புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 03
(புதுக்கோட்டை எழுத்தாளர் - 233)
டாக்டர் வீ.மாணிக்கம், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றியவர். வரலாற்றுத் துறை. இவரது மணி விழா காலத்தையொட்டி, " புதுக்கோட்டை வரலாறு " எனும் இந்நூலைப் படைத்துள்ளார். இவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல் கொங்கு நாடு.வரலாறு என்பது மன்னர்களின் வரலாறு அல்ல, இனக்குழுக்களின் இடம் பெயர்வு வரலாறு எனும் கருத்தியலோடு ஒத்துப்போகிறவர். இனக்குழுச் சமுதாயத்தின் சிதைவடையும் போக்கே இந்திய வரலாறு எனும் கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாபரின் இனக்குழுச் சமுதாயத்திலிருந்து அரசு எனும் நூலில் இக்கருத்தியல் மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் வரலாற்று ஆய்வுகளில் இது இன்னும் தீர்க்கமாக எதிரொலிக்கவில்லை. இனக்குழுச் சமுதாயத்தின் எச்சங்கள் இன்றும் செறிவாகக் காணப்படும் புதுகைப் பகுதியின் ஆய்விற்கு இக்கருத்தியல் நன்கு பொருந்தும் என்கிறார், இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர். மேலும் இவர் ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டின் குறுநிலப் பரப்புக்களின் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார். புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் கோனாடு, கானாடு சோழ மண்டலத்தின் சில நாட்டுப் பிரிவுகள் அடங்கிய நிலப்பை இந்நூல் பேசுகிறது. முல்லைநிலம் எனும் ஒருமித்த நிலவியல்பைக் கொண்ட பண்டைய காட்டு( கான) நாட்டை ஆய்வுகளமாகக் கொண்ட இந்நூலிற்குப் புதுக்கோட்டை வரலாறு எனும் தலைப்பு பொருந்துமா? எனும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.
வரலாற்று முற்காலம், வரலாற்றுத் தொடக்கக் காலம், களப்பிரர் காலம், இடைக்கால அரசியல், வேளாண்தொழில், நீர்ப்பாசனம், நிலவுடைமை, உற்பத்திப் பகிர்மானம், வணிகமும் தொழிலும், வேளாண் சமுதாயம் ஆகிய தலைப்புகளில் புதுக்கோட்டை அதைச் சார்ந்த நிலப்பகுதியை ஆராய்கிறார்.
மரபுவழித் தரவுகள் எனும் தலைப்பில் தேக்காட்டூர் ஓலைச்சுவடி, பொன்னமராவதி செப்பேடு இரண்டையும் எடுத்துக்கொண்டு இரண்டும் உண்மையான ஆதாரங்களா, போலியானவையா என்று விவாதித்துள்ளார்.
தேக்காட்டு ஓலைச்சுவடி 1910 ஆம் ஆண்டு ஒரு வழக்குத் தொடர்பாக புதுக்கோட்டை முதன்மை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. இச்சுவடி தரும் செய்தியை இராதாகிருஷ்ண அய்யர் அவரது நூலில் எழுதியுள்ளார். இச்செய்தி உண்மையென வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வது தவறான அணுகுமுறை என்கிறார்.
தேக்காட்டு ஓலைச்சுவடி சொல்வதாக இராதாகிருஷ்ண அய்யர் அளித்துள்ள செய்தியின் சுருக்கம் -
உறையூரிலிருந்து மதுரையருகேயுள்ள சோழவந்தான் வரையிலும் பரந்து காணப்பட்ட கோனாடு உறையூர்க்கூற்றம், உறத்தூர்க்கூற்றம், ஒல்லையூர்க்கூற்றம் ஆகிய மூன்று பெரும் பிரிவுகளையும் 64 நாடுகளையும 756 கிராமங்களையும் கொண்டிருந்தது.
கோனாட்டிற்குத் தெற்கும் கிழக்கும் அமைவிடத்தைப் பெற்ற கானாடு காளையார் கோவில், தொண்டி முதலிய பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதற்குள் கானக்கூற்றம் என்கிற அதளைக்கூற்றம், மிழலைக் கூற்றம் எனும் இரு பெரும் பிரிவுகளையும் 24 நாடுகளையும் 108 கிராமங்களையும் கொண்டிருந்தது.
சோழரின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோனாட்டில் ஆதொண்டைச் சக்கரவர்த்தியால் காஞ்சியிலிருந்து அழைத்துவரப்பட்ட வெள்ளாளர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
கானாட்டில் பாண்டியன் உக்கிரப் பெருவழுதியால் கிழக்குக் காஞ்சியிலிருந்து அழைத்துவரப்பட்ட நற்குடி வெள்ளாளர்கள் குடியமர்த்தப்பட்டனர்.
வெள்ளாளர் வாழும் நிலப்பரப்பில் கோனாடு எட்டில் ஐந்து பங்கும் கானாடு எட்டில் மூன்று பங்கும் கொண்டதாகும்.
கோனாடு, கானாடு, தொண்டைமண்டலம் பகுதியில் வாழ்ந்த வெள்ளாளர்கள் கம்பர் ஏறெழுபது பாடியதற்காக அவருக்குப் பரிசு, பல்லக்கு,..இதற்காக வெள்ளாளக் குடிகளிலிருந்து குடிக்கு ஒரு பணம் உரிமை வழங்கப்பட்டன.
கோனாட்டில் கம்பருக்குரிய பணம் எளிதில் வசூலானது. கானாட்டில் தாமதமானது. இதற்காக கோனாட்டு ஒல்லையூர் கூற்றம் வெள்ளாளர்கள் கானாட்டு வெள்ளாளர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். இதனால் கோபமுற்ற கானாட்டு வெள்ளாளர்கள் பணம் தர மறுத்தனர். கோனாட்டு வெள்ளாளர்கள் கானாட்டு வெள்ளாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். இது கோனாடு- கானாடு வெள்ளாளர்களுக்கிடையே யுத்தமாக மாறியது. இரு தரப்பினரும் போர்த்திறம் பெற்ற மறவர், கள்ளர் சமூகத்தவரைப் பிற பகுதியிலிருந்து உதவிக்கு அழைத்து வந்தனர். தமக்கு உதவுபவருக்குப் பரிசும் நிலமும் வழங்கினர். இவ்விதமாக மறவரும் கள்ளரும் புதுக்கோட்டைப் பகுதியில் குடியேறி நில உரிமையும் பெற்றனர். இம்மோதலில் பள்ளரும் பங்குபெற்றுத் தலைப்பழி கொடுத்தமையால் அதற்குப் பரிசாக அன்னாருக்கும் நிலம் வழங்கப்பட்டதாகப் பொன்னமராவதி செப்பேடு கூறுகிறது.
இந்தச் செய்தி சரியா? - ஆராய்கிறார் டாக்டர் வீ. மாணிக்கம்.
தேக்காட்டூர் ஓலைச்சுவடி ஆய்வாளருக்குக் கிடைக்கவில்லை. 1910 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் இச்சுவடிகள் 19 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டிருக்கலாம். ( ஓர் ஓலைச்சுவடியின் ஆயுள் 300 ஆண்டுகள் ).
கோனாடு, கானாடு ஆகிய பிரிவுகளுக்குரியதாகக் கூறப்படும் நிலப்பரப்பும் கூற்றங்களும் நாடுகளும் குடியிருப்புகளும் உண்மைக்குப் புறம்பானவை.
புதுக்கோட்டை கல்வெட்டுகளில் வளநாடுகளாகக் கூறப்படும் கோனாடு ஆறு உட்பிரிவுகளையும் கானாடு இரண்டு உட்பிரிவுகளையும் கொண்டது. மேலும் கோனாட்டின் மாற்றுப்பெயராகக் கூறப்படும் ஜெய சோழ வளநாடு எனும் பெயர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதுக்கோட்டைக் கல்வெட்டுக்களில் காணப்படவில்லை.
கோனாடு சோழரின் ஆதிக்கப்பகுதி. சோழனால் வெள்ளாளர் குடியமர்த்தப்பட்டனர். கானாடு பாண்டியர்களின் ஆதிக்கப்பகுதி. இங்கு பாண்டியனால் வெள்ளாளர்கள் குடியமர்த்தப்பட்டனர். இவ்விரு செய்திகளும் ஏற்புடையதெனில் கோனாடும் கானாடும் தனித்தனி அரசியல் பிரிவுகளாகச் செயல்பட்டதாக கருத வேண்டியுள்ளது. ஆனால் உண்மை நிலை என்ன?
புதுக்கோட்டை சோழ, பாண்டிய அரசுகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பாகையால் இவ்விரு அரசுகளும் இங்கே முட்டி மோதிக்கொண்டன. இரண்டில் எவ்வரசின் கை ஓங்கியதோ அதன் ஆதிக்கம் புதுக்கோட்டைப் பகுதி முழுமையும் அதாவது கோனாடு, கானாடு ஆகிய இரு பிரிவுகளிலுமே நிலைப்பெற்றது.
பாண்டியர் கோனாட்டுப் பகுதியில் ஆதிக்கம் பெற்றிருந்தனர் என்பதற்கு ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் எனும் குறிப்புச் சான்று பகரும்.
எனவே கோனாடு, கானாடு ஆகிய இரு பிரிவுகளுமே பாண்டியரும் சோழரும் மாறி மாறி ஆதிக்கம் பெற்றிருந்த நிலையில் பாண்டிய நாட்டவரும் சோழ நாட்டவரும் தத்தம் ஆட்சியாளர்களின் தூண்டுதலால் புதுக்கோட்டைப் பகுதி முழுமையும் குடியேறினர் எனக் கொள்வதே பொருத்தமானதாகும். இவ்விதம் குடியேறியவர்களில் வெள்ளாளரும் அடங்குவர். எனவே கோனாட்டு வெள்ளாளர், கானாட்டு வெள்ளாளர் எனும் சொல்லாட்சிகள் இடைக்காலப் புதுக்கோட்டைச் சமூகத்திற்குப் பொருத்தமற்றவையாகும்.
வெள்ளாளர்கள் தமக்குள் மோதிக் கொண்ட போது தமக்கு உதவும் பொருட்டு மறவரும் கள்ளரும் இப்பகுதியில் குடியமர்த்தப்பட்டனர் எனும் செய்தியும் மீளாய்வுக்குரியது. இச்செய்தியை ஏற்றுக்கொள்ளப்படின் வெள்ளாளர் இப்பகுதியில் குடியமர்ந்த பிறகே மறவரும் கள்ளரும் இங்குக் குடியமர்த்தப்பட்டனர் எனும் செய்தி பெறப்படுகிறது.
கோடைக்காலத்தில் புதுக்கோட்டை பாலையாக மாறுகையில் பாலைத் திணைக்குரிய எயினர் எயிற்றியர் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்களின் தொழில் வழிப்பறியாக இருந்திருக்கிறது. ஆகவே கள்ளர்கள் முன்பே இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் எனப் புரிந்துகொள்ள இடமிருக்கிறது. ஆகவே கள்ளரும் மறவரும் வெள்ளாளர்களால் அழைத்து வரப்பட்டனர் எனும் செய்தி பொருத்தமற்றது, என்கிறார்.
இந்நிலத்தில் பள்ளர், பறையர் எனும் உழைக்கும் மக்களை அடிமை முறையில் எப்படி நடத்தினார்கள் என்பதைக் கல்வெட்டுக் குறிப்புகள் கொண்டு பதிவு செய்துள்ளது.
விஜய நகர காலத்திய கல்வெட்டு (960) குறிப்பு இது.
மாவலி வாணதராயன் எனும் குழுவிற்குரிய பள்ளர்கள் அடிமை தொழிலிருந்து விடுபட்டு ஓடிபோய் நெருஞ்சிக்குடியில் தஞ்சம் புகுகிறார்கள். மாவலி வாணதராயன் ஆட்கள் நெருஞ்சிக்குடி ஊரவரின் மாடுகளை அழித்து ஓடிய பள்ளரையும் பிடித்துக்கொண்டு வருகையில் நெருஞ்சிக்குடி ஊரவர் பரம்பையூர் ஊரவரையும் துணைக்கழைத்துக்கொண்டு மாவலி வாணதராயரை எதிர்த்து சண்டையிட்டார்கள், என்கிற குறிப்பும் அக்காலத்தில் உழகுடியான பள்ளர்களின் வாழ்நிலைக் குறித்தும் புரிந்துகொள்ள முடிகிறது.
இரண்டாம் இராஜராஜன் கல்வெட்டு இப்படியொரு செய்தியைத் தருகிறது.
நிலத்தின் மீது அடுக்கடுக்காக விதிக்கப்பட்ட வரிகளால் பள்ளர்கள் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து பறையர்களும் இடம் பெயர்ந்தார்கள். பறையர்கள் களம் செதுக்கும் பணியில் ஈடுபடுகிறவர்கள். அவர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு கள்ளர், மறவர்கள் இனி களம் செதுக்கும் பணியில் ஈடுபட வேண்டாமென்றும் உங்களுக்கான சகல சுவந்திரங்களையும் தருவதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்தக் கல்வெட்டு செய்தி மீது நூலாசிரியர் வீ. மாணிக்கம் சந்தேகம் கொள்கிறார். களம் செதுக்கும் பணியைக் கௌரவக் குறைச்சலாகப் பறையர் கருதினர் எனும் செய்தி நடைமுறைக்கு ஒவ்வாததாக உள்ளது. மேலும் ஆலய நிலங்கள் மீது ஆதிக்கம் பெற்ற வல்லாண்மையாளரான கள்ளர், மறவர் சமூகத்தவரும் உற்பத்தியில் உரிய பங்கைப் பள்ளர், பறையர் ஆகிய வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கியிருப்பாரா என்கிற ஐயத்தை எழுப்பியுள்ளார்.
இந்நூல் வேளாண்மை சார்ந்த முக்கிய கலைச்சொற்களைத் தருகிறது.
காராண்மை, முற்றூட்டு, மீயாட்சி, குடி, உழுவித்துண்போர், உழுதுண்போர், மேல்வாரம், குடிவாரம், கீழ்வாரம், பெருங்குடி, உழுகுடி, குடிநீக்கி, குடிநீங்காத் தேவதானம், குழி, மா, கூழரி, வித்திலி, வாரம், வரிசை, கடமை, வெட்டிமுட்டி, பேகாரி, உலுப்பை, எச்சோறு, பள்ளிப்பேறு, பள்ளர் பண்டம், குறுவை, பசானம், தேவர்கன்மி, கோயிற்கணக்கு, மடாபத்தியம், காலபோகம், ஆடி நவிரை, ஆடிக்குறுவை, ஐப்பசிக்குறுவை, கோடைக்குறுவை, குழியெறை, நடவலிறை, கதிரிறைவை, மானாவாரி, அரைப்பணம், அரைக்கால் பணம், புள்ளிச்சோறு, எச்சச்சோறு, கால், சூலக்கால், வன்நாயகன் மரக்கால், திருவாசல் மறந்தான் கால், வயலக நாட்டுக் கடமைக்கால், நாட்டுக்கால், விரபரி பால கால், கம்மாளர் பேறு, கணக்கப்பேறு, பறையர் பேறு, வித்திலி, கூழிலி, ஏரிலி, கொட்டர், கூழரி, உழமைச்சூடு, பாட்டம் ,ஊர்ப்புடவு, குடிநீங்காக் காராண்கிழமை, உழுகுடி, குடிவாரதார், பண்ணை உழவு, போந்த நிலம், பற்றான நிலம், உழமைச்சூடு, பறைமை, புலமை, களப்பச்சை, காவமுறி, செருப்படி, அடி, வேலி, முந்திரி, கீழ்முந்திரி, கீழ்கீழ் முந்திரி, ஊர்ப்புரவு, நாட்டு வரி, புள்ளிபுக்க நிலம், கடமை, உபாதி, குடிமை, தட்டார் பாட்டம், சுங்கவரி, குற்றத்தண்டம், காணிக்கை, வெட்டி, வேதினை, அமஞ்சி, முட்டையான், நீங்கல், இறங்கல், விரிவுமா, பரப்புமா, ஊர்க்கீழ் இறையிலி, இறைகாவல், கற்பூரவிலை,..
மேலும் இந்நூல் அகர நிரல்களைக் கொண்டுள்ளது.
புதுக்கோட்டை வரலாறு பெரும்பாலும் மன்னர் வரலாறாக எழுதுபவர்களுக்கு மத்தியில் இந்நூல் மன்னர் காலத்துக்கும் முந்தைய கால உழுகுடி, வணிகக்குடி வழியிலான பதிவுகளைக் கொண்டுள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக