முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் தங்கம் மூர்த்தி

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 150

கவிஞர் தங்கம் மூர்த்தி. இயற்பெயர் மூர்த்தி. தந்தையார் தங்கம், ஹோமியோபதி மருத்துவர். பாரத் நகர் , புதுக்கோட்டையில்  வசித்து வருகிறார். ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிஞர் பாலாவின் மாணவர்.  பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். கவிஞர், கதைஞர். பட்டிமன்றம், கவியரங்கம், நூல் திறனாய்வு, தனிச் சொற்பொழிவு என எவ்வகை மேடைகளையும் தன்வசப்படுத்தி கேட்பவர் செவிகளுக்குத் தேன்தமிழாற்றுபவர்.



இவரது எழுத்து ஹைக்கூவில் தொடங்கியது . புதுக்கவிதை, விமர்சனத்தொடர், சிறுகதை வடிவ கவிதை எனக்   கதைஞராக மிளிர்கிறார். தமிழ்ச்செம்மல் விருது,  மக்கள் நலக் கவிஞர் விருது, கவிஞர் சிற்பி விருது, செல்வன் கார்க்கி விருது, கவிக்கோ விருது, விக்கிரமன் விருது, சௌமா விருது, ஈரோடு தமிழன்பன் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். தேவதைகளால் தேடப்படுபவன் எஎனும்இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றது.

இவரது முதல் தொகுப்பு டிசம்பர் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஏறக்குறைய இருபது ஆண்டுகளில் தங்கம் மூர்த்தி கவிதைகள், பொய்யெனப் பெய்யும் மழை, என் பண்டிகை நாட்குறிப்பிலிருந்து,  கல்வி கரையில, கவிதை வெளியினிலே, கவிதையில் நனைந்த காற்று, தேவதைகளால் தேடப்படுபவன், அந்த வானவில்லுக்கு எட்டு நிறங்கள், கூடு திரும்புதல் எளிதன்று, 100 கவிஞர்கள் 100 கவிதைகள்  எனத் தொடர்ந்து மொழி வேர்களுக்குக் கவிதைநீர்ப் பாய்ச்சி வருகிறார்.

முதலில் பூத்த ரோஜா, இவரது முதல் கவிதைத் தொகுப்பு. புதுக்கோட்டை மீரா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. பல பதிப்புகள் கண்ட இந்நூல் பரவலான கவனிப்பைப் பெற்றது. இவரது ஹைக்கூ 100 நூலைக்கொண்டு அணுகுகையில் இவரது முதல் கவிதை, "கண்ணில்லாதவர்கள்/ கையேந்துகிறபோது /நாமெல்லாம் குருடர்கள் " என்பதாக இருக்கிறது. ஆயினும் இவரது தொகுப்பில் முதலில் சுட்டிக்காட்டப்படுகிற கவிதையாக 1987 ஆம் ஆண்டு வாக்கில் இவர் ஆருடமாக எழுதிய " கறுப்பு ஆட்சிக்கு வரும் / இன்று அந்தியிலும்/ நாளை ஆப்பிரிக்காவிலும் " என்கிற கவிதை இருக்கிறது. இக்கவிதையைச் சுட்டிக் காட்டுபவர் இவரது முதல் நூலைப் பதிப்பித்த  மீரா. சுந்தர் அவர்கள்.

இத்தொகுப்பிலுள்ள பல கவிதைகள் பலராலும் பல இடங்களில் மேற்கோள் காட்டப்பட்டு பிரபலமானவை என்பது இவருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. சிலர் அவர்களுடையது போல எடுத்தாண்டு கைத்தட்டல்,  பாராட்டுகள் பெறுவதில் வருத்தமுறுகிறார். கவிதைகள் எழுதியவர் பெயரோடு மேடைகளில் சொல்லப்பட வேண்டும், என்பதை வேண்டுகோளாக வைப்பதுடன் இவர் வாசித்து இவருக்குப் பிடித்தமான பிறரின் கவிதைகளை எழுதியவர் பெயரோடு சொல்லி  பலரையும் கவனப்படுத்தி வருகிறார்.

தீநுண்மி ஊரடங்கு காலத்தில் இவர் தொடராக எழுதிய "100 கவிஞர்கள் 100  கவிதைகள்" தொகுப்பு 'தற்கால குறுந்தொகை' எனக் கணமும் கனமும் பெற்று கவனம் பெற்றுள்ளது. தற்கால கவிஞர்கள் 100 பேரை இவர் அறிமுகம் செய்வதுடன் நூற்றுவரின் சிறந்த நூறு கவிதைகளைக் குறுங்குறிப்புடன் தந்திருக்கிறார். இவரது கல்லூரி ஆசிரியர் பாலாவில் தொடங்கும் கவிதைக் கண்ணிகள் கந்தர்வன், அப்துல் ரகுமான், பிரமிள், நகுலன் ,...என நீண்டு புதுக்கோட்டை கவிஞர்கள் ராசி.பன்னீர்செல்வம்,  இரா.தனிக்கொடி, ஜீவி,  ஆதிரா முல்லை, ஸ்டாலின் சரவணன், ஆர்.நீலா, காசாவயல் கண்ணன், கே.பாக்யா ஆகியோர்களின் கவிதைகளை நூறுக்குள் வைத்து ஆவணப்படுத்தியிருக்கிறார். கவிஞர்களின் படைப்புகளில் நிகழ்தகவாக ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்த கவிதைகள் அல்ல, இவை. கண்ணப்ப நாயனாரைப் போல அவருக்கும் படையலுக்கும் பிடித்தமான கவிதைகள். 

இத்தொகுப்பில் நூறாவது கவிதை இவருடையது. கவிதைகளில் பாடும் கவிதை, கூவும் கவிதை, சொல்லும் கவிதை, அகவும், முழங்கும், செப்பும் கவிதை எனப் பல உண்டு. இது அறிவிப்பு கவிதை.  விடிகாலை அமைதியைக் குலைக்கும் அகவலாக சிறுகதை வடிவில் இப்படியான ஓர் அறிவிப்பை அறிவித்துச் செல்கிறது.

தலைப்பு - அறிவிக்கப்படவில்லை அவனது மரணம்

"துக்கச் செய்தி
மரண அறிவிப்பு"
அதிகாலையில்
ஆட்டோவில் கேட்கும்
அவனது குரல்.

அந்தக் குரல் வழியேதான்
அறிய முடியும்
எல்லா மரணத்தையும்.

எந்த மரணமும்
உறவினர்களுக்கு முன்பே
அவனுக்குத்தான் சொல்லப்படும்.

மெலிந்த உடலும் அழுக்கு ஆடையும் தாடியுமாய்
ஆட்டோவில் ஒரு மூலையில்
ஒடுங்கி அமர்ந்திருப்பான்
மைக்கைப் பிடித்தபடி.

காற்றில் பரவும்
அவனது குரலில்
ஒரு கம்பீரம் இருக்கும்.
நின்று
நிறுத்தி
நிதானமாய் அறிவிக்கும்
அவனை
அலட்சியப்படுத்தி
யாரும் கடந்து விட முடியாது.
இறந்தவரின் குடும்பம்
பரம்பரை
இத்யாதி
இறுதி ஊர்வலம்
நல்லடக்கம்
அனைத்தையும்
கச்சிதமாய்ச் சொல்லி
கவனத்தை ஈர்ப்பான்.

என்னைக் கண்டால்
டீ
வாங்கிக் கேட்பான்.

எப்படிப் போகிறது
வாழ்க்கை
எனக் கேட்பேன்.

யாரோ செத்து
நான் பிழைக்கிறேன்
என்று சிரிப்பான்.

வேறொரு நாளில்
மற்றொரு மரண அறிவிப்பில்
புதுக்குரல் கேட்டு
ஆட்டோவை எட்டிப் பார்த்தால்
அவனிருக்கவில்லை.

வீடு தேடி
விசாரித்தேன்.

அழுது அரற்றினாள்
அவனது தாய்.

" ஈரல் கெட்டுப் போச்சு.
தொண்டையிலே புண்ணு
படுத்த படுக்கை
போய் சேர்ந்துட்டான்.

எல்லார் சாவையும் சொல்ல
இவன் ஒரு ஆளாக இருந்தான்.

இவன் சாவைச் சொல்ல
ஒரு நாதி இல்லையே...!

திரும்பி வரும் வழியெங்கும்
அவனது குரல்
ஒலித்துக் கொண்டேயிருந்தது
அவனது மரணத்தை
அவனே அறிவிப்பதை போல.



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...