முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மனுசியபுத்திரியும் தேவனும்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 195

மனுசியபுத்திரியும் தேவனும், இங்கு மனுசியபுத்திரி என்பவர் முனைவர் ந.சுலோச்சனா.  தேவன் என்பவர் முனைவர் அ.சகாதேவன்.  முன்னவர் பிறந்தது முதுகுளம். பின்னவர் மட்டங்கால்.  திருமதி நா.சுலோச்சனா மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் திரு. அ. சகாதேவன் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியிலும் பணியாற்றுகிறார்கள்.

இருவரும் தம்பதிகள். கந்தர்வகோட்டையில் வசிக்கிறார்கள். இருவரும் ஒன்றுபோல சமூகத்தை அவதானிப்பவர்கள்.  நீண்ட புனைப்பெயரைக்கொண்ட எழுத்தாளர் இவர்கள்.

புராணக் கதையில் சிவன் தன் உடம்பில் பாதியைப் பார்வதிக்குக் கொடுத்ததாக கதை உண்டு. அதுவா உண்மை, பார்வதி தன் உடம்பில் பாதியைச் சிவனுக்குக் கொடுத்தாள் என்று சொல்வதே கதையின்படி சரியாக இருக்கும். சுலோச்சனா தனது நீண்ட புனைவுப் பெயரில் பாதியைக் கணவருக்காக  கொடுத்திருக்கிறார்.

சுபா என்றொரு பெயர் தமிழ் இலக்கியத்திற்கு நன்கு பரிச்சயமானது. சுரேஷ்,  பாலகிருஷ்ணன் என்பதன் சுருக்கமே சுபா.  இரட்டை எழுத்தாளர்களான  இருவரும் நண்பர்கள்.

முதுசூரியர்,  இளஞ்சூரியர் என இரு புலவர்கள் தமிழிலக்கியத்தில் உண்டு. முன்னவர் முதல்பாதியைப் பாட பின்னவர் மறுபாதியைப் பாடுவார்.   இவர்களின் வரிசையில் சேர்கிறார்கள் மனுஷியபுத்திரியும் தேவனும்.

'அது ஒரு கனாக்காலம்' , 'பாலை'. இவ்விரு கவிதை நூல்கள் இவர்களது புதுவரவு. இவற்றில்  பாலை எனும் கவிதைத் தொகுப்புக்கு அண்டனூர் சுரா எழுதியிருக்கும் வாழ்த்துரை:

தமிழிலக்கியத்தில் கடவுள் தன்னைப் பாட கனவில் முதல் வரியை எடுத்துக் கொடுக்க, புலவன் அதையொற்றிப் பின்னிரு வர்கள் பாடிய செய்யுள் உண்டு, அது புராணம். மனிதன் படைக்கப்பட்ட காரணக் கதையை ஒரு கடவுள் தன் தந்தத்தை முறித்து எழுதிய கதைகள் உண்டு.  மனிதப் பிறப்பை ஏற்றத்தாழ்வுபடுத்திய இதிகாசம் அது. ஒரு புலவன் இரண்டு வரிகளைச் சுவரில் எழுதிச் செல்ல இன்னொரு புலவன் பிற்பகுதியை முடிக்க பாடல்கள் உண்டு.

இளஞ்சூரியர், முதுசூரியர் என்று இரு புலவர்கள். ஒருவனுக்குக் கால்கள் இல்லை. மற்றொருவனுக்குக் கண்கள் இல்லை. கால்களில்லாதவனை கண்களில்லாதவன் தோளில் சுமந்து செல்கிறான். கண்களால் காட்சிகளைக் கண்டவன், முற்பகுதியைப் பாட, பின்னவன் பிற்பகுதியை முடிக்கிறான். இப்படியான தனிப்பாடல்கள் தமிழில் உண்டு.

தன் இல்லத்தரசியின் பெயரைத் தன் மகளின் பெயரைத் தன் காதலியின் பெயரைப் புனைபெயராகக் கொண்டு காவியம் படைத்த கவிஞர்கள் உண்டு. இங்கு ஆதாமும் ஏவாளும் போல மனுசியபுத்திரியும் தேவனும் என்கிற புனைபெயர் தமிழிலக்கியத்திற்குப் புதிது, நல்வரவு.

இலக்கணப்படி உம், உம் என வருவது எண்ணும்மை. இவரை எண்ணும்மைக் கவிஞர் என்று விளிக்கத் தோன்றுகிறது.

பாலை நிலம், விழுது வேராகக் கொண்ட ஒரு மரம். அதில் அமர்ந்திருக்கிறது இறக்கைகள் சிதைக்கப்பட்ட ஒரு பறவை. அப்பறவை பாடுவதாக இருந்தால் என்னவெல்லாம் பாடும்? தன் சோகத்தை, துக்கத்தை, தன் துயரத்தைப் பாடும். அதுவே சமூகப் பறவையாக இருந்தால்? அதுவே பாலை.

குறிஞ்சி, முல்லை, மருத நிலப் பறவைக்கும் பாலை நிலம் பறவைக்கும் அலகும் ராகமும் ஒன்றுதான். ஆனால் மொழி வெவ்வேறானது. இறக்கை இழந்த பறவை என்ன பாடும்? தன் சிறகு இழந்த கதையைப் பாடும். அதன் காரண காரியங்களைப் பாடும். மனுசியபுத்திரியும் தேவனும் என்கிற பறவை சமூகம் பாடுகிறது.

இவ்வளவு நீளமான பெயர் கொண்ட ஒரு பறவை பாலை நிலத்தில் பறக்கிறது. அப்பறவை பறக்கும் நிலத்தில் ஈரமில்லை. சமமில்லை. சமத்துவமில்லை. இதுவோ தன்னம்பிக்கைப் பறவை. ஒரு கவிதையை இப்படியாகப் பாடுகிறது, நீ / ஒவ்வொரு முறையும் / என் இறக்கைகளை / வெட்டிவிடும் போதெல்லாம் / பறக்கவேண்டும் என்ற துடிப்பில் / முயன்ற எனக்கு / உடம்பே இறக்கையாய் /வளைந்து கொடுக்கிறது / அதனால் எனக்கு இனி இறக்கைகள் தேவையில்லை. இப்பறவை பாடுவது சோகக் கீதமல்ல. துக்க ராகமல்ல. தன்னம்பிக்கை வரிகள்.

காதல் தோல்வியா? இந்நூலோடு பயணம் செய்யலாம். வாழ்க்கையில் கலக்கமா, இந்நூலில் தீர்வு தேடலாம். நான் இலைகளல்ல / விதைகள் என்கிற வரிகள், மனுசியபுத்திரி தேவனுக்குச் சொன்னதாக மட்டும் கொள்ள வேண்டியதில்லை. ஒரு பறவை மானுடனுக்குச் சொல்வது. ஒரு வீழ்ச்சியை மௌனமாய் ஆராதிக்கும் வரிகள்!.

இந்தத் தொகுப்பில் காதல் உண்டு. களவு உண்டு. வாழ்க்கை, முன்னேற்றம், நம்பிக்கை, துரோகம், இலட்சியம், இலக்கு, வெற்றி... எனப் பல உண்டு. வாழ்க்கையின் ரகசியத்தை மட்டுமல்ல, வாழ்வின் சூட்சமத்தையும் பாலை கற்றுத் தருகிறது. நீங்கள் ஒரு வகையில்/நம்பிக்கை என்றபோதும் /மறுவகையில் எனக்கான எச்சரிக்கை சமூகத்தை உள்வாங்கியவரால் அல்ல. சமூகத்தில் எதிர்நீச்சல் கொள்ளும் ஒருவரால் எழுதத் தகும் வரிகள் இவை.

என் அழகிய பறவையே / ஒன்றாகவே வாழ்ந்துவிட நினைத்துதான் பறக்கத் தொடங்கினோம் என்பதாக ஒரு கவிதை தொடங்கி, பிறகெப்படி வாழ்க்கையைப் பந்தயமாக்கி என்னைத் தோற்கடித்தாய், என்பதாக முடிகிறது. இதற்கிடையில் சில வரிகள் உண்டு. இந்த வரிகளை அவரவர் கண் மூடிக் கொண்டு நிரப்பினால் சிலர் துரோகத்தால் நிரப்புவார்கள். சிலர் அவநம்பிக்கையால் நிரப்புவார்கள். ஆனால் இக்கவிதையில் மனுசியபுத்திரி தேவன் மீது கொண்ட காதலால் நிரப்புகிறார். அப்படியென்றால் இது காதல் தொகுப்பா? இல்லை. இன்றைய காதல்களுக்குக் கைகூடுவது ஒன்றே இலக்காக இருக்கிறது. இவரின் இலக்கு கைகூடுவதும் வாழ்வதும் அல்ல. இறக்கைகள் முறிக்கப்பட்ட பறவைகளை வழிநடத்துவது! பாடும் பறவைக்கு அலகு போதும்! வழிநடத்தும் பறவைக்கு, மனஉறுதி வேண்டும். இவருக்கு இருக்கிறது. இந்த முறை / என் கூரிய அலகால் / தடையாக நீளுமுன் கரங்களைக் காயப்படுத்தியேனும் / பறந்துவிடுவதில் / உறுதியோடு இருக்கிறேன் / விடியலை நோக்கி.

மனுசியபுத்திரியும் தேவனும் என்கிற எண்ணும்மைக் கவிஞருக்கு விடியல் இலக்கு  உயரத்தில் இல்லை. தூரத்திலும் இல்லை. சமூக பாடுதலால் அந்த இலக்கு இவரை வந்தடையும். பூஞ்சாணம் பிடித்த பாத்திரம் போல கவிதை படைக்கும், பாலை நிலப் பறவைக்கு எனது வாழ்த்துகள்!.

எழுத்தாளர் அண்டனூர் சுரா
செப்டம்பர் 11, 2021.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...