புதுக்கோட்டை எழுத்தாளர் -210
சாமி. பழனியப்பன், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தொழிற்பொருட்டு கொழும்பில் வசிக்கையில் அங்கு வீரகேசரி இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரமடைய அந்தச் சுதந்திரத்தை விமர்சிக்கும் பொருட்டு 'யாருக்குச் சுதந்திரம்?' என்ற கவிதையை எழுதி அனுப்ப புதுக்கோட்டையில் இயங்கிய வந்த பொன்னி இதழ் அக்கவிதையைப் பிரசுரம் செய்தது. இக்கவிதையால் தமிழகத்திலும் கொழும்பிலும் சர்ச்சையானது. இதனால் வீரகேசரி ஆசிரியருக்கும் கவிஞருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகவே சாமி பழனியப்பன் வீரகேசரி பத்திரிகையிலிருந்து விலகித் தமிழகம் திரும்பினார். பின்னர் அக்கவிதைக்கு எதிரான கொந்தளிப்பை அமைதிப்படுத்த 'அமைதி கொள்க' என்றொரு கவிதையை எழுதினார். அக்கவிதையை 1947 நவம்பர் பொன்னி இதழ் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரை கவிஞராக ஏற்றுக்கொண்டது.
'தமிழகம்' திரும்பிய இவர் பின்னர் 'பொன்னி', 'வாரச்செய்தி', 'தமிழகம்', 'தென்றல்' முதலிய பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். தவத்திரு குன்றக்குடி அடிகளாரிடம் தனது உதவியாளராகவும், பின்னர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களிடம் எழுத்து உதவியாளராகவும் பணிபுரிந்தார்.
'பாரதியும், பாரதிதாசனும்', 'சிரிக்கும் வையம்', 'சாமி பழனியப்பன் கவிதைகள்' ஆகிய கவிதை நூல்களையும் பல உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார்.
பின்னர், 'தமிழரசு' பத்திரிக்கையின் உதவி
ஆசிரியராகவும், தமிழக அரசின் பெரியார் நூற்றாண்டு விழாவின் தொடர்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது 'சாமி பழனியப்பன் கவிதைகள்' என்னும் கவிதைத் தொகுப்புக்குத் தமிழ்நாடு அரசு முதற்பரிசு வழங்கியுள்ளது. மேலும் 1990-ல் தமிழக அரசு பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது.
பொன்னி இதழில் பிரசுரமான அமைதி கொள்க கவிதை இது.
அலைகடலே! இவ்வுலகின் பெரும்பகுதி தன்னை
ஆளுகிறோ மென்கின்ற ஆணவத்தி னாலா
நிலைகெட்டுச் சினக்கின்றாய்? உன்னா லிந்த
நீணிலத்திற் கெள்ளளவும் நன்மை யுண்டா?
அலைகளைநீ அடுக்கடுக்கா யனுப்பு கின்றாய்,
அன்னவையோ மடிந்துபடும் ஒவ்வொன் றாக,
நிலைமறந்தே, உயர்வானைப் பிடிக்க ஏனோ
நினைக்கின்றாய்! மறந்துவிடு! அமைதி கொள்வாய்!
வறுமையிகு தொழிலாள ருணர்வு பெற்று,
வஞ்சகரின் நெஞ்சுகளில் வாள்பு குத்தப்
புறப்பட்டா ரெனக்கூறும் வகையில் நீயும் பொங்குகின்றா யென்றாலும் மறுக ணத்தில்
இறந்துவிடு கின்றனையே! புறப்பட் டோரின்
இறுதிநிலை யுணர்த்துவதா யெண்ணம் போலும்!
மறந்துவிடு! தொழிலாளர் புரட்சி தன்னை மாய்க்கவொணா திவ்வையம்! அமைதி கொள்வாய்!
மணித்துளிகள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சென்று
மடிதலுக்கோர் எடுத்துக்காட் டாய்வி ளங்கும்
அணிவகுத்துச் சென்றழியும் அலைகள் யாவும்!
ஆர்ந்துள்ள இவ்வுலகில் பெண்ணொ ருத்தி;
கணிகையென ஆகிள்றாள் சிலரைச் சேர்ந்தால்!
காரிகைகள் பல்லோரை ஒருவன் சேர்ந்தால்
கணிகனென அன்னவனைக் கழற மாட்டார்
கடலே!அத் துணிவாலா நீயு மிந்நாள்,
திங்களினைக் கண்டதுமே மேலெ ழும்பித் தீராத காதலினைத் தீர்க்க எண்ணிப் பொங்குகின்றாய்? அதனாலே பயனென் கண்டாய்?
புன்மைக்கும் அன்னவனோ ஒப்ப வில்லை.
மங்காத காதல்கொண்ட அல்லி என்னும் மலர்வனிதை தனைக்கலந்த பின்னர் வேறு
நங்கையினைக் காதலித்தல் தவறா மென்று
நகைத்தலினைக் கண்டிடுவாய் அமைதி கொள்வாய்!
இப்பாடல் பொன்னி நவம்பர் 1947 மலர் -1 இதழ் -10 இதழில் பிரசுமானது.

கருத்துகள்
கருத்துரையிடுக