புதுக்கோட்டை எழுத்தாளர் -175
சோமசுந்தரனார், பாவலர்,
தமிழிசைப் பாவலர் என அழைக்கப்பட்டவர். புதுக் கோட்டை ராமச்சந்திரபுரத்தில் சுந்தரம்பிள்ளை - பொன்னம்மாள் தம்பதியர்க்கு 28-10-1917 இல் மகனாகப் பிறந்தார். ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஸ்ரீபூமீஸ்வரஸ்வாமி உயர் நிலைப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை கல்வி பயின்றார். தொடர்ந்து படிக்கக் குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் இடம் தரவில்லை.
கலை ஆர்வமும், இறை பக்தியும் இளமைப் பருவத்திலேயே இவரிடம் இயற்கையாய் அமைந்திருந்தன. 1939 இல் தனது முதற் கவிதையை இவர் எழுதினார். தமிழ்த் திரைப்படங்கள் பேசத் தொடங்கியிருந்த அன்றைய நிலையில் தியாகராஜ பாகவதர் போன்றோரின் பாடல்களைக் கேட்பதும் அப்பாடல்களின் மெட்டுக்களுக்கேற்பத் தாமும் பாடல்கள் இயற்றுவதும் இவரின் வழக்கமாக இருந்தன.
இத்தகைய சூழலில் 1938 இல் ராமச்சந்திரபுரத்தில் அண்ணாமலை செட்டியார் என்பவரால் 'அன்பு நிலையம்' எனும் புத்தக வெளியீட்டு நிறுவனம் தொடங்கப் பெற்றது. இந்நிறுவனத்தில் ஆறு மாதங்கள் சோமசுந்தரனார் பணிபுரிந்தார். 'அன்பு நிலையம்` சுத்தானந்த பாரதியாரின் பெரும்பாலான நூல்களை அப்போது வெளியிட்டு வந்தது. சுத்தானந்த பாரதியின் அனைத்துப் படைப்புகளையும் வாசிப்பதற்கு இப்பணி வாய்ப்பாக அமைந்ததுடன், தமிழிசைப் பாடல்கள் இயற்றுவதற்கான தாக்கத்தையும் ஏற்படுத்தியது.
இசை பயில வேண்டும் எனும் ஆர்வத்தால் 1939 இல் ராமச்சந்திரபுரம் சாரதா சங்கீத வித்யாசாலையில் சேர்ந்து மானாமதுரை ரெங்கசாமி ஆசிரியரிடம் இசை பயின்றார்.
மிகக் குறுகிய காலத்தில் தாமே இசை ஆசிரியராகவும் உயர்ந்தார். மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் ச.மெய்யப்பன் அவர்களின் தந்தையார் திரு. சண்முகம் செட்டியார், பழனியப்பா பிரதர்ஸ் உரிமையாளர் திரு. பழனியப்ப செட்டியார் போன்றோர் இவரிடம் இசை பயின்றுள்ளனர்.
1940 களில் ராமச்சந்திரபுரத்தில் இருந்து வெளிவந்த "திருமகள்" இதழின் ஆசிரியராக இவரது அண்ணன் திரு.இராமசாமி இருந்துள்ளார். கவியரசர் கண்ணதாசன் திருமகளில் எழுதத் தொடங்கியிருந்த அக்காலத்தில் பாவலர் சோமசுந்தரனார் 'ஷண்முகப்ரியா' எனும் புனைபெயரில் தரித்திர நாராயணன், வைரமோதிரம் காணாமல் போனது, அவள், முத்திரை, ஆகிய நான்கு சிறுகதைகளை எழுதியுள்ளார்.
நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் (INA), இந்திய தேசியக் காங்கிரஸ் போன்ற அமைப்புகளின் நிதி வசூலுக்காகப் பல இசை நிகழ்ச்சிகளை 1940 களில் இலவசமாக நடத்தித் தந்த பெருமைக்குரியவர் பாவலர் சோமசுந்தரனார்.
திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் இவரது இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களை 1947 ஆம் ஆண்டிலேயே இசையமைத்து ஒலி பரப்பியது குறிப்பிடத்தக்கது.
1950 இல் கலைஞரின் 'தூக்கு மேடை' நாடகம் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டிருந்தது. இந்நாடகம் 'பகுத்தறிவின் பரிசு' எனப் பெயர்மாற்றப் பெற்று, புதுக்கோட்டை ராஜா தியேட்டரில் 28-10-1950 அன்று நடைபெற்றது. நாடகத்தில் இடம் பெற்ற பத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாவலர் சோமசுந்தரனார் இயற்றினார்.
கலைஞர் மு.கருணாநிதி, கவியரசர் கண்ணதாசன் டி.கே.சீனிவாசன் போன்றோர் புதுக்கோட்டைக்கு வருகை தந்து அந்நாடகத்திலும் நடித்தனர். பாவலர் சோமசுந்தரனார் இயற்றிய 'புதையல்'" எனும் நாடகத்தின் அரங்கேற்றம் புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 1952 இல் நடைபெற்றது. நாடகத்தை தலைமையேற்று நடத்தித் தந்தவர் தவத்திரு. குன்றக்குடி அடிகளார். தொடர்ந்து 1950 களிலேயே அறியாமையின் குழந்தைகள், வீரக்கனவு, நீதியின் பரிசு போன்ற நாடகங்களையும் எழுதினார்.
தேவக்கோட்டை இசைப்பள்ளிக்காக வள்ளி, சகுந்தலை எனும் இரு நடன நாடகங்களையும் இயற்றினார் இவர். 28-10-1952 ல் வள்ளியும், 28-8-1953 ல் சகுந்தலையும் அரங்கேற்றப்பட்டன. 1950-1960 க்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். முருகப்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டுள்ள இவர் தனது இசை நிகழ்ச்சிகளில் முருகனைப் பற்றியே மிகுதியாகப் பாடியுள்ளார்.
மேலும், மகாகவி பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் மீது ஈடுபாடு கொண்டு அவர்களது பாடல்களையும் இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இறைபக்தி கொண்டிருந்த போதும், திராவிட இயக்கத் தலைவர்களின் ஈர்ப்பால் சீர்திருத்தச் சிந்தனைகள் இவர் பாடல்களில் மேலோங்கி நிற்கின்றன.
1960 இல் பாவலர் சோமசுந்தரனாரின் சகோதரர் வயலின் இசைக் கலைஞர் பூமிநாதன் இறந்து போனதால் ஏற்பட்ட சோகம், தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் தேக்கத்தை ஏற்படுத்தியது. குடும்பப் பொறுப்புகளும் சேர்ந்து கொள்ள, இசைப் பயணத்தின் வேகம் குறைந்தது.
தமிழக அரசு நலிவுற்ற கலைஞர்களுக்காக மாதந்தோறும் வழங்கும் நிதியுதவியை 1992 ஆம் ஆண்டு முதல் பெற்றவர். இளமையில் கற்ற ஜோதிடத்தை முழுநேரத் தொழிலாக்கிக்கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை திருச்சிற்றம்பலம் கிராமத்தில் குடியேறினார்.
நீதியின் பரிசு எனும் இந்நூலில் நீதியின் பரிசு, வீரக்கனவு, புதையல் எனும் மூன்று நாடகங்களும் சகுந்தலா நடன நாடகம், ஸ்ரீவள்ளி நடன நாடகம் எனும் இசைப்பா நடை நாடகங்களும் இடம் பெற்றுள்ளன. நீதியின் பரிசு எனும் இந்நாடகம் 1950 ஆம் ஆண்டில் எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டது.
புதையல் நாடகத்தை நூலாக வாசித்து அவ்வை டி.கே.சண்முகம் பாராட்டி மதிப்புரை எழுதியுள்ளார். புதையல் நாடகம் அருமையான கருவின் அடிப்படையில் அமைந்துள்ளது. கருணாகரன் என்னும் வாயிலாக ஈகைக்குணத்தைச் சித்திரித்துள்ளார்.
ஸ்ரீ வள்ளி நடன நாடகம் தேவக்கோட்டை தமிழ் இசைப்பள்ளி மாணவர்களுக்காக இயற்றப்பட்ட 25.10.1952 அன்று அரங்கறேற்றம் பெற்றது. இந்நாடகத்தில் ஒரு காட்சி.
தினை விளைச்சலைக் காவல் செய்யும் வள்ளி தினையைப் பொறுக்கும் பறவைகளை விரட்டுகிறாள். அவை மீண்டும் மீண்டும் வந்து சூழ்கின்றன, வள்ளி சோர்ந்து போகிறாள். அதைக் காணும் தோழி பாடுகிறாள்;
"தினைப் புனங் காவல் மிகப் பொல்லாதம்மா - நம்
தீரம் பறவைகளிடம் செல்லாதம்மா
தினை விளைச்சலைக் காவல் செய்யும் வள்ளி தினையைப் பொறுக்கும் பறவைகளை விரட்டுகிறாள். அவை மீண்டும் மீண்டும் வந்து சூழ்கின்றன, வள்ளி சோர்ந்து போகிறாள். அதைக் காணும் தோழி பாடுகிறாள்;
"தினைப் புனங் காவல் மிகப் பொல்லாதம்மா - நம்
தீரம் பறவைகளிடம் செல்லாதம்மா
எனைக்கண்டு விரைந்தேகி -இருளின் பின்ஒளிபோல
இடம்விட்டு இடம்மாறி - அடம் செய்யும் பறவைகளால்"
காந்தி பதிப்பகம்
நாட்டுச்சாலை
பட்டுக்கோட்டை வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்


கருத்துகள்
கருத்துரையிடுக