புதுக்கோட்டை எழுத்தாளர் – 160
கந்தர்வன், இயற்பெயர் க.நாகலிங்கம். கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், பேச்சாளர். வளரும் படைப்பாளர்களைத் தம்பி எனத் தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர். இளம் வயதில் அரசுப் பணிக்கு வந்துவிட்ட இவர், அவசர பிரகடனம் காலத்தில் இருபது மாதங்கள் வேலை இழந்து பின்னர் வேலையில் சேர்ந்தவர்.
இவரது பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் என்கிற கிராமம். இவரது தந்தையார் கணேசன் விடுதலைப் போராட்ட வீரர். 1983 ஆம் ஆண்டு வேலை மாறுதலால் புதுக்கோட்டைக்கு வந்தவர், இவ்வூரைச் சொந்த ஊராக மாற்றிக்கொண்டார்.
அரசு வருவாய்த் துறையில் மாவட்ட கருவூல அதிகாரியாக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில பொறுப்புகளிலும் அங்கம் வகித்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர். ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ தோன்ற காரணமானவர்களில் ஒருவர். பிறகு இச்சங்கம் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்றானது. இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராக செயலாற்றினார். பேசுவதைப் போல எழுதவும் எழுதுவதைப் போல பேசவும் செய்தவர்.
‘லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல்’, ‘வரலாறு சொல்லும் தமிழ் எழுத்தாளர் மாநாடு’ இவ்விரு கட்டுரைகள் இவரது தொடக்கக் கால எழுத்துகள். கண்ணதாசன் இலக்கிய இதழில் விமர்சனக் கட்டுரைகள் எழுதத் தொடங்கிய இவர் கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல் என்று தன் எழுத்துகளை முற்போக்கு பார்வையில் விரித்துக்கொண்டவர். இவ்விதழின் ஆசிரியர் இராம.கண்ணப்பன் ஆலோசனையினால் அப்போது அவர் வாசித்த திருலோகசீதாராம் எழுதிய கந்தர்வ கானம் நூலின் ஒரு பாத்திரமான கந்தர்வன் என்கிற பெயரைத் தன் புனைப்பெயராகச் சூடிக் கொண்டவர்.
தாமரை, சுபமங்களா, ஆனந்தவிகடன், செம்மலர் இதழ்களில் தொடர்ந்து எழுதினார். கந்தர்வனின் சிறுகதைகளில் காணப்படும் கலானுபவம் கவிதைகளில் இல்லை என்கிற விமர்சனத்திற்கு கவித்துவ வடிவில் பதிலடி கொடுத்தார். “கவிதை நேரடியாக களத்துல ஜனங்களோடு பேசுறதுக்கு. கோவிலுக்குப் போனா சிங்காரிச்சிட்டு போகலாம். சண்டைக்குப் போகும்போது சிங்காரிச்சிட்டு இருக்க முடியுமா?”
மேலும் “என் கவிதைகள் மிகுந்த இலக்கியத் தரம் வாய்ந்தவை என்றோ, அவை இலக்கியமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றோ நான் கவலைப்படுவதில்லை. எளிய மொழியில் மக்களுக்குக் கருத்துகளை எடுத்துக் சொல்கின்ற கருவியாகத்தான் நான் கவிதையைப் பயன்படுத்துகிறேன்“, என்றார். “நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கில்லை“, என்கிற கவிதை பெண்களின் சமூக வாழ்வைப் பிரதிபலிக்கக் கூடியது.
“எம்.எல்.ஏ சட்டையில் ஒரு பை வைத்தார் / எம்.பி சட்டையில் பல பை வைத்தார் / மந்திரி, பையையே சட்டையாக மாட்டிக்கொண்டார்” என்கிற இக்கவிதை அரசியலில் புரையோடியிருக்கும் ஊழலை எழுதியக் காலத்தோடு கேலி செய்தவர்.
கிழிசல்கள், மீசைகள், சிறைகள், கந்தர்வன் கவிதைகள் இவரது கவிதைத் தொகுப்புகள். சாசனம், பூவுக்குக் கீழே, கொம்பன், ஒவ்வொரு கல்லாய், அப்பாவும் மகனும், தண்ணீ்ர் இவரது சிறுகதைத் தொகுப்புகள். கேள்விகள், விசாரணை இவரது புகழ்பெற்ற வீதி நாடகங்கள்.
இவரது முதல் சிறுகதை சனிப்பிணம், மூடநம்பிக்கையை நகையாடும் மிகச் சிறந்த சிறுகதை. இக்கதை தாமரை இதழில் பிரசுரமானது. இவரது மைதானத்து மரங்கள், இலக்கிய சிந்தனை விருது பெற்ற சிறுகதை. மேலும் இக்கதை பன்னிரெண்டாம் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றது. இவரது மொத்தப் படைப்புகளையும் அங்கீகரிக்கும் பொருட்டு ‘கந்தர்வன் படைப்புலகம்’ என்கிற நூலை சாகித்ய அகாடமி வெளியிட்டு கௌரவித்தது.
இவரது காவடி என்கிற குறுநாவல் சுபமங்களா இதழில் பிரசுரமானது. இவருக்கு நாவல் எழுத வேண்டும், என்கிற ஆசை இருந்தது. பணி நிறைவுக்குப் பிறகு அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முனைந்தார். உடல் நலக் குறைவால் அந்த ஆசை நிறைவேறாமல் போய்விட்டது. இவரது கடைசி கதை கூட்டாஞ்சோறு இதழில் வெளியானது. சமீபத்தில் இவரது நூல்கள் தமிழ்நாடு அரசால் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளது.
கந்தர்வன் வாழந்த காலம் அறுபது ஆண்டுகள். எழுதிய மொத்தக் கதைகள் அறுபத்து இரண்டு. சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு கதைகள் வீதம் எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைகளில் ‘சீவன்’ மிக முக்கியமான சிறுகதை. “ஒரு நல்ல சிறுகதைக்கான இலக்கணங்களில் ஒன்று. ஒரு சிறுகதை கடைசி பத்தியோடு கதை முடிந்துவிடக்கூடாது. கடைசி பத்தி முதல் பத்தியோடு பூட்டுகோள் போல் பொருந்த வேண்டும்”
இக்கதையின் தொடக்கப் பத்தியையும், கடைசி பத்தியையும் உங்கள் வாசிப்புக்குத் தருகிறேன். இரண்டையும் முடிந்து பாருங்கள். மிகச் சிறந்த சிறுகதையாக உணர்வீர்கள்.
கதையின் தொடக்கம் - “கூழுப் பிள்ளைக்கு ஒரு வாரமாகவே மனது சரியில்லை. விரட்டி விரட்டி பார்த்தும் இந்தக் கிறுக்கு பிச்சைக்காரன் மறுபடி மறுபடி கோயிலடியில் வந்து படுத்துக்கொள்கிறான்“
கதையின் முடிவு – “சடசடவென்று அரசமரம் வேரோடு தூரோடு முனியசாமி சிலை மேல் விழுந்தது. கூழுப்பிள்ளை கிட்ட வந்து கதற கதற பார்க்கிறார். சின்ன சின்ன கற்களாய்ச் சிலை பரவிக் கிடந்தது. ஊர் ஜனம் கூடிவிட்டது. கூழுப்பிள்ளைக்கு கண்கள் பொங்கி வந்தன. மக்கள் பேசிக்கொண்டார்கள், “கிறுக்கன் தப்பிச்சுட்டான் சாமி போயிருச்சே..”. “ அவன்கிட்டே சீவன் இருந்திச்சு. காத்து ஒறைக்கவும் எழுந்திரிச்சி நடந்துட்டான் ”.
.jpeg)

கருத்துகள்
கருத்துரையிடுக