மன்னர் குடும்பத்திலிருந்தும், சர்க்கிள் என்கிற பதவி மன்னர் அல்லது சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராகவும், ரெசிடென்ட் ஏஜெண்ட் பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டவராகவும் இருந்துள்ளார்கள்.
1886 ஆம் ஆண்டு திவான் என்கிற பதவி உருவாக்கப்படுகிறது. முதல் திவான் சேஷையா சாஸ்திரி. இவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து வந்தவர். இவரது பதவிக்காலம் 1886 முதல் 1894.
இவரைத் தொடர்ந்து ஆர். வேதாந்தசர்லு ( 1894 - 1899),
எ. வெங்கடராமதாஸ் நாயுடு ( 1899- 1909), சி. ராஜகோபால பிள்ளை ( 1909- 1915), கணபதி சாஸ்திரியார் ( 1915- 1930),
இதன்பிறகு மூன்று பேர் அடங்கிய திவான் இன் கவுன்சில் எனும் குழு அமைக்கப்பட்டது.
ராவ் சாகேப் ஜி. கணபதி சாஸ்த்திரி, ராவ் சாகேப் பி.எஸ். சிவஞான முதலியார் மற்றும் ராவ் பகதூர் ஈ.கே.கோவிந்தன் ( 1930 - 1931
ராவ் பகதூர் ஈ.கே. கோவிந்தன், ஆர். கிருஷ்ணமாச்சாரியார் ( 1931 - 1933).
இது தவிர இந்நூல் புதுக்கோட்டையில் இயற்றப்பட்ட, புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இலக்கியங்கள் குறித்தும் அவர்கள் இயற்றிய நூல்கள் குறித்தும் பேசுகிறது.
ஸ்ரீ சதாசிவா, இவர் சமஸ்கிருத அறிஞர். விஜய ரகுநாத ராய தொண்டைமான் அவர்களின் குரு. இவர் மூன்று சமஸ்கிருத நூல்கள் இயற்றியுள்ளார்.
1. பிரம்ம சூத்திர விருத்தி
2. யோகசூத்திர விருத்தி
3. ஆத்மவித்ய விலாசம்.
இந்நூல் ஸ்ரீரங்கத்தில் முக்கிய நூலாக விளங்குகிறது.
வீரமாமுனிவர் என்று அழைக்கப்படும் ஜோசப் பெஸ்கி ஆவூரில் தங்கி மதப்பணியுடன் இலக்கியப் பணியாற்றியுள்ளார்.
பதினெட்டாம் நூற்றாண்டில் தொண்டைமான் எதிர்கொண்ட போர்களை மையப்படுத்தி பல இலக்கியங்கள் இயற்றப்பட்டுள்ளன.
1. ராஜா தொண்டைமான் அனுராக மாலை
2. ராஜா தொண்டைமான் இரட்டைமணிமாலை
3. திருமலைராயர் கப்பல்
இதுதவிர தெலுங்கு நூல்கள் இயற்றப்பட்டுள்ளன
தெலுங்கு கவிஞர் வெங்கண்ணா ( 1769-89) தொண்டைமான் வம்சாவளி என்கிற நூலையும், அவரது மகன் சம்பையா தொண்டைமான் விஜயம் எனும் நூலையும் இயற்றியுள்ளார்கள்.
இதுதவிர
1அம்புநாட்டு வளந்தான் எனும் நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் நடனக்கலை நூலாகும். போர்க்காலத்தில் வீரர்களை எழுச்சியூட்டும் இசை, நடனக்கலை நூல்.
2. வெங்கண்ணன் சேர்வை வளந்தான்
3. அண்டப்பமன்னவேளார் குறவஞ்சி
4. உடையப்ப மன்னவேளார் குறவஞ்சி
5. திருமலைராயர் கலித்துறை
6. நல்லபெரியான் கலியுகம் ஐயர் குழுவல்
7. நாவலங்க நல்லக்குடி குழுவல்
8. திருக்குளம்பூர் வைரவன் சேர்வை கும்மி
இதுதவிர இன்னும் பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

கருத்துகள்
கருத்துரையிடுக