புதுக்கோட்டை எழுத்தாளர் -236
ஆர்.திருமலை, எம்.ஏ. (பிறப்பு - 1924). சிறந்த வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் மாணவர். இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் நிர்வாகம் தொடர்பான துறையின் கீழ் குறிப்பாக ஜமீன்தாரிகளின் கள வருவாய் தீர்வு, ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலத்தின் பூர்வீக நிலங்களுக்கான கணக்கெடுப்பு பணியில் தீவிர அனுபவம் பெற்ற இவர் புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.
அறிவியல் வரலாற்றியல், இலக்கியத்தில் கிராம பண்பாடு ஆகிய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். இவரது எழுதிய நூல்களில் முக்கியமானது "ராஜேந்திர வின்னகர்". இந்நூல் சோழர் - பாண்டிய நகரங்களைப் பற்றியது.
STUDIES IN ANCIENT TWONSHIPS OF PUDUKOTTAI - R. TIRUMALAI எனும் இந்நூல் புதுக்கோட்டையின் பண்டைய நகரங்கள் பற்றிய செய்தியைப் பேசுகிறது. 1981 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தது.
இந்நூலுக்கு அணிந்துரை திரு. ஆர். வெங்கடராமன் ( ஆர். வெங்கட்ராமன்) அவர்கள். இந்நூலுக்கு இவர் அணிந்துரை தருகையில் ஜூலை 9, 1981 இந்திய நிதி அமைச்சராக இருந்தார். பிறகு இவர் இந்திய ஜனாதிபதி ஆனார்.
இந்நூலுக்கான முன்னுரையை இவ்வாறு எழுதுகிறார் நூலாசிரியர் எஸ்.திருமலை அவர்கள்.
இந்நூல் புதுக்கோட்டையின் பண்டைய நகரங்களின் வரலாறு. முப்பத்து ஐந்தாண்டுகள் புதுக்கோட்டையில் சேகரித்த தகவல்களைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன். ஆராய்ச்சி உதவித் தொகையுடன் கூடிய இந்த ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்தவர்
பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள். "பண்டைய தென்னிந்தியாவில் உள்ள நகரங்கள்" எனும் தலைப்பின் கீழ் நான் தேடிய கல்வெட்டுத் தரவு மற்றும் பிற ஆதார தரவுகளைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன்.
புதுக்கோட்டையில் உள்ள பழங்கால நகரங்கள், அவற்றின் அமைவிடம், வளர்ச்சி, நகரங்களின் சிறப்பம்சம், அவற்றின் செயல்பாடுகள் குறித்து இந்நூலில் எழுதியுள்ளேன். இந்த நூல் இதற்குப் பிறகு எழுதப்போகிற தென்னிந்திய நகரங்கள் பற்றிய ஆய்வு மற்றும் வரலாற்றுக்கு மாதிரியாக அமையும் என கருதுகிறேன்.
இதற்கும் முன்பு எழுதப்பட்டுள்ள
தென்னிந்திய நகரங்கள் பற்றிய மூலப்பிரதிகள், முதன்மை ஆதாரங்கள், சமகாலத் தமிழ்ப் படைப்புகள், (உரைநடை அல்லது செய்யுள்) மற்றும் அதன் உள்ளடக்கம் ஆகியவற்றைக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன். கல்வெட்டுகள் பற்றிய ஆதாரக் குறிப்புகளுக்கு பேராசிரியர் எஸ்.வையாபுரி பிள்ளை, ஆர்.பி.சேது பிள்ளை, பேராசிரியர் எ. ஸ்ரீநிவாச ராகவன் இவர்களின் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டேன்.
இந்நூலுக்கு மத்திய நிதியமைச்சர் திரு. ஆர்.வெங்கடராமன் அவர்கள் வழங்கியிருக்கும் முன்னுரை என்னை மேலும் ஊக்கமும் உற்சாகமும் அளிக்கிறது. அவரது அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
ஓர் அறிஞர்- அரசியலாளரிடமிருந்து வரும் பாராட்டு மட்டுமல்ல இது. அவர் என் மீது காட்டும் அன்பின் வெளிப்பாடாகவும் இதை நான் பார்க்கிறேன். அவரிடமிருந்து கிடைத்த பாராட்டுக்கு ஏற்ப வாழவும், அவரது பங்களிப்புகள் குறித்த எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் தொடர்ந்து நான் முயல்வேன்.
இந்திய வரலாறு, கலை மற்றும் கலாச்சார அமைப்பின் தலைவரான டாக்டர் சிவராமமூர்த்திக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அத்தகைய புகழ் பெற்ற ஒரு அறிஞரைப் பாராட்டுவது மிகவும் முக்கியமானது
இந்திய அரசின் தலைமைக் கல்வெட்டுவியலாளர் கே.ஜி.கிருஷ்ணன், எனக்குப் பிரசுரிக்கப்படாத பல கல்வெட்டு நூல்களை உடனுக்குடன் அளித்து உதவினார். தற்போது தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள திருவரங்குளம் அரிய நடராஜர் வெண்கலச் சிலையைப் புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதியளித்த தேசிய அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர் ஐ.டி.மாத்தூர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நார்த்தாமலை மற்றும் குடுமியான்மலையில் உள்ள கோயில்கள் மற்றும் சிற்பங்களைப் புகைப்படமெடுக்க எனக்கு உதவிய ஐ. கார்த்திக்கேயன் அவர்களுக்கு தங்களின் ஓய்வு நேரத்தை தியாகம் செய்து கையெழுத்துப் பிரதியை தட்டச்சு செய்த டி.கோவிந்தன் மற்றும் சி.என். ராமசுப்ரமணியன் ஆகியோருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நில உடமைகளை விளக்குவதற்கு வரைபடத்தையும் முன்னுதாரணத்தையும் தயாரிப்பதில் ஸ்ரீ எஸ்.என். திவாரி எனக்கு உதவியிருக்கிறார், அவருடைய உதவிக்கு நன்றி பாராட்டுகிறேன். 22-10-1946 அன்று புதுக்கோட்டை கல்வெட்டுகளின் பிரதியை சிந்தனையுடன் எனக்கு வழங்கிய எனது நண்பர் புதுக்கோட்டை டாக்டர் வி.கே.ராமச்சந்திரன் பிள்ளையை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.
இறுதியாக, என் மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்ட எனது பேராசிரியர் (மறைந்த) திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி அவர்களுக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்த விரும்புகிறேன். எனக்காக இந்தத் தலைப்பை அவர் தேர்வுசெய்து கொடுத்தார். அவரது வழிகாட்டலில் இந்த நூலை நான் எழுதியுள்ளேன்.
இந்நூல் குறிப்பிடும் புதுக்கோட்டையின் பண்டைய நகரங்களாவன:-
நார்த்தாமலை
நகரத்தார்மலை எனும் அழைக்கப்பட்ட நார்த்தாமலை. இந்த நகரம் நகரத்தார் என அழைக்கப்படும் வணிகர்களின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஊரைச் சுற்றி 36 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. பல்லவர் கால கல்வெட்டு - 2, சோழர் காலம் - 11, பாண்டியர் காலம் - 17, விஜயநகர காலம் - 6. இக்கல்வெட்டுகள் கி.பி 1205 - 1217 -18 ஆண்டுகளுக்கு இடையிலானது என கல்வெட்டுகளின் தரவுகளை அட்டவணைப் படுத்தியுள்ளார்.மேலும் மாறவர்மன் சுந்தரபாண்டியன்- 1 காலத்திய கல்வெட்டுகளை தந்துள்ளார். இவை 1225 - 1228 ஆண்டுகளுக்கு இடையிலான கல்வெட்டுகள்.
விரையாச்சிலை
விரையாச்சிலை என அழைக்கப்பட்ட விராச்சிலை. காவற்படை நகரமாக விளங்கிய ஊர் விரையாச்சிலை. புதுக்கோட்டையிலிருந்து தெற்கே 21.75 கிலோமீட்டர் தொலைவில் திருமயம் தாலுகாவில் உள்ள ஒரு ஊர். இடைக்காலத்திய நகரம். பாண்டியர்களின் படைவீரர்கள் அல்லது நிலப்பகுதியின் மீது ஆதிக்கம் செலுத்திய தலைவர்கள் தங்கள் சொத்துக்களை படைப்பாற்று எனும் பெயரில் கொண்டிருந்தனர். அரசர்களின் வாரிசுகள்/ தலைவர்கள், மறவர் குலத்தலைவர்கள் இந்த நகரத்தில் நிலம் வைத்திருக்கிறார்கள்.
இந்நகரத்தில் மொத்தம் 18 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன,பாண்டியர் காலம் -11, விஜயநகர காலம் - 4, பிற்கால கல்வெட்டுகள்- 3.
ஜடயவர்மன் சுந்தர பாண்டியன் ( 1253- 54 மற்றும் 1279-80 ) காலத்தில் விரையாச்சிலை எனும் இவ்வூர் விருதராஜ பயங்கர வளநாடு எனும் அழைக்கப்பட்ட கானநாட்டிற்கு உள்ளடங்கிய ஊராக இருந்தது. இப்பகுதியின் பெரும்பகுதி நிலங்கள்
சோதியாழ்வாருக்கு இறை நிலமாக வழங்கப்பட்டவை. கடமை, குடிமை, குத்தகைதாரர்கள் நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை செலுத்திவிட வேண்டும்.
இந்நிலங்கள் மற்றும் மக்கள் தேவைக்காக இரண்டு ஊரணிகள் இருக்கின்றன. அரவத்தூர் உடையான் ஊரணி மற்றும் பெரியப் பிராட்டி ஊரணி. இப்பகுதி ஊரணிபுரம் என அழைக்கப்பட்டன.
திருவரங்குளம்
புதுக்கோட்டையிலிருந்து 8.05 கிலோ மீட்டர் தொலைவில் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட ஊராக திருவரங்குளம் உள்ளது. இப்பகுதியில் 65 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. சோழர் காலம் - 2, பாண்டியர் காலம் - 33, விஜயநகர காலம் - 15, காலம் கணிக்க முடியாதவை - 15.
இந்த ஊர் வளர்ச்சிக்கு நகரத்தார்களின் பங்களிப்பு இருந்திருக்கிறது. பிறகு இடைக்காலத்தில் அரையர்களின் கோட்டையாக மாறியது. உள்நாட்டு
போர்கள் அதிகம் நடைபெற்ற பகுதி என்பதால் குடிபெயர்வுகள் இங்கேயிருந்து நிறைய நிகழ்ந்துள்ளன. இந்த நகரம் வளநாடு கோட்டத்தில் உள்ளடங்கியது.
13 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே பிரதான ஆலயமும், அதனுடன் நகரக் குடியிருப்பும் உருவாகியிருக்க வேண்டும்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் ( கி.பி 1217 ) காலத்திய கோயில் இது. இக்கோயில் பொன்னமரபதி பகுதியை ஆண்ட திருக்கொடுங்குன்றமுடையார் என அழைக்கப்பட்ட நிசாடராயர் மனைவியார் பிராட்டி ஆழ்வார் கட்டியது.
இக்கோயிலின் மூலவராக அரங்குள நாதர் உள்ளார். அவர் ஹரிதீர்த்தேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள இறைவி பிரகாதாம்பாள் ஆவார். தல மரம் பொற்பனை ஆகும். இங்குள்ள திருச்சிற்றம்பல உடையார் காசி விசுவநாதருக்கு இணையானவராகக் கருதப்படுகிறார்.
குடுமியாமலை
புதுக்கோட்டையிலிருந்து 19 கிலோ மீட்டர் தொலைவில் இந்நகரம் உள்ளது. மிகவும் பழைமையான நகரம் இது. 102 கல்வெட்டுகள் இந்நகரத்தைச் சுற்றி கண்டறியப்பட்டுள்ளன. உறையூர், தஞ்சாவூர், மதுரை, கொடும்பாளூர் இந்த நான்கு பெரும் நகரங்களின் சந்திப்பு இடமாக குடுமியான்மலை இருந்துள்ளது. இவ்வூர் தொடக்கத்தில் திருநலக்குன்றம் என அழைக்கப்பட்டது. பிறகு இது சிகநல்லூர் என அழைக்கப்பட்டது.
இசைக்கல்வெட்டு பெயர்ப்போன நகரம் இது. "ஸ்வரகாமம்" என அழைக்கப்படும் இக்கல்வெட்டு 1. மத்யமா; 2. சட்ஜா; 3. சத்வா; 4. சதாரிதா; 4. பண்காம 6. கைசிகி மத்யமா; 7. கைசிகா என ஏழு வகை இசை பற்றி கூறுகிறது. இந்த இசைக்குறிப்பு
ருத்ராச்சாரியாரின் சீடர் பரம மகேஸ்வரர் எனும் மன்னன் இயற்றியது.
இத்தகைய கல்வெட்டு குறிப்புகளைத் தரும் இந்நூலுக்கு அன்றைய இந்திய அரசின் நிதி அமைச்சர் திரு. ஆர். வெங்கடராமன் அவர்கள் எழுதியிருக்கும் அணிந்துரை இது
தென்னிந்திய வரலாற்றில் அதிகாரபூர்வமான ஆய்வுகள் எண்ணிக்கையால் மிகக் குறைவு. ஆகவே இந்நூலின் வரவு வரவேற்கத்தக்கதாகும். இந்திய - கங்கை சமவெளிகளின் வரலாறு அல்லது தென்னிந்திய வரலாற்றைப் பற்றிய அறிவு நம்மிடம் இருக்கும் தகவல்களின் செல்வத்துடன் ஒப்பிடுகையில் போதுமானதாக இல்லை. சுவாமிநாத ஐயர் மற்றும் நீலகண்ட சாஸ்திரி போன்ற சிறந்த அறிஞர்கள் தென்னிந்தியாவின் கடந்த காலத்தை ஆழமாக ஆராய்ந்து மதிப்புமிக்க வரலாற்றுத் தரவுகளை நமக்கு வழங்கியுள்ளனர். தென்னிந்திய வரலாறு பற்றிய நமது அறிவு இன்னும் தூக்கநிலையிலேயே உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின் புராதன நகரங்கள் பற்றிய திருமலையின் தற்போதைய ஆய்வு, தமிழ்நாட்டின் ஒரு முக்கியமான பிராந்தியத்தின் அரசியல், சட்ட மற்றும் பொருளாதார அமைப்புகளின் மதிப்புமிக்க வரலாற்று நுண்ணறிவுகளை வழங்குகிறது. மாநிலத்தின் நவீன வருவாய் நிர்வாகத்தைப் பற்றி ஆழமான அறிவு கொண்ட ஆசிரியர் இந்நூலை ஆழ்ந்தாய்ந்து எழுதியுள்ளார்.
பண்டைய காலங்களின் நிர்வாக நடைமுறைகளை பரிந்துரைப்பதிலும் செயல்படுத்துவதிலும் டவுன்ஷிப் அமைப்பின் (ஊரர்) தீர்க்கமான பங்கு குறித்து பதிவு செய்துளாளார். புதுக்கோட்டையின் ஆரம்ப நாட்களில் கிராம அளவில், சமூகம் சார்ந்த நடைமுறைகளையும் சுட்டியுள்ளார்.
நிரந்தர, அரசியல் சார்பற்ற சிவில் சர்வீஸ் அடிப்படையிலான முந்தைய அமைப்புக்கும் நவீன அமைப்புக்கும் இடையேயான தொடர்பை விளக்கியுள்ளார். மேலும் முந்தைய காலங்களில் விவசாயிகள் மீதான வருவாய் வரி விதிப்பின் துல்லியமான தன்மையையும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆய்வுக்குப் புதுக்கோட்டை மாவட்டத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இது ஆரம்ப மற்றும் இடைக்கால காலங்களில் தென்னாட்டின் தலைவிதியை வடிவமைத்த சோழ, பல்லவ மற்றும் பாண்டிய வம்சங்களின் ஆட்சியின் முத்திரையைக் கொண்டுள்ளது. நிர்வாக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளின் சுவாரஸ்யமான காலவரிசைப் பரிணாமத்தைக் கண்டறியவும் இந்நூல் உதவுகிறது.
இப்பணியைத் தென்னிந்திய வரலாற்றின் தீவிர மாணவர்களுக்கு மட்டுமல்ல, சிறந்த ஆதாரங்களையும், ஆய்வுப் பொருட்களையும் வழங்கும். தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தின் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் நான் பாராட்டு தெரிவிக்கிறேன். மேலும் இதுபோன்ற பங்களிப்புகளை பெரிதும் எதிர்பார்க்கிறேன்.
புதுடெல்லி
ஜூலை 9, 1981

கருத்துகள்
கருத்துரையிடுக