புதுக்கோட்டைக்குள் எழுதப்பட்ட முதல் வரலாறு
புதுக்கோட்டை எழுத்தாளர் - 235
எஸ்.இராதாகிருஷ்ண ஐயர், பி.எ.
புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கும் அருகில் சூலமங்கலம் எனும் ஊரைச் சார்ந்தவர்.
1918- 19 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் முதல்வராக இருக்கையில் புதுக்கோட்டை மாநிலம் பொது வரலாறு எழுத அன்றைய சமஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொள்ள, A GENERAL HISTORY OF THE PUDUKKOTTAI STATE BY S. RADHAKRISHNA AIYAR, B.A Late Principal of H.H.The Maharajah`s College, Pudukkottai எனும் தலைப்பில் இந்நூலை எழுதினார். இந்நூல் புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1916 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரகதம்பா ஸ்டேட் பிரஸ்,புதுக்கோட்டை வழியே இந்நூல் வெளிவந்தது.
முன்னுரை செய்தி
ஸ்பெயின் நாட்டில் மாஞ்சனரிஸ் என்றொரு நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாட்ரிட் எனுமிடத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். அந்தப் பாலத்தைப் பார்வையிட பயணிகளில் இருவர் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். ஒருவர் சொல்கிறார், " பாலங்கள் இல்லாத ஆறுகளை நான் பார்த்திருக்கிறேன். இங்கு ஆறு இல்லாமல் பாலத்தைப் பார்க்கிறேன் ". மற்றொருவர் இதையே எதிர்மறையாகச் சொன்னாராம். " கொஞ்சம் தண்ணீர், பெரிய பாலம் ".
இந்த விமர்சனம் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறுக்குப் பொருந்தும். மிகச் சிறிய சமஸ்தானத்திற்கு ஐநூறு பக்கத்திற்கும் மேல் வரலாறு. இதையே ஸ்பெயின் கேலியில் சொல்வதாக இருந்தால், " புதுக்கோட்டை சமஸ்தானத்தைக் காட்டுங்கள், எங்களிடம் வரலாறு உள்ளது". இதையே எதிர்மறையாகச் சொல்வதாக இருந்தால், " சிறிய பரப்பு பெரிய வரலாறு என்பதாக முன்னுரை எழுதியுள்ளார்.
இந்நூலில் பிரகதம்மதாஸ் எழுதிய காமேஸ்வர ஐயர், ஜி.டி.எச்.ப்ராக்கென் மற்றும் ராய விஜயரகுநாத துரை ராஜா புகைப்படங்கள் குறிப்புகள் தந்து உதவிய ராம ஐயங்கார் ( பள்ளி துணை ஆய்வாளர்) மற்றும் திருவிடைமருதூர் பி.சி. திருவெங்கடாச்சாரியார் ( துணை நீதிபதி - தஞ்சாவூர்), இராமச்சந்திர ஐயர் ( ஆசிரியர், மகாராஜா கல்லூரி), புதுக்கோட்டை எஸ். நாராயணசுவாமி ஐயர் ( அச்சுத்துறையின் கண்காணிப்பாளர்) ஆகியவர்களுக்கு நன்றி பாராட்டுகிறார்.
இந்நூலில் 1807 முதல் 1913 ஆம் ஆண்டு வரையிலான குறிப்புகள் அரண்மனை பதிவுகள், தர்பார் குறிப்புகள் ஆண்டு ஆவணப் பதிவுகள், ரெசிடென்ட் மற்றும் பொலிட்டிக்கல் ஏஜெண்ட் ஆவணக் குறிப்புகள் அடிப்படையில் எழுதப்பட்டது என்கிறார். புதுக்கோட்டை வரலாறு எழுதுகையில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக இவர் குறிப்பிடும் செய்திகளாவன,
1. வெறும் 1200 சதுர மைல்கள் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானம் போன்று இன்னொரு சமஸ்தானத்தை பிரிட்டிஷார்கள் கொண்டிருக்கவில்லை.
2. சோழர், பாண்டியர்கள் இவ்விரு பேரரசுகளின் எல்லையாகக் கொண்ட வெள்ளாறு புதுக்கோட்டையில் ஓடுகிறது. கோனாடு, கானாடு வெள்ளாளர்கள் நீண்ட காலம் இப்பகுதியில் வளமாக, செழிப்பாக வாழ்ந்தார்கள். இவர்களுக்கிடையேயான சண்டையால் மறவர், கள்ளர் குடியேறினார்கள்.
3. புத்தம் மற்றும் சமண சமய கால குகைகள்
4. நூற்றுக்கணக்கான கல்மேடை, கல் திட்டுகள், ஓவியங்கள்
5. கி.மு 600- 800 ஆண்டுகளுக்கு இடையேயான குகைக்கோவில்கள், கல்வெட்டுகள், பல்லவர் கால அடையாளங்கள்,
6. அதிக எண்ணிக்கையிலான சமண கோவில்கள்
7. தென்னிந்திய பகுதிகளுக்கு உரித்தான கட்டிடக் கலைகள்
8. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள், பிராமி கல்வெட்டுகள், சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜயநகர கல்வெட்டுகள்
9. மரியாதைக்குரிய எம்.ஆர்.தேவன் பகதூர் எல்.டி. சுவாமிக்கண்ணு பிள்ளை அவர்கள், புதுக்கோட்டையிலுள்ள பாண்டிய கல்வெட்டுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டார். பதின்மூன்றாம் நூற்றாண்டு கால பாண்டிய கல்வெட்டுகள் எண்பதுக்கும் மேல் கண்டறிந்து பதிவு செய்துள்ளார். அவற்றைக் கவனத்தில் கொண்டேன்.
10. தமிழ்நாட்டு நில அமைப்பு, தஞ்சாவூர், ராமநாடு, உடையார்பளையம், அரவக்குறிச்சி ஆகியவற்றுடன் புதுக்கோட்டை கொண்டிருந்த உறவு
11. நவாப் மற்றும் ஆங்கிலேயர்கள் ' உண்மையான மற்றும் உறுதியான கூட்டாளி ' என்பதன் பேரில் தொண்டைமானுக்கு வழங்கப்பட்ட சலுகை மற்றும் ஆண்டு வருமானம் 75,000 தரும் நிலப்பகுதியைத் தொண்டைமான்களுக்கு இலவசமாக வழங்கியதன் பின்னணி
12. புகழ்பெற்ற வரலாற்று எழுத்தாளர் கர்னல் மெல்சன் எழுதிய இந்தியன் வரலாறு நூலில் குறிப்பிட்ட, ' 1752 ஆண்டின் கடைசியில் திருச்சிராப்பள்ளி கடைசி மூச்சு வாங்கியது ' என்கிற வரியின் பொருள்
13. இரண்டாம் மைசூர் போர் மற்றும் பொலிகர் போரின் வெற்றி, தோல்விகள்
14. சர். வில்லியம் ப்ளாக்பர்ன் தொண்டைமான்களிடம் கொண்டிருந்த உறவு அவர் 1830 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு எழுதிய கடிதங்கள், வாக்குறுதிகள், நம்பிக்கைகள், ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இந்நூலை எழுதினேன்.
இந்நூல் பிரிட்டிஷாருக்கு தொண்டைமான்களின் விசுவாசம் மற்றும் வெகுமதி கையேடாக இருக்கும். மேலும் குடியேற்றங்கள், சொத்து பாதுகாப்பின்மை, மதுரை நாயக்கர்களுடனான உறவுகள், குடியேற்றங்கள் ஆகியவற்றைப் பேசுவதால் தென்னிந்தியாவின் வரலாறாகவும் பதினெட்டாம் நூற்றாண்டின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் இவற்றை இந்நூல் பேசும். மாலையீடு ஆயி அம்மா ஆயி காரைத்தோப்பில் சதி எனும் உடன்கட்டை ஏறினார். அந்த இடம் மாலை இடும் இடம் மாலையீடு என்றானது.
அமானி திட்டம்
நிலங்களைப் பகிர்ந்து கொடுத்து அந்த நிலத்திலிருந்து வரும் வருமானத்தை அரசுக்குச் செலுத்துவது. இந்த முறையில் நிலங்கள் வருமானங்கள் தனிநபர் சொத்து ஆனதால் அந்த முறை ஒழிக்கப்பட்டது.
பன்றி நாடு
மதுரை பாண்டிய நாட்டிற்கும் காவிரி பாயும் புனல்நாட்டிற்கும் இடையேயான பகுதி பன்றி நாடு. குரும்பர் இன மக்களால் சூட்டப்பட்ட பெயர் இது. வெம்பத்தூரார் திருவிளையாடல் புராணம் மதுரை சுந்தரேஸ்வரர் குறித்து பாடுகிறது. அதில் 58, 59 பகுதிகள் மதுரை . வன்னிய என்கிற குரும்பர் இனத் தலைவனுக்கு 12 மகன்கள் பன்றிகளாகப் பிறந்தார்கள். இவர்கள் பன்றி மலையில் என்பது பழனி. பன்றி நாடு என்பது வங்காள விரிகுடாவுக்கும் மேற்கு பழனி மலைக்கும் கிழக்கு சுந்தரேஸ்வரரால் வளர்க்கப்பட்டார்கள். இவர் பன்னிரெண்டு பன்றிக்குரும்பர்கள் என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் வாழ்ந்த பகுதி பன்றி நாடு என அழைக்கப்பட்டது. பன்றி நாட்டுக்கும் வடக்கு புனல் நாடு, பன்றி நாட்டிற்கும் தெற்கு பாண்டிய நாடு என்கிற செய்தியைப் பேசுகிறது.
பறைச்சேரி அகற்றம்
மார்த்தாண்ட பைரவர் தொண்டைமான் காலத்தில் நகரத்தின் மையத்தில் குடியிருந்த பறையர்கள் குடியிருப்பை அகற்றி நகரத்தை மேம்படுத்தியதை இவர் பாராட்டுகிறார். இதுகுறித்து இவ்வாறு எழுதுகிறார். நகரம் நன்றாக அமைக்கப்பட்டிருந்தாலும், தெருக்களும் வீதிகளும் பெருமளவில் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகியிருந்தன. நகர வாய்க்கால்கள் தூர்க்கப்பட்டு சதுப்பு நிலங்களாகியிருந்த. பொதுப் பாதையில் வாரச்சந்தை நடத்தப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
குறுகிய பாதைகளில் அசுத்தமான பழக்கவழக்கங்களைக் கொண்ட பறசேரி மக்கள் குடியிருந்தார்கள். அவர்களால் நகர மக்களுக்கு காலரா மற்றும் பெரியம்மை நோய்கள் பரவி வருடாந்திர பலிகள் அதிகரித்தன. இங்கேயிருந்து அம்மக்களை வெளியேற்றி நகர் விரிவாக்கம் செய்யப்பட்டது. பிறகு இந்த இடத்தில் வைர விழா வளைவு நிறுவப்பட்டது. மேலும் இந்த இடத்தில் பல அலுவலகங்களும் தனியார் வாடகைக் கட்டிடங்களும் மூலைகளில் இருந்தன. இட நெருக்கடியால் அந்த இடம் இருண்டிருந்தது. கல்லூரி கட்டிடம் போதுமான அளவிற்கு இடவசதி இல்லாமலிருந்தது. மருத்துவமனை கட்டிடங்கள், அறுவைச்சிகிச்சை மையங்களுக்கு இடப்பற்றாக்குறை இருந்து வந்தது. சிறைச்சாலை மோசமான இடமாகவும் நெருக்கடியிலும் தத்தளித்து வந்தது. ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி இடம் விசாலமாக்கப்பட்டது.
இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு புதுக்கோட்டை நகரைப் பார்க்கும் யாருக்கும் நகரில் நடந்திருக்கும் மாற்றம் ஒரு தேவதையின் மந்திரக்கோலால் ஏற்பட்டிருக்கும் மாற்றம் போலத் தோன்றும். சாலைகளுக்கு இடையூறாக இருந்த வீடுகள் அகற்றப்பட்டன; பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன; புதிய சாலைகள் திறக்கப்பட்டன; புதிய புறநகர்ப் பகுதிகள் உருவாக்கப்பட்டன; வாராந்திர சந்தை ஒதுக்குப்புறமான இடத்திற்கு மாற்றி, நகரத்தின் மையம் வர்த்தக மையமாக மாற்றப்பட்டது. இங்கேயிருந்து அகற்றப்பட்ட பறசேரி ஒதுக்குப்புறமான பரந்த இடத்தில் குடி வைக்கப்பட்டார்கள்.
கல்லூரி, மருத்துவமனை மற்றும் பொது அலுவலகங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக உயர்ந்த, காற்றோட்டமான கட்டப்பட்ட கட்டிடங்கள் பார்வையாளர்களை பெரும் வியப்பில் ஆழ்த்தியதுடன் போற்றுதலையும் பெற்றது. நகரத்திற்குப் பல ஆண்டுகளாக குடிநீர் வழங்கும் திறன் கொண்ட நீர்த்தேக்கத் தொட்டி, ஒரு பெரிய நீர்த்தேக்கமாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நகரம் முழுவதும் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் நீரால் புதுக்கோட்டை நகரம் அற்புதத் தன்மை பெற்றது.
இந்நூலில் புதுக்கோட்டை குறித்த நூல்களை காட்டியுள்ளார். அவற்றில் தொண்டைமான் விஜயம் , அம்புநாட்டு வளந்தான், வெங்கண்ணன் சேர்வை வளந்தான், ஆண்டப்ப மன்னவேளார், பேரில் குறவஞ்சி , உடையப்ப மன்னவேளார் பேரில் குறவஞ்சி, திருமலைராயத்துரை பேரில் குறவஞ்சி , நல்லபெரியான் கலியுகன் பேரில் குழுவல் நாடகம் ஆகியவை முக்கியமானவை.
இந்நூலில் அலகு – 1
புதுக்கோட்டையின் அமைவிடம், தாலுகா பிரிவுகள், பரப்பளவு, ஆறுகள், மலைகள், பாறைகள், மண், இரும்பு தாதுக்கள், கட்டட அமைப்புகள், தொழிற்சாலைகள், மண் தொழில்கள், உப்பு வணிகம், காடுகள், வானிலை, ஈரப்பதம், மழை அளவு, காடுகள், பறவைகள், குறுவளக்காடுகள்
அலகு -2
புதுக்கோட்டையின் முந்தைய காலம், கல்வெட்டுகள், பன்றி நாடு, முதுமக்கட்தாழி, முந்தைய நில மக்கள் குரும்பர், காராள வெள்ளாளர், பதினெட்டு சாதிகள், புத்தம், சமணம், சலசமங்கலத்தின் அடித்தளம், வளநாடு, புதுக்கோட்டை தொண்டைமான்கள் – பாளையங்கள் – பாளையக்காரர்கள். மதுரை நாயக்கர்கள் மற்றும் இஸ்லாமியர்கள், தஞசாவூர் ராஜாக்கள், இராமநாடு சேதுபதி, வாராப்பூர், இலுப்பீர், மருங்காபுரி, குமாரவாதி, காண்டுவான் குறுநில ஜமீன்கள்
அலகு- 3
தொண்டைமான்கள் வருகை, வளர்ச்சி, ஆட்சி – விஜய ராய தொண்டைமான் முதல் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் வரையிலான ஆட்சிகள்
அலகு – 4
கர்நாடகப் போர்கள், சந்தாசாகிப் உடனான உடன்பாடு, நவாப் மற்றும் ஆங்கிலப் படையெடுப்பு, கீழாநிலை உடன்படுக்கை, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்ச் போரில் திருச்சிராப்பள்ளி, போர்கள், போராயுதங்கள், ஹைதர் அலி படையெடுப்பு, ஒற்றைக் குதிரை வீரன், வேளாண்மை, சர்வமானியம்
அலகு- 5
மன்னர் குடும்பத்துடன் ஜான் ப்ளாக்பர்னின் உறவுமுறை, நீதிமன்றங்கள், ஆவூர் கத்தோலிக்க சபை, இசை, புதுக்கோட்டைக்கு காவிரி நீர் கொண்டுவரும் முயற்சி, அஞ்சல்த்துறை, புதுக்கோட்டை மன்னர் தஞ்சாவூர் நாடு செல்லல், உப்பு வணிகம், இனாம் நிலங்கள், நகர வளர்ச்சி, சட்டச்சபை, தொடக்கக் கல்வி, கிராம வளர்ச்சி, அமைவிடம் மற்றும் எல்லை, தாலுக்கா பிரிவுகள், புதுக்கோட்டை பெயர்க்காரணம், பரப்பு, ஆறுகள், மலைகள், பாறைகள், மண் வகைகள், காந்த இரும்பு, கட்டிடக் கற்கள், சில அரிதான கற்கள், சிமெண்ட் பொருட்கள், செங்கல் மண், களிமண், வளையல் மண், உப்பு மண், மைக்கா, காலநிலை, வெப்பநிலை, ஈரப்பதம், மழைப்பொழிவு, வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்று, வானிலைக் குறிப்புகள், சூறாவளி வெள்ளம், பூகம்பம், மலர்கள், தோட்டங்கள், கால்நடைகள், ஆட்டு வகைகள், விளையாட்டு
மாநிலம் பற்றிய தொடக்கக் காலக் குறிப்புகள், வேடுவர், ஆதிவாசிகள், கருக்காக்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்ட ரோமன் காசுகள், கல்வெட்டுகள், செப்புத் தகடுகள், குகைகள், பாறைக் கோவில்கள், சித்தனவாசல் குகை, பழங்குடியினர் – குரும்பர்கள், காராள வெள்ளாளர்கள், விவசாயம், பதினெட்டு சாதிகள், பணம் படைத்த செட்டியார்களின் ஏழு நகரங்கள், நாட்டுக்கோட்டை செட்டியார்கள், பிராமணர்கள், கலசமங்கலத்தின் எல்லை, வளநாடு –நம்புகுளி, பல்லவ – சோழர்களின் காலம், சோழர் காலத்திய நிர்வாகம், ஆரியர்கள், பாடிகாவல் ஆவணங்கள், அரையர்களின் சண்டை, தொண்டைமான்களின் பிரிவுகள், பாளையம் மற்றும் பாளையக்காரர்களிடம் தொண்டைமான்கள் கொண்டிருந்த உறவு, மதுரை நாயக்கர்களுடனான உறவு, தஞ்சாவூர் மன்னர்கள், ராமநாதபுரம் சேதுபதி, சிவகங்கை ஜமீன்கள்; பெரம்பூர் கட்டலூர், வாராப்பூர், இலுப்பூர், குமராவாடி,மருங்காபுரி, பாளையவானம், நகரம், கந்துவான் தலைவர்கள், வைத்தூர் பல்லவராயர்கள், கள்ளர் – வகைப்பாடு, தலைவர்கள், கள்ளர் நிலம், பாதுகாப்பின்மை, சொத்து, பிரச்சனைகள், மைய அரசின் பலவீனம், இஸ்லாம் ஊடுருவல், வரிகள், வரிகள் செலுத்த இயலாமை, பஞ்சங்களின் வகைகள், தொண்டைமான்களின் எழுச்சி – வளர்ச்சி, தொண்டைமான்களின் தோற்றம், அம்புநாடு, அம்புநாட்டு கள்ளர், விஜயநகர மன்னர் கொடுத்த பட்டங்கள், ரகுநாதராய தொண்டைமான் தஞ்சாவூர் நாயக்க மன்னருக்குச் செய்த பணிகள், தொண்டைமான் புதுக்கோட்டையின் எல்லை, குளத்தூர் தொண்டைமான், நமணதொண்டைமான் மற்றும் அவர்களின் ஆட்சி, குளத்தூர் தொண்டைமான், அவர்களின் ஆட்சிகள் மற்றும் கடைசி காலம்,
ரகுநாதராய தொண்டைமான் ( 1686 – 1730 ), விஜய ரகுநாதராய தொண்டைமான் ( 1730 – 1769), ராய ரகுநாத தொண்டைமான் ( 1769 – 1789 ), ராஜ விஜய ரகுநாத தொண்டைமான் பகதூர் ( 1789 – 1807 ), விஜய ரகுநாத ராய தொண்டைமான் ( 1807 – 1825 ), ராஜ ரகுநாத தொண்டைமான் பகதூர் ( 1825 – 1839 ), ராஜ ராமசந்திர தொண்டைமான ( 1839 – 1886 ), ராஜ மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆகிய தலைப்புகளில் இந்நூல்பேசுகிறது.
புதுக்கோட்டை ஆறுகள்
புதுக்கோட்டையில் ஓடும் ஆறுகளில் முக்கிய ஆறாக வெள்ளாறு விளங்குகிறது. இந்த ஆறு மருங்காபுரி வேழ மலையில் தொடங்கி குடுமியான்மலை, பேரையூர், கடையாக்குடி வழியே ஓடி மணல்மேல்குடிக்கும் அருகில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆறு சோழர்கள் மற்றும் பாண்டியர்களுக்கு எல்லையாக இருந்ததுடன் இந்த ஆறுக்கும் தெற்கு திருமயம் தாலுகா வடக்கு குளத்தூர் மற்றும் ஆலங்குடி தாலுகா இருந்துள்ளது. இந்த ஆறு குறித்து திருப்பெருந்துறைப் புராணம் வெள்ளாற்றுப் படலம் பாடியுள்ளது.
இதுதவிர புதுக்கோட்டை ஆறு நகரத்திலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள கவிநாடு கால்வாயிலிருந்து தோன்றும் குண்டாறு ( சந்திரநதி), பெருந்துறை ஏரியிலிருந்து தோன்றி திருமயம் தாலுகாவில் பெரும்பகுதி ஓடி அறந்தாங்கியையொட்டி வெள்ளாற்றில் கலந்து பிறகு ஐந்து கிளைகளாகப் பிரிந்து சுந்தரபாண்டியபுரத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கும் பாம்பாறு ( சர்பநதி ), அஞ்ஞானவிமோசனியாறு என்று அழைக்கப்படும் அக்னி ஆறு, இந்த ஆறு குளத்தூர் பெருங்குளத்தில் தொடங்கி பெருங்களூர், மழையூர், கரம்பக்குடி வழியாக அதிராம்பட்டினம் அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்திற்கும் மேற்கில் தோன்றி கரம்பக்குடியையொட்டி கிளங்காடு, செங்கமேடு வழியாக ஆலங்குடி பகுதிக்குள் பாய்ந்து அஞ்ஞானவிமோசனியாற்றில் கலக்கும் உய்யக்கொண்டான் ஆறு, மஞ்சன்விடுதி ஏரியிலிருந்து தோன்றி திருவரங்குளம், ஆலங்குடி, வடகாடு, வழியாக வங்காளவிரிகுடா கடலில் கலக்கும் அம்புலியாறு, விராலிமலை நீர்பாசனம் ஏறியிலிருந்து தோன்றி மேற்கு ராஜகிரி குளத்தூர் தாலுகா கிழக்கு கட்டலூர் வழியே உய்யக்கொண்டான் ஆற்றில் கலக்கும் கோரையாறு, குளத்தூர் தாலுகாவில் தோன்றி திருச்சிராப்பள்ளி சமுத்திரம்குளத்தில் காவிரியுடன் கலக்கும் சூரையாறு, என பல ஆறுகளைக் கொண்டது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் உயரமான மலையாக பிரான்மலை திகழ்கிறது. இம்மலை தென்மேற்கு எல்லையாக அமைந்துள்ளது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடிகளைக் கொண்டது. நார்த்தாமலை, குன்றுகளாகக் கொண்ட மலை. புதுக்கோட்டையிலிருந்து மேற்குப் பகுதியில் திருச்சிராப்பள்ளி – புதுக்கோட்டை சாலையில் உள்ளது. ஆளுட்டி மலை, நார்த்தாமலையின் தொடர்ச்சியாக இருக்கும் இம்மலை அம்மாசத்திரத்தில் உள்ளது,..இப்படியான பல தகவல்களைக் கொண்ட இந்நூல் புதுக்கோட்டை சமஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட ஒருவரால் எழுதப்பட்ட முதல் புதுக்கோட்டை பொது வரலாறாகும்.

கருத்துகள்
கருத்துரையிடுக